0
வட இந்தியாவில் நிலவும் கடும் குளிர் மற்றும் மூடுபனி காரணமாக டெல்லி நகரில் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக சுமார் 100 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டதுடன், 200க்கும் அதிகமான விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருவதுடன், வீதிகளில் எதிரில் உள்ளவை தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் வீதிப் போக்குவரத்துடன் சேர்ந்து விமான சேவைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் சார்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி, 48 விமானங்களின் வருகையும், 49 விமானங்களின் புறப்பாடும் இரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 200க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான சேவைகளில் மாற்றங்கள் ஏற்படக்கூடிய சூழல் நிலவுவதால், பயணிகள் தங்களின் பயண நேரம் மற்றும் விமான நிலவரங்களை புறப்படும் முன் சரிபார்க்குமாறு விமான நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. இது தொடர்பாக இந்திய விமான நிலைய ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், வட இந்தியாவின் சில பகுதிகளில் மூடுபனி காரணமாக விமானங்கள் தாமதமடையலாம் அல்லது மாற்றங்கள் ஏற்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
டெல்லி விமான நிலையம் வழக்கம்போல் செயல்பட்டு வருவதாகவும், புதுப்பிக்கப்பட்ட விமான அட்டவணைகள் குறித்து பயணிகள் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களை தொடர்புகொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.