0
சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கிலப் பாட நூல் தொடர்பாக, தேசிய கல்வி நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் தர்ஷன சமரவீர கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக தேசிய கல்வி நிறுவனத்தின் மேலும் இரண்டு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக, தரம் 6 ஆங்கிலப் பாடநூல் குறித்த விசாரணை நிறைவடையும் வரை, தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரண தனது பதவியிலிருந்து விலகத் தீர்மானித்திருந்தார். புதிதாக அச்சிடப்பட்ட தரம் 6 ஆங்கில மொழிப் பாட நூலில் பொருத்தமற்ற இணையதள முகவரி ஒன்று இடம் பெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அதன் விநியோகத்தை நிறுத்தி வைப்பதாகக் கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.
குறித்த பாட நூலில் பொருத்தமற்ற இணையதளப் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. சர்ச்சைக்குரிய இந்தப் பாடப்புத்தகம் தேசிய கல்வி நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு ஏற்கனவே அச்சிடப்பட்டிருந்தது.
இதற்கிடையில், இச்சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவௌ இது தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கடந்த வாரம், தரம் 6 மாணவர்களுக்காக முன்மொழியப்பட்ட கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதை 2027 ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்தது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். தரம் 6 ஆங்கிலப் பாட நூல் தொடர்பான சிக்கல்கள் மற்றும் ஏனைய பல விடயங்களைக் கருத்திற்கொண்டு, இந்த ஆண்டு தரம் 6 மாணவர்களுக்கான கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.