கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கத்துடன் கடந்த 4 ஆண்டுகளில் 67,200 இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தீன்தயாள் உபாத்யாய கிராமப்புறத் திறன் பயிற்சித் திட்டத்தின் கூடுதல் இயக்குநர் ஆர்.சங்கர் தெரிவித்துள்ளார்.
கிராமப்புற இளைஞர்கள், குறிப்பாக வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களில் உள்ள இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கத்துடன் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் ஒரு பகுதியாக தீன்தயாள் உபாத்யாய கிராமப்புறத் திறன் பயிற்சித் திட்டம் (DDU-GKY) கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டம் மத்திய அரசின் 60 சதவீத நிதியுடனும், மாநில அரசின் 40 சதவீத நிதியுடனும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், கிராமப்புறத்தில் 18 முதல் 35 வயதுகுட்பட்ட இளைஞர்களுக்கு குறுகிய கால திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு, வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுகின்றன.
அதன்படி 3 மாதம் முதல் 6 மாத காலம் வரையில் சுகாதாரப் பணியாளர், செவிலியர், சிஎன்சி ஆப்பரேட்டர், ட்ரோன் ஆப்பரேட்டர், எலெக்ட்ரீசியன், கணினி உதவியாளர், முன் அலுவலக உதவியாளர், ஜேசிபி ஆப்பரேட்டர், பிபிஓ போன்ற 200 வகையான பணிகளுக்கு தமிழகம் முழுவதும் இலவசமாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பயிற்சிகளின் போது இளைஞர்களுக்கு தங்குமிட வசதி, யூனிபார்ம், பயிற்சி உபகரணங்கள் உள்ளிட்டவையும் அரசின் சார்பில் இலவசமாக வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் தீன்தயாள் உபாத்யாய கிராமப்புறத் திறன் பயிற்சித் திட்டமானது, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஸ்ரேயா பி சிங் தலைமையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் பயன்பாடு குறித்து, தீன்தயாள் உபாத்யாய கிராமப்புறத் திறன் பயிற்சித் திட்டத்தின் கூடுதல் இயக்குநர் ஆர்.சங்கர் கூறியதாவது: தீன்தயாள் உபாத்யாய கிராமப்புறத் திறன் பயிற்சித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள ஏ2பி, டஃபே, மேன்பவர், பிவிஜி உள்ளிட்ட 144 முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு துறைகளில் இளைஞர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் இந்நிறுவனங்களின் மூலம் ரூ.251 கோடியில் 84 ஆயிரம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு 67,200 பேருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 40,155 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கி தரப்பட்டுள்ளன. மேலும் குறிப்பிடும்படியாக இதில் 72 பேருக்கு சிங்கப்பூர், சவுதி, குவைத் போன்ற வெளிநாடுகளில் வேலை கிடைத்து பணியாற்றி வருகின்றனர்.
பயிற்சி முடித்த இளைஞர்களுக்கு மத்திய அரசின் நிறுவனம் மூலமாக சான்றிதழும் வழங்கப்படுவது கூடுதல் சிறப்பாகும். இதற்கிடையே பணிக்கு தேர்வான இளைஞர்கள் பயிற்சி நிறுவனங்கள் மூலம் ஓராண்டு காலத்துக்கு காண்காணிக்கப்பட்டு, தொடர்ந்து பணியில் இருப்பதை உறுதிசெய்கின்றனர். இத்துடன் முதல் 6 மாத காலத்துக்கு சம்பளத்துடன் மாதந்தோறும் ரூ.1000 மானியமும், செல்போன் அலவன்ஸ் தொகையும் அரசு தரப்பில் இருந்து வழங்கப்படுகிறது. பயிற்சியின்போது திறன் பயிற்சியுடன் கூடுதலாக ஆங்கிலத்தில் உரையாற்றுவது, நேர்காணலுக்கு தயார் செய்வது உள்ளிட்ட மென் திறன் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
இதற்காக ஒவ்வொரு மாவட்டங்களிலும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் இளைஞர் திறன் திருவிழாக்கள் நடத்தப்பட்டு, இளைஞர்கள் இந்த பயிற்சிகளில் சேர்க்கப்படுகின்றனர். அதன்படி ஓராண்டுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் 4 அல்லது 5 இளைஞர் திறன் திருவிழாக்கள் என மொத்தம் ஆண்டுக்கு 100 திறன் திருவிழாக்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்படுகின்றன. இதுதவிர கிராமங்களில் இருக்கும் வறுமை ஒழிப்பு சங்கங்களில் உள்ள இளைஞர் திறன் பதிவேட்டில் பதிவு செய்யும் இளைஞர்களுக்கும் திறன் திருவிழாக்களில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்படுகிறது.
அதேபோல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள ‘கவுசல் பஞ்சி’ என்ற செயலியிலும், 155330 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டும் பதிவு செய்து, இளைஞர்கள் இந்த திறன் பயிற்சிகளை பெற்றுக்கொள்ளலாம். இந்த பயிற்சிகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுவதுடன், இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் பயிற்சி நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் அரசு மானியமாகவும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் அடுத்தகட்டமாக தீன்தயாள் உபாத்யாய கிராமப்புறத் திறன் பயிற்சித் திட்டம் 2.0 செயல்படுத்தப்பட்டு, அதன் கீழ் 2025-26 நிதியாண்டில் 4,200 பேருக்கு முதல்கட்ட பயிற்சி அளிக்கவும் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில் திட்டத்தின் மாநில திட்ட மேலாளர் ஜி.குமரன் உடனிருந்தார்.