• Fri. Feb 7th, 2025

24×7 Live News

Apdin News

கங்கைகொண்டான் சிப்காட்டில் ரூ.6,374 கோடியில் சோலார் தொழிற்சாலைகள்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் | cm stalin inaugurates solar factories in nellai

Byadmin

Feb 7, 2025


திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் ரூ. 3,800 கோடி முதலீட்டில் டாடா குழுமத்தின் சோலார் தொழிற்சாலையில் உற்பத்தியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.2,574 கோடி முதலீட்டில் விக்ரம் சோலார் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். இந்த 2 தொழிற்சாலைகள் மூலம் 6,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கள ஆய்வு மேற்கொண்டு வரும் முதல்வர் ஸ்டாலின், திருநெல்வேலி மாவட்டத்தில் 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், கங்கைகொண்டானில் உள்ள சிப்காட் வளாகத்தில் ரூ.3,800 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள டாடா குழுமத்தின் சோலார் நிறுவனத்தில் உற்பத்தியை முதல்வர் நேற்று தொடங்கி வைத்தார்.

4.3 ஜிகாவாட் திறனுள்ள இந்த தொழிற்சாலை, இந்தியாவில் மிகப்பெரிய ஒருங்கிணைந்த சோலார் செல் மற்றும் மாடுலர் உற்பத்தி ஆலை ஆகும். இதன்மூலம் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இங்கு பெண்களுக்கு 80 சதவீத வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. பெண்கள் தங்குவதற்கான விடுதிகளும் இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

ரத்தன் டாடா படத்துக்கு மரியாதை: டாடா பவர் சோலார் நிறுவனத்தில் உற்பத்தியை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரான மறைந்த ரத்தன் டாடா உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொழிற்சாலையின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டார். அங்கிருந்த பெண் பணியாளர்களுடன் கலந்துரையாடி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். அங்கு வைக்கப்பட்டிருந்த சோலார் பேனலில், ‘வாழ்த்துகள்’ என்று எழுதி கையெழுத்திட்டார்.

விழாவில், டாடா குழும தலைவர் என்.சந்திரசேகரன் காணொலி வாயிலாக பேசியபோது, ‘‘நவீன தொழில்நுட்பத்துடன் இந்த சோலார் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த பகுதியில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. பெண்களை தொழில் முனைவோராக்கும் வகையில் இங்கு 80 சதவீதம் பெண்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த தொழிற்சாலையை 8 ஜிகாவாட் உற்பத்தி திறன் கொண்டதாக விரிவாக்கம் செய்யவும் திட்டம் உள்ளது. சோலார் தொழிற்சாலை இங்கு அமைவதற்கு அனைத்து உதவிகளையும் வழங்கிய தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி’’ என்றார்.

விக்ரம் ஆலைக்கு அடிக்கல்: கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் விக்ரம் சோலார் நிறுவனம் சார்பில் ரூ.3,125 கோடி முதலீட்டில் அமைக்கப்படும் சோலார் தொழிற்சாலைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த ஆலை மூலம் 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிகளில், சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, டிஆர்பி. ராஜா மற்றும் ராபர்ட் புரூஸ் எம்.பி., எம்எல்ஏக்கள் அப்துல்வகாப், ரூபி மனோகரன், நயினார் நாகேந்திரன், வர்த்தக துறை செயலர் அருண்ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தாரேஸ் அகமது, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன், டாடா பவர் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பிரவீன் சின்ஹா, தலைமை செயல் அலுவலர் டிபேஷ் நந்தா, விக்ரம் சோலார் நிறுவன தலைவர் ஹரிகிருஷ்ண சவுத்ரி, தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கியானேஷ் சவுத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



By admin