• Wed. Jun 17th, 2026

24×7 Live News

Apdin News

கடத்திச் சென்று தாக்கப்பட்ட 16 வயது சிறுவன் | காணொளி வைரல் | சம வயதுடைய சிறுவன் கைது

Byadmin

Jun 17, 2026


ஏறாவூரில் வீதியில் தனியாக சென்றுகொண்டிருந்த 16 வயது சிறுவனை ஒரு கும்பல் கடத்திச் சென்று தாக்கியமை தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளிவந்த காணொளியையடுத்து, சிறுவனின் தாயார் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் 16 வயது சிறுவன் ஒருவனை நேற்று திங்கட்கிழமை (15) கைது செய்துள்ளதாகவும் ஏனையவர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி தளவாய் பிரதேசத்தில் 15, 16, 17 வயதுகளையுடைய சிறுவர்கள் அடங்கிய வாள்வெட்டுக் கும்பல்கள் மூன்று இயங்கி வருகின்றன.

இந்த கும்பல்களை அந்த பகுதியைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவர் இயக்கி வருவதாகவும் இந்த கும்பல்கள் மோட்டார் சைக்கிளில் வாள் மற்றும் கோடரியுடன் திரிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் நோன்பு பெருநாள் காலத்தில் இரவில் நடைபெற்ற இசைக்குழுவை பார்வையிட்டு வீடு திரும்பிய ஒரு கும்பல் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய சம்பவமும் பதிவாகியிருந்தது.

இந்த நிலையில் தாக்குதலுக்குப் பழிவாங்க, ஒரு கும்பலைச் சேர்ந்த நபர், வீதியால் தனியாக சென்றபோது மற்ற கும்பலைச் சேர்ந்தவர்கள் அவரை கடத்திச் சென்று, மனித நடமாட்டம் இல்லாத இடத்தில், மரத்தில் தலைகீழாக கட்டி ஆடைகளை கலைந்து தாக்குதல் நடத்தி வந்துள்ளனர்.

கும்பல்களுக்குள் இந்த மோதல் இடம்பெற்று வந்துள்ள நிலையில், குறித்த சிறுவனை கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் கடத்திச் சென்று தாக்கியுள்ளனர்.

அதனையடுத்து தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று, பின் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியபோது எடுக்கப்பட்ட காணொளிக் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளிவந்ததையடுத்து பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் நேற்று திங்கட்கிழமை (15) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்தார்.

அதனையடுத்து, காணொளிக் காட்சி ஆதாரத்தை வைத்து தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவனை பொலிஸார் கைது செய்தனர். அதனுடன் தொடர்புடைய 3 பேர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

By admin