2
பனி மற்றும் உறைபனி காரணமாக இங்கிலாந்தின் பல பகுதிகளில் நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்த குளிர்காலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் குளிர் பதிவாகியுள்ளது.
நார்ஃபோக் மாநிலத்தின் மார்ஹம் பகுதியில் -12.5 டிகிரி செல்சியஸ் என்ற மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஆர்க்டிக் காற்று தாக்கம் தொடர்ந்து நிலவுவதால், இன்று செவ்வாய்க்கிழமை (06) பயணிகள் ரயில் மற்றும் வீதிப் போக்குவரத்தில் இடையூறு ஏற்படலாம் என்றும், மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுவரை கடும் குளிரிலிருந்து தப்பித்திருந்த தென் கிழக்கு மற்றும் மத்திய இங்கிலாந்து பகுதிகளில், வியாழன் மற்றும் வெள்ளி நாட்களில் பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்படலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு ஸ்காட்லாந்தின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு வரை “அம்பர்” எச்சரிக்கை அமலில் உள்ளது. இதற்கு மேலாக, ஐக்கிய இராச்சியத்தின் பெரும்பாலான பகுதிகளில் காலை 11 மணி வரை “மஞ்சள்” எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளில் 5 முதல் 10 செ.மீ வரை கனமான பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது. சில இடங்களில் 15 செ.மீ வரை பனி பெய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்து ஹைலாண்ட்ஸ் பகுதியில் உள்ள டல்வின்னி நகரில் -11.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மின்சாரம் துண்டிக்கப்படும் வாய்ப்பு உள்ளதால், மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த குளிர் காரணமாக பாடசாலைகள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. வேல்ஸ் பகுதியில் மட்டும் 330க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. வடக்கு அயர்லாந்தில் 170க்கும் அதிகமான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.