• Sun. Jan 26th, 2025

24×7 Live News

Apdin News

கட்சி தொடங்கியதுமே சிலர் ஆட்சிக்கு வர துடிக்கின்றனர்: விஜய் பற்றி முதல்வர் ஸ்டாலின் மறைமுக விமர்சனம் | As soon as the party started, some people were eager to come to power: cm stalin

Byadmin

Jan 25, 2025


திமுக 1949-ல் தொடங்​கினாலும் தேர்தல் களத்​துக்கு 1957-ல் தான் வந்தது. ஆனால் சிலர் சிலர் கட்சி தொடங்​கியதுமே ஆட்சிக்கு வர துடிக்​கின்​றனர் என தவெக தலைவர் விஜய் குறித்து முதல்வர் மு.க.ஸ்​டா​லின் மறைமுகமாக விமர்​சனம் தெரி​வித்​துள்ளார்.

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நாம் தமிழர் உள்ளிட்ட மாற்று கட்சியைச் சேர்ந்த ஒரு மண்டலச் செயலாளர், 8 மாவட்டச் செயலாளர்கள், 5 ஒன்றிய செயலாளர்கள், 9 சார்பு அணி நிர்வாகிகள், 6 தொகுதி செயலாளர்கள், 3 எம்.பி. வேட்பாளர்கள், 6 எம்எல்ஏ வேட்பாளர்கள் என 1000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி ஏற்பாட்டில் நேற்று நடைபெற்றது.

இதில் பங்கேற்ற முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு மாற்று கட்சி நிர்வாகிகள் சார்பில் பெரியார் சிலை பரிசளிக்கப்பட்டது. தொடர்ந்து நிர்வாகிகளை கட்சித் துண்டு அணிவித்தும், உறுப்பினர் படிவம் வழங்கியும் முதல்வர் வரவேற்றார்.

அதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது: இயக்கத் தலைமை முறையாக இல்லை, அதை நம்பி செல்வது தாயகத்துக்குச் செய்யும் துரோகம் என முடிவெடுத்து திமுகவில் இணைந்துள்ளனர். அவர்களை திமுக சார்பில் வரவேற்கிறேன். திமுக என்பது நேற்று முளைத்த காளான் அல்ல. 1949-ல் தொடங்கி, 1957-ம் ஆண்டு தேர்தல் களத்தில் ஈடுபட்டோம். ஆனால், சில கட்சிகள் தொடங்கியவுடனே ஆட்சிக்கு வருவோம் என கூறும் நிலை நாட்டில் இருக்கிறது. யார், எந்த கட்சி என்பதையெல்லாம் நான் சொல்ல விரும்பவில்லை.

திராவிட மாடல் என்று சொன்னாலே சிலருக்கு கோபம் வருகிறது. திராவிடத்துக்கு எதிராகவும், மதத்தை வைத்தும் ஆளுநர் பேசுகிறாரே என்றெல்லாம் வருத்தமுண்டு. அவர் பேச பேசத்தான் நமக்கான ஆதரவு அதிகரிக்கிறது. எனவே, ஆளுநரை மாற்ற வேண்டாம் என பிரதமரிடமும், உள்துறை அமைச்சரிடமும் வேண்டுகோள் வைக்கிறோம்.

வாரத்துக்கு 2 நாட்கள் மாவட்டவாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன். அப்போதெல்லாம் கிடைக்கும் வரவேற்பை வைத்தே, 7-வது முறையாக திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்பதை உறுதியாக சொல்கிறேன். ஒவ்வொரு வீட்டிலும் திமுக ஆட்சியின் பலனை மக்கள் அனுபவித்து வருகிறார்கள். கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில்கூட காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய நமது சாதனைகளை தமிழக மக்களும் புரிந்து கொண்டுள்ளனர். அதை தேர்தல் சமயத்தில் நினைவுபடுத்தினாலே 234 தொகுதிகளிலும் திமுகவே வெற்றி பெறும் சூழல் ஏற்பட்டு விடும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

துணை முதல்வர் உதயநிதி பேசும்போது, “தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சியை எதிர்த்து எதிரணியினர் திரளுவார்கள். ஆனால், எதிர்க்கட்சியில் இருப்போர் ஆளுங்கட்சியில் இணைவதன் மூலமாகவே தேர்தல் முடிவுகளை இப்போதே அறிய முடிகிறது. தமிழக அடையாளங்களை அழிக்க முயற்சிக்கும் ஆளுநரை தட்டிக் கேட்காமல், பேரவையில் நாங்கள் பேசுவதைக் காட்டாவிட்டாலும் ஆளுநர் வந்து போவதையாவது தொலைக்காட்சியில் காட்ட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை வைக்கிறார். திமுகவில் புதிதாக இணைந்தவர்கள் மேலும் பலரை இணைக்க வேண்டும். அனைவரது உழைப்புக்கான அங்கீகாரம் தக்க நேரத்தில் தலைவரால் வழங்கப்படும்” என்றார்.

அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, “மக்களை திசை திருப்புவோர் தலைவர்கள் அல்ல, அவர்கள் தரம் தாழ்ந்த பிம்பங்கள். நம்மைப் பற்றி நமக்கே அறிய வைத்தவர் பெரியார். அவரை எதிர்த்து பேசும் அளவுக்கு சில இழிநிலை பிறவிகள் உருவாகியிருக்கின்றனர்” என்றார். இந்நிகழ்வில், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

துணைமுதல்வர் உதயநிதி ‘ட்வீட்’: இதற்கிடையே, துணை முதல்வர் உதயநிதியின் சமூக வலைதள பக்கத்தில், “தமிழ் மண்ணை, பண்பாட்டை, தமிழர் உரிமைகளைக் காக்கும் திமுகவில், மாற்றுக்கட்சியினர் 3,000 பேர் இணைந்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.



By admin