• Sat. Nov 16th, 2024

24×7 Live News

Apdin News

கடற்கரை – வேளச்சேரி மார்க்கத்தில் பார்க் டவுன் ரயில் நிலையத்தில் மின்சார ரயில்கள் நின்று செல்ல தொடங்கின | Electric trains started running at Parktown railway station

Byadmin

Nov 12, 2024


சென்னை: சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் மார்க்கத்தில், பார்க் டவுன் ரயில் நிலையத்தில் மின்சார ரயில்கள் நின்று செல்வதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்

சென்னை எழும்பூர் – கடற்கரை வரை 4-வது பாதை அமைக்கும் பணி காரணமாக, சென்னை கடற்கரை – சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரயில் சேவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதனால், அரக்கோணம் மற்றும் திருவள்ளூர் பகுதிகளிலிருந்து நேரடியாக பறக்கும் ரயில் மார்க்கத்தில் மின்சார ரயில் சேவை பெற முடியாமல் பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். இந்த மார்க்கத்தில் ரயில் சேவை விரைவில் தொடங்க பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதற்கிடையில், 14 மாதங்களுக்குப் பிறகு, கடற்கரை – வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கியது. இதனால், பயணிகள் உற்சாகமடைந்தனர். இருப்பினும், பார்க் டவுன் நிலையத்தில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றதால், அந்த நிலையத்தில் அடுத்த அறிவிப்பு வரும் வரை மின்சார ரயில்கள் நிறுத்தப்படாது என்று ரயில்வே நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பயணிகள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.

இந்நிலையில், கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் மார்க்கத்தில் பார்க் டவுன் நிலையத்தில் மின்சார ரயில்கள் நேற்று காலை முதல் (நவ.11) நின்று செல்லத் தொடங்கின. இந்த ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, நடைமேம்பாலம், டிக்கெட் பதிவு அலுவலகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

போதுமான மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளுக்கான வசதிகள் ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, இந்நிலையத்தில் மின்சார ரயில்கள் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



By admin