படக்குறிப்பு, ஔரங்கசீப் ஆட்சிக்குப் பிறகு முகலாய சாம்ராஜ்யம் மெல்ல மெல்ல தன் வலிமையை இழக்க ஆரம்பித்ததுகட்டுரை தகவல்
முகலாயப் பேரரசை சுமார் அரை நூற்றாண்டு காலம் ஆட்சி செய்த பேரரசர் ஔரங்கசீப், வரலாற்றில் ஒரு சர்ச்சைக்குரிய நபராகவே குறிப்பிடப்படுகிறார். அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் என்ன?
முகலாய சாம்ராஜ்யத்தின் வலிமையான கடைசி அரசராக கருதப்படும் ஔரங்கசீப், 1658லிருந்து 1707ஆம் ஆண்டுவரை, சுமார் அரை நூற்றாண்டு காலம் இந்தியாவின் ‘சக்கரவர்த்தியாக’ ஆட்சி செய்தவர். அவருக்குப் பிறகு முகலாய சாம்ராஜ்யம் மெல்ல மெல்ல தன் வலிமையை இழக்க ஆரம்பித்தது.
ஆனால், ஔரங்கசீபின் காலகட்டத்தில் உலகின் மிக முக்கியமான பேரரசுகளில் ஒன்றாக இந்துஸ்தான் இருந்தது. தனது நீண்ட ஆட்சிக் காலத்தில் ஔரங்கசீப் மேற்கொண்ட பல நடவடிக்கைகள், அவரை சர்ச்சைக்குரிய மனிதராக காட்சியளிக்க வைக்கின்றன. உண்மையில் ஔரங்கசீபின் ஆட்சிக் காலத்தில் என்ன நடந்தது?
1618ஆம் ஆண்டு நவம்பர் மூன்றாம் தேதி குஜராத்தில் இருக்கும் தோஹத்தில் முகலாய இளவரசன் குர்ரத்துக்கும் (பிற்காலத்தில் ஷாஜஹான்) அவருடைய மனைவி மும்தாஜுக்கும் பிறந்தார். அப்போது ஷாஜஹான் ஆட்சிக்கு வரவில்லை. ஜஹாங்கீரின் ஆட்சியே நடந்துகொண்டிருந்தது.
ஔரங்கசீப் ஷாஜஹானுக்கு மூன்றாவது மகன். அவருக்கு முன்பாக தாரா ஷுகோ, ஷா ஷுஜா என இரண்டு பேர் பிறந்திருந்தார்கள். ஔரங்கசீபுக்கு அடுத்தும் ஒரு மகன் – முராத்- பிறந்தார். நான்கு பேருக்குமே இளவரசர்களுக்கான கல்வி கிடைத்தது.
ஷாஜஹானுக்குப் பிறகு, அரியணைக்கு யார் வருவது என்ற போட்டி இளவரசர்களுக்குள் இளம் வயதிலேயே துவங்கிவிட்டது. “குடும்பத்தின் எல்லா ஆண் உறுப்பினர்களுக்கும் அரசியல் அதிகாரத்தின் மீது சமமான உரிமை உண்டு” என்ற மத்திய ஆசிய வழக்கத்தையே முகலாயர்கள் பின்பற்றினர் என்கிறார், ஔரங்கசீபின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘ஔரங்கசீப்: தி மேன் அண்ட் தி மித்’ (Aurangazeb: The Man And the Myth) நூலை எழுதிய ஆட்ரே ட்ருஸ்ச்கே. அக்பரின் காலத்தில், இந்த வாரிசு உரிமை வெறும் மகன்களுக்கு மட்டுமானதாக சுருக்கப்பட்டது.
இருந்தபோதும் ஷாஜஹான் தன் மூத்த மகன் தாரா ஷுகோவையே தனக்குப் பின் அரசனாக்க விரும்பினார். இதனால், தாரா ஷுகோவின் கல்யாணம், முகலாயர் வரலாற்றிலேயே எப்போதும் இல்லாத அளவுக்கு 1633ல் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டது.
ஔரங்கசீபின் எதிர்காலத்தை மாற்றிய யானை சண்டை
ஆனால், தாரா ஷுகோவின் திருமணத்துக்கு சில மாதங்களுக்குப் பிறகு நடந்த ஒரு சம்பவம்தான், ஔரங்கசீபின் எதிர்காலத்தை மாற்றியது என்கிறார் ஆட்ரே ட்ருஸ்கே.
யானை சண்டை ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார் ஷாஜஹான். அந்த சண்டையை இளவரசர்களோடு பார்த்துக் கொண்டிருந்தார் அரசர். அப்போது, ஒரு யானை ஔரங்கசீபைப் பார்த்துத் திரும்பியது. அதனை தனது ஈட்டியால் தாக்கினார் ஔரங்கசீப். யானை மேலும் கோபமடைந்து அவரைத் தாக்கத் திரும்பியது. அவர் குதிரையிலிருந்து தள்ளப்பட்டார்.
ஔரங்கசீபின் சகோதரர் ஷுஜா, ராஜா ஜெய் சிங் ஆகிய இருவரும் தலையிட்டு, யானையை வேறு பக்கம் திசைதிருப்பினர். இந்தக் களேபரம் நடந்துகொண்டிருந்தபோது தாரா ஷுகோ கண்ணிலேயே படவில்லை. இந்தத் தருணத்திலிருந்தே ஷாஜஹானின் பார்வை ஔரங்கசீப் மீது படிந்தது.
ஔரங்கசீபுக்கு 16 வயதாகும்போதே அவரை அரச பணிகளில் ஈடுபடுத்த ஆரம்பித்தார் ஷாஜஹான். 1635லிருந்து 1657வரை அவர் பல போர்களில் கலந்துகொண்டதோடு, குஜராத், முல்தான், தக்காணம் ஆகிய பகுதிகளை நிர்வகிப்பதிலும் ஈடுபட்டார்.
இந்த காலகட்டத்தில் தில்லியிலிருந்து வந்த பல உத்தரவுகள், இவரது திறமையை முடக்குவதாகவே இருந்ததாகச் சொல்கிறார் ஆட்ரே. உதாரணமாக, 1650களில் தக்காணப் போரில் வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்தபோது, போரை நிறுத்த ஷாஜஹான் உத்தரவிட்டார். தாரா ஷுகோவின் ஆலோசனையின் அடிப்படையிலேயே இது நடந்தது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஔரங்கசீபுக்கு 16 வயதாகும்போதே அவரை அரச பணிகளில் ஈடுபடுத்த ஆரம்பித்தார் ஷாஜஹான்
தந்தையையே சிறைவைத்த ஔரங்கசீப்
1957 செப்டம்பரில் ஷாஜஹானின் உடல் நலம் குன்றியது. இனி அவர் மீளமாட்டார் எனக் கருதிய நான்கு சகோதரர்களும் அரியணைக்கான போட்டியில் இறங்கினர். தொடர்ந்து நடந்த சண்டைகளின் முடிவில் வெற்றிபெற்ற ஔரங்கசீப், 1658, 1659 என இருமுறை முடிசூடிக் கொண்டார்.
இதற்கு சில மாதங்களுக்குப் பிறகு தாரோ ஷுகோ, முராத் ஆகிய இரு சகோதரர்களுக்கும் மரண தண்டனை விதித்தார். உடல் நலம் மீண்டு கொண்டிருந்த ஷாஜஹான், ஆக்ரா அரண்மனையில் சிறை வைக்கப்பட்டார்.
அரியணையைக் கைப்பற்ற முகலாய சகோதரர்கள் சண்டையிட்டுக் கொள்வது வழக்கம்தான் என்றாலும், ஆட்சியில் இருக்கும் சக்கரவர்த்தியையே சிறைவைப்பது அதற்கு முன் நடந்திராத ஒன்று. இதனை பலர் விமர்சித்தும் ஔரங்கசீப் கண்டுகொள்ளவில்லை. கிட்டத்தட்ட ஏழரை ஆண்டுகள் ஆக்ரா அரண்மனையிலேயே சிறைப்பட்டு இறந்துபோனார் ஷாஜஹான்.
தனது நீண்ட ஆட்சிக் காலம் முழுக்க கலகங்களை ஒடுக்குவது, போர்களை நடத்தி பேரரசை விரிவுபடுத்துவது, நிர்வாகத்தைச் சீர்செய்வதிலேயே அவரது காலம் கழிந்தது. தன் ராஜ்ஜியத்துக்கு அச்சுறுத்தல் எனக் கருதுபவர்களை முதலில் ராஜதந்திர ரீதியாக தனது பிடிக்குள் கொண்டுவர முயன்றார் ஔரங்கசீப். அது முடியாதபோது, ராணுவ பலத்தால் அவர்களை அடக்க முயல்வார். பல சமயங்களில் கொடூரமாக நடந்துகொள்ளவும் அவர் தயங்கியதில்லை என்கிறார் ஆட்ரே.
1681ல் தக்காணத்தை நோக்கி நகர ஆரம்பித்தார் ஔரங்கசீப். அக்பரின் காலத்திலிருந்தே தெற்கில் சில வெற்றிகள் கிடைத்திருந்தாலும் அதை முழுமையாக்க நினைத்தார் அவர். இதனால், தன் ஆட்சிக் காலத்தின் பிற்பகுதி முழுவதையும் தெற்கில்தான் செலவழித்தார் ஔரங்கசீப். 1680களில் பீஜபூர், கோல்கொண்டாவை பிடித்த அவர், தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்தார். தமிழ்நாட்டின் வட பகுதியிலிருந்த சில பகுதிகளை மராத்தியர்களிடமிருந்து பிடித்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 1680களில் பீஜபூர், கோல்கொண்டாவை பிடித்த ஔரங்கசீப், தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்தார்
தனது ஆட்சியின் முதல் பத்தாண்டுகளில் முந்தைய முகலாய அரசர்களின் வழக்கத்தையே பின்பற்றிய ஔரங்கசீப், பிற்காலத்தில் அதிலிருந்து மாறுபடலானார். இந்து மதப் பின்னணியுடன் கூடிய அரசவை வழக்கங்களை நிறுத்தினார். இசைக்கு அளித்துவந்த ஆதரவு நிறுத்தப்பட்டது. அரசவை வரலாற்றாசிரியரை நீக்கினார்.
பொதுமக்களுக்கு தரிசனம் அளிக்கும் முறையை 1669ல் நிறுத்தினார். தனது பிறந்த நாளுக்கு வெள்ளியையும் தங்கத்தையும் நிறுத்தி, அவற்றை தானமாக அளிக்கும் முறையை நிறுத்தினார்.
1679ல் தில்லியை விட்டு வெளியேறிய ஔரங்கசீப், மீண்டும் தில்லிக்குத் திரும்பவேயில்லை. ஔரங்கசீபின் ஆட்சியில் உறவினர்களுக்கு பதவிகள் கொடுக்கப்பட்டன என்றாலும், பொறுப்புகளை சரியாக நிறைவேற்றவில்லையென்றால் அவர் இரக்கம்காட்டவேயில்லை. சாதாரணமானவர்களுக்கு அளிக்கும் தண்டனையைவிட கூடுதல் தண்டனைகள் விதிக்கப்பட்டன. 1681ல் இவருடைய மகன் அக்பர் தன்னை சக்கரவர்த்தியாக பிரகடனம் செய்துகொண்டார்.
ஆனால், அவரை நாட்டை விட்டே துரத்தினார் ஔரங்கசீப். அவர் பெர்ஷியாவுக்குத் தப்பிச் சென்று அங்கேயே இறந்துபோனார். தனது எதிரிகளிடமும் மிகக் கொடூரமாக நடந்துகொண்ட வரலாறும் உண்டு. ஆனால், இம்மாதிரி தண்டனைகளுக்கு மதம் சார்ந்த காரணங்களைவிட, முகலாயப் பேரரசை எதிர்ப்பவர்கள் என்ற காரணமே இருந்தது என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள்.
ஔரங்கசீபிடம் பல இந்துக்கள் முக்கியப் பணிகளைச் செய்துவந்தனர். குறிப்பாக ஷாஜஹானின் அரசில் நிதியமைச்சராக இருந்த ராஜா ரகுநாதர், ஔரங்கசீபிடமும் பணியாற்றினார். அவருக்கு திவானி என்ற பதவி வழங்கப்பட்டது. வேறு பல இந்துக்களும் அவரிடம் பணியாற்றினர். தனது ஆட்சியின் கீழ் உள்ள பகுதிகளில் மது, ஓபியம், பாலியல் தொழில் போன்றவற்றுக்கு அவர் தடை விதித்தார்.
பட மூலாதாரம், PENGUIN INDIA
ஔரங்கசீப் ஆட்சிக் காலத்தில் பல இந்து, ஜைனக் கோவில்கள் அவரது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்தன. இந்துக்களைப் பொறுத்தவரை, இஸ்லாமியச் சட்டத்தின் அடிப்படையில் அவர்களுக்கு அவர் பாதுகாப்பை வழங்கினார். ஆனால், ஏதாவது ஒரு வழிபாட்டுத் தலம், தனது நிர்வாகத்துக்கும் அதிகாரத்துக்கும் எதிராக இருந்தது என்றால் அவற்றை அழிக்க உத்தரவிட அவர் தயங்கவில்லை. ஒரு இஸ்லாமியராக, இந்துக் கோவில்களை அழித்தார் என்று பார்க்கும் பார்வை சரியானதல்ல என்கிறார் ஆட்ரே.
ஔரங்கசீபின் இறுதிக் காலம் போர்களால் நிரம்பியதாக இருந்தது. முகலாய சாம்ராஜ்யத்தின் எதிர்காலம் குறித்த கவலைகளும் அவருக்கு இருந்தன. அவரது இறுதிக் காலத்தில், மூன்று மகன்கள் உயிரோடு இருந்தாலும், யாரும் எதிர்கால சக்கரவர்த்தியாக இருக்கத் தகுதியானவர்களாக அவர் கருதவில்லை.
1707ஆம் ஆண்டின் துவக்கத்தில் அகமதுநகரில் முதுமையால் காலமானார் ஔரங்கசீப். மகாராஷ்டிராவின் குல்தாபாதில் இருக்கும் ஒரு சூஃபி துறவியின் இடத்தில் மிக எளிமையான முறையில் அடக்கம் செய்யப்பட்டது.
ஔரங்கசீபுக்குப் பிறகு அவரது இரண்டாவது மகன் முவாஸாம், தனது மற்ற சகோதரர்களைக் கொன்றுவிட்டு பகதூர் ஷா என்ற பெயரில் சக்கரவர்த்தியானார். அப்போதே முகலாய சாம்ராஜ்ஜியம் சரிவை சந்திக்க ஆரம்பித்திருந்தது. 1712ல் பகதூர் ஷா இறந்துபோனார். அதற்குப் பிறகு முகலாய சாம்ராஜ்யத்தின் சரிவு மிக வேகமாக இருந்தது.