பட மூலாதாரம், Kiran Sakale
“இந்தியாவில் சிலர் வெறுப்பை விதைக்கின்றனர். இவர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவு. ஆனால் அவர்கள் தினமும் தீயைப் பற்ற வைக்கப் பணியாற்றி வருகின்றனர்.”
இதுதான் குல்டாபாத்தில் தொழில் செய்யும் ஷேக் இக்பால் கூறியது. குல்டாபாத் நகர், சத்ரபதி சம்பாஜி நகரில் இருந்து (முன்னதாக ஒளரங்காபாத்) 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
ஒளரங்கசீப்பின் கல்லறை இந்த நகரில் அமைந்துள்ளது. ஒளரங்கசீப்பின் கல்லறையை இடிக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுப்பெற்று வருகிறது. ஷேக் இக்பால் அந்தப் பகுதியில் பூக்கள் மற்றும் பூஜை பொருட்கள் கடை வைத்திருக்கிறார்.
மார்ச் 13ஆம் தேதி, ஒளரங்கசீப்பின் கல்லறை அமைந்திருந்த பகுதியை நாங்கள் அடைந்தபோது, அங்கு ஏராளமான காவல்துறையினர் இருந்தனர்.
கல்லறையைப் படம் பிடிப்பது தடை செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் எங்களிடம் தெரிவித்தனர். ஒளரங்கசீப் கல்லறையின் நுழைவாயிலில் ஓர் அறிவிப்பு வைக்கப்பட்டிருந்தது.
இது பாதுகாக்கப்பட்ட சின்னம். இதைச் சேதப்படுத்துவோருக்கு இந்திய தொல்லியல் ஆய்வுச் சட்டத்தின் கீழ் 3 மாத சிறை அல்லது 5000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
போலீசார் குவிப்பு
பட மூலாதாரம், Kiran Sakale
காவல்துறையினர் எங்கள் பெயர்கள், செல்போன் எண்கள், முகவரிகள் மற்றும் ஆதார் எண்களைத் தங்களது பதிவேட்டில் எழுதிக்கொண்டனர்.
எங்களிடம் இருந்த செல்போன்கள், பைகள் உள்பட அனைத்து உடைமைகளையும் அவர்கள் எடுத்துகொண்டனர். அதன் பின்னரே கல்லறையைக் காண எங்களை அனுமதித்தனர்.
ஒளரங்கசீப்பின் கல்லறை மிக எளிமையாகக் கட்டப்பட்டுள்ளது. மேலே ஒரு காய்ச் செடி நடப்பட்டிருந்த அந்தக் கல்லறை, மண் மூடியவாறு மட்டுமே இருந்தது. அங்கு எந்த ஆடம்பரமும் இல்லை.
பட மூலாதாரம், Kiran Sakale
கல்லறை அமைந்திருக்கும் பகுதியில் பல கடைகள் உள்ளன. அவற்றில் ஒரு கடை ஷேக் இக்பாலுக்கு சொந்தமானது. அவர் மலர் மாலைகளைக் கட்டி வந்தார்.
ஒளரங்கசீப் பற்றிய தகவல்கள் அரசியல் காரணங்களுக்காகச் சொல்லப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால், ஒளரங்கசீப்பின் கல்லறை இடிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.
இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு ஷேக் இக்பால், “300 ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்தது என்பது அல்லாவுக்கு நன்கு தெரியும். அஃப்சல் கானின் கல்லறை சத்ரபதி சிவாஜி மகராஜ் மற்றும் அவரது சந்ததியினரால் இன்று வரை பாதுகாக்கப்படுகிறது.
அப்படி, ஒளரங்கசீப்பின் கல்லறையும் கடந்த 300 ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது. எனவே அதைத் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்,” என்றார்.
‘சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிக்கும் போக்கு’
பட மூலாதாரம், Shrikant Bangale
இங்குதான் நாங்கள் குல்டாபாத்தின் முன்னாள் மேயர் வழக்கறிஞர் கைஷ்ருதீனை சந்தித்தோம். அவர் சிலருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார்.
தற்போதைய சர்ச்சை குறித்துக் கேட்டபோது, “ஒளரங்கசீப் குறித்து முன்னரும் சர்ச்சை இருந்திருக்கிறது, இது தற்போதும் நடைபெறுகிறது. ஆனால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளைப் பார்க்கும்போது இது அரசியல் ஸ்டண்ட் போலத் தெரிகிறது.
யாரேனும் தலைவராக விரும்பினால் அவர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து ஒரே இரவில் புகழடைந்து கதாநாயகனாகி விடுகின்றனர். இது இன்றைய காலகட்டத்தின் போக்கு,” என்றார்.
உள்ளூர் மக்களிடம் நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, ஒளரங்கசீப்பின் கல்லறையைக் காண சில சுற்றுலாப் பயணிகள் வந்தனர். அவர்களில் சிலர் வெளிநாடுளைச் சேர்ந்தவர்கள். ஆனால் நண்பகல் நேரத்தில் யாரும் இல்லாத நிலை ஏற்பட்டது.
இருப்பினும் குல்டாபாத்தில் சிலர் ஊடகங்களிடம் பேசத் தயாராக இல்லை. “நாங்கள் ஒன்று சொன்னால் ஊடகம் வேறொன்றைக் காட்டுகிகிறது,” என்று அவர்கள் கூறுகின்றனர்.
அவர்களில் ஒருவர் இந்துக்களையும், முஸ்லீம்களையும் ஊடகங்கள் சித்தரிக்கும் விதம் பிடிக்காததால் ஊடகங்களைத் திட்டிவிட்டுச் சென்றார்.
‘அரசியல்வாதிகள் மட்டுமே இந்து-முஸ்லீம் அரசியல் செய்கின்றனர்’
பட மூலாதாரம், Kiran Sakale
அரசியல் தீயை மூட்ட அரசியல்வாதிகள் ஒளரங்கசீப்பை பயன்படுத்துவதாக குல்டாபாத்தை சேர்ந்த ஷேக் சாதிக் குறிப்பிட்டார்.
“உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப இதுபோன்ற கருத்துகளைத் தெரிவிப்பது அரசியல்வாதிகளின் வேலை,” என்றார் அவர்.
“இந்து-முஸ்லீம் அரசியலை அவர்கள்தான்(அரசியவாதிகள்) செய்கிறார்கள். அதைச் செய்யாவிட்டால் அவர்களுக்கு எப்படி வாக்குகள் கிடைக்கும்?
அவர்கள் மதசார்பற்றவை குறித்துப் பேச மாட்டார்கள். அவர்கள் கல்வி முறை, வேலை வாய்ப்பு, தொழில் பற்றியெல்லாம் பேசமாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் இந்து-முஸ்லீம் பற்றிப் பேசுவதால்தான் பலனடைகின்றனர்” என்றார் ஷேக் சாதிக்.
குல்டாபாத்தில் இந்து-முஸ்லீம் ஒற்றுமை
பட மூலாதாரம், Kiran Sakale
குல்டாபாத் மத மற்றும் வரலாற்றுப் பாரம்பரியம் கொண்டது. குல்டாபாத் பழங்காலத்தில் ‘பூமியில் உள்ள சொர்க்கம்’ என அழைக்கப்பட்டது. பத்ர மாருதி இங்குள்ள புகழ்பெற்ற மதத் தலமாகும். குல்டாபாத் பகுதியில் கிரிஜி கோவில், தத் கோவில் ஆகியவையும் அமைந்துள்ளன.
தென் இந்தியாவில் இஸ்லாத்தின் வலிமையான தளமாகவும், சூஃபி இயக்கத்தின் மையமாகவும் உள்ளதால், வெளிநாடுகளில் இருந்தும், நாடு முழுவதும் இருந்தும் சூஃபிக்கள் இங்கு வருகின்றனர். அவர்கள் அனைவரின் கல்லறைகளும் குல்டாபாத்தில் உள்ளது.
குல்டாபாத்தில் இந்து-முஸ்லீம் ஒற்றுமை பரம்பரியமாக இருப்பதாக இஸ்லாமிய தொழிலதிபர்கள் கூறுகின்றனர்.
“குல்டாபாத்தில் 52 பகுதிகள் உள்ளன. பிராமின் வாடா, பில் வாஜா, கும்பர் வாடா, சம்பர் வாடா, டோபி வாடா, சாலி வாடா, இமாம் வாடா ஆகியவை இதில் அடங்கும். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக நல்லிணக்கத்துடன் வாழ்கிறோம்.
சிவ ஜெயந்தி இவ்வழியாகச் செல்லும்போது அவர்களுக்கு மலர்களும், தண்ணீரும் அளித்து அவர்களை வாழ்த்துவோம். உருஸ் வரும்போது அவர்கள்(இந்துக்கள்) எங்களை வாழ்த்துவார்கள். எங்களது பரஸ்பர உறவுகள் மிகவும் அருமையாக உள்ளன” என்கிறார் ஷேக் இக்பால்.
ஷர்ஃபுதீன் ரம்ஜானி, 22 குவாஜா தர்கா கமிட்டியின் தலைவராக 30 ஆண்டுகள் இருந்திருக்கிறார். அவரது அலுவலகம் ஒளரங்கசீப் கல்லறை பார்வையில் படும் இடத்தில் அமைந்துள்ளது.
“குல்டாபாத் மிகப் பழைய கிராமம். இந்துகள் மற்றும் முஸ்லீம்கள் இடையே பெரிய அளவில் ஒற்றுமை இருக்கிறது. நாங்கள் அனைத்து திருவிழாக்களையும் ஒன்றாகக் கொண்டாடுகிறோம். ஷிவ் ஜெயந்தி, அம்பேத்கர் ஜெயந்தி மற்றும் ஹோலியின் போது நாங்கள் அவர்களை வரவேற்கிறோம். ஈத் நாளன்று நாங்கள் அவர்களை அழைப்போம்,” என்றார் அவர்.
தொழில் மீது தாக்கம்
பட மூலாதாரம், Kiran Sakale
கடந்த சில நாட்களில், ஒளரங்கசீப் மற்றும் அவரது கல்லறை குறித்து அரசியல்வாதிகள் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். இது குல்டாபாத்தில் இருக்கும் இந்து, முஸ்லீம் மற்றும் தலித் தொழிலதிபர்கள் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது.
இதைப் பற்றிப் பேசிய வழக்கறிஞர் கைஷ்ருதின், “இந்துக்கள், முஸ்லீம்கள், தலித்துகள் உள்பட குல்டாபாத்தின் மக்கள் தொகை ஒரு லட்சத்து 40 ஆயிரம். இதுபோன்ற சர்ச்சைகள் ஏற்பட்ட போதெல்லாம் இந்த ஒரு லட்சத்து 40 ஆயிரம் இந்துக்கள், முஸ்லீம்கள், தலித்துகள் அல்லது வேறு யாரும் அதைப் பற்றி எந்தக் கருத்தும் தெரிவித்தது இல்லை. இது எங்கள் அதிர்ஷ்டம்” என்றார்.
ஆனால் “இது தொடர்ச்சியாகக் குறிவைக்கப்படும்போது, அது இங்கு இருக்கும் உள்ளூர் மக்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. கோவில்கள், குகைகள், தர்காக்கள் எனப் பல சுற்றுலா தலங்கள் இருப்பதால், 4 முதல் 5 ஆயிரம் இந்து, முஸ்லீம் மற்றும் தலித் இளைஞர்கள் அவற்றில் பணியாற்றுகின்றனர். இது 25 முதல் 30 ஆயிரம் பேரின் வாழ்வாதாரமாக இருக்கிறது. சர்ச்சைக்குரிய கருத்துகளைச் சொல்பவர்கள் சுதந்திரமாகப் பேசலாம், ஆனால் இதனால் உள்ளூர் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்,” என்று கைஸ்ருதீன் தெரிவித்தார்.
ஷேக் இக்பாலை பொறுத்தவரை, வெருல் குகை முதல் ஒளரங்கசீப் கல்லறை வரை பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். ஆனால் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துகள் சுற்றுலாப் பயணிகளை பாதிப்பதுடன் தங்கள் தொழிலையும் பாதிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
உலகப் புகழ் பெற்ற வெருல் குகை குல்டாபாத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
‘இளம் தலைமுறையினர், தவறான ஸ்டேடஸ்களை பதிவிடாதீர்கள்’
பட மூலாதாரம், Kiran Sakale
பிற்பகல் சுமார் 2 மணியளவில் ஷேக் ஷாஜெப் என்ற இளைஞரைச் சந்தித்தோம். 26 வயதான ஷாஜெப் பிற்பகல் பிரார்த்தனைக்காக வந்திருந்தார்.
“நாள் செல்லச் செல்ல, நாங்கள் பார்ப்பது கேட்பது எல்லாம் ஒளரங்கசீப், ஒளரங்கசீப், ஒளரங்கசீப். வேறு கேள்விகளே இல்லையா? அரசியல்வாதிகள் வளர்ச்சியின் மீது கவனம் செலுத்தவேண்டும். அவர்கள் கல்வியின் மீது கவனம் செலுத்தவேண்டும். இது போன்ற சர்ச்சைக்குரிய விஷயத்தில் அதிக அக்கறை செலுத்தாதீர்கள் என இளைஞர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். உங்கள் செல்போனிலும், வாட்ஸ்ஆப்பிலும் யாரைப் பற்றியும் தவறான ஸ்டேடஸ்களை வைக்காதீர்கள். அனைவரும் அமைதியாக இருக்கவேண்டும்,” என்றார்.
ஒளரங்கசீப் பற்றி வாட்ஸ்ஆப் ஸ்டேடஸ் பதிவிட்டதற்காக மகாராஷ்டிராவில் சில பகுதிகளில் சர்ச்சைகள் இருந்திருக்கின்றன.
குல்டாபாத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் ஆட்சியாளர்களிடம் எதிர்பார்ப்பது என்ன?
இந்த கேள்விக்குப் பதிலளித்த ஷேக் இக்பால், “எனது வேண்டுகோள், நமது கங்கை-யமுனை நமது பாரம்பரியம். அது பரமாரிக்கப்பட வேண்டும். நாம் அன்பைப் பற்றி பேச வேண்டும். நாம் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறித்துப் பேசவேண்டும். நாம் மனிதர்கள், நமது மனிதம் நிலைத்திருக்கும்” என்றார்.
ஷர்ஃபுதீன் ரம்ஜானி, “தற்போதைய அரசு வளர்ச்சி குறித்துப் பேச வேண்டும். கல்வி, வேலை வாய்ப்பு, வேலை வாய்ப்பின்மை போன்றவற்றில் அரசு கவனம் செலுத்த வேண்டும். அரசியல்வாதிகள் சர்ச்சைக்குரிய கருத்துகளைச் சொல்லக்கூடாது. எங்கள் கிராமத்தில் அமைதி இருக்கிறது, அது தொடர்ந்து அமைதியாக இருக்கவேண்டும் என விரும்புகிறோம்” என்று தெரிவித்தார்.
ஔரங்கசீப் தனது கல்லறைக்கு குல்டாபாத்தை தேர்வு செய்தது ஏன்?
பட மூலாதாரம், Kiran Sakale
டெல்லியின் பேரரசராக இருந்த ஒளரங்கசீப், அகில்யாநகரில் (அப்போது அகமதுநகர்) உயிரிழந்தார். அவரது உடல் அதன் பிறகு குல்டாபாத்திற்கு கொண்டு வரப்பட்டது.
தனது மரணத்திற்குப் பிறகு தனது சமாதி, ஆன்மீக ஆசான் சையத் ஜைனூதீன் சிராஜியின் சமாதிக்கு அருகில் இருக்க வேண்டும் என்று ஒளரங்கசீப் தனது உயிலில் எழுதியிருந்தார்.
ஒளரங்கசீப் படிக்கும் பழக்கம் கொண்டவர். இதில் அவர் சிராஜியை தொடர்ந்தார். அதன் பின்னர், சிராஜியின் அருகே கல்லறை கட்டப்பட வேண்டும் என ஒளரங்கசீப் தனது உயிலில் எழுதியிருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் சொல்கின்றனர்.
ஒளரங்கசீப்பின் இறப்புக்குப் பிறகு, அவரது மகன் அசம் ஷா அவரது கல்லறையை குல்டாபாத்தில் கட்டினார். ஒளரங்கசீப்பின் கல்லறை அவர் குருவாகக் கருதிய ஜைனுதீன் சிராஜியின் கல்லறைக்கு அருகே அமைந்துள்ளது.
அந்த நேரத்தில் இந்த கல்லறையைக் கட்ட 14 ரூபாய் 12 அணா செலவானதாகச் சொல்லப்படுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு