• Sat. Nov 16th, 2024

24×7 Live News

Apdin News

கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும்போது அக்டோபர் வரை கூடுதலாக ரூ.9,229 கோடி வருவாய் ஈட்டி வணிகவரி துறை சாதனை: அமைச்சர் பி.மூர்த்தி | 9229 Crores revenue is a record for commercial tax department

Byadmin

Nov 12, 2024


சென்னை: வணிகவரித் துறை வருவாயை கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும்போது அக்டோபர் வரை ரூ.9,229 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை அலுவலகக் கூட்டரங்கில் இந்தாண்டு அக்டோபர் மாதத்துக்கான இணை ஆணையர்களின் பணித்திறன் ஆய்வுக்கூட்டம் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. அப்போது அமைச்சர் கூறியதாவது:

வணிகவரித் துறையில் கடந்த 2023-24 நிதி ஆண்டின் முதல் 7 மாதங்கள் அதாவது அக்டோபர் வரை ரூ.70,543 கோடி வருவாய் கிடைத்தது. நிகழும் 2024-25 நிதி ஆண்டில் ரூ.79,772 கோடியாக உயர்ந்துள்ளது. இதன்படி கடந்த நிதி ஆண்டின் வருவாயுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் அக்டோபர் மாதம் வரை கூடுதலாக ரூ.9,229 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

மேலும் ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சி இந்திய அளவில் 11.59 சதவீதமாகவும், தமிழகத்தில் ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சி 19.39 சதவீதமாகவும் உள்ளது. இணை ஆணையர்கள் நவீன தொழில்நுட்பம் மற்றும் தரவுகளை பயன்படுத்தி வணிகவரித் துறையின் வருவாயை மேலும் கூட்டுவதற்கு உள்ள சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து அவற்றை செயல்பாட்டுக்கு கொண்டுவர ஆக்கப்பூர்வமாக செயலாற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் பிரஜேந்திர நவ்நீத், வணிகவரித் துறை ஆணையர் டி.ஜகந்நாதன், இணை ஆணையர் (நிர்வாகம்) துர்காமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



By admin