0
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்ற நிலையைத் தொடர்ந்து, கட்டாரில் அமைந்துள்ள Al-Udeid Air Base இராணுவ தளத்தில் பணியாற்றி வந்த சில அமெரிக்க மற்றும் இங்கிலாந்து இராணுவ வீரர்களை அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் வாபஸ் பெறத் தொடங்கியுள்ளன. ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்களை கடுமையாக அடக்கி வரும் சூழலில், ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமா என்பதை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பரிசீலித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க ஊடகமான CBS-க்கு அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி, இது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்படும் ஒரு பகுதி வாபஸ் பெறுதல் ஆகும். இதேபோல், சில இங்கிலாந்து இராணுவ பணியாளர்களும் அங்கிருந்து அகற்றப்பட்டு வருவதாக BBC தெரிவித்துள்ளது. கட்டார் அரசு வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கா மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைகள் தற்போதைய பிராந்திய பதற்றங்களை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டவை என கூறப்பட்டுள்ளது
இதற்கிடையில், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் செயல்பட்டு வந்த இங்கிலாந்து தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக UK Foreign Office அறிவித்துள்ளது. தற்போது அந்த தூதரகம் தொலைநிலை முறையில் செயல்படும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில், தோஹாவில் உள்ள அமெரிக்க தூதரகம், தனது பணியாளர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்கவும், அல்-உதேய்த் இராணுவ தளத்திற்கு அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளது.
மனித உரிமை அமைப்புகளின் தகவலின்படி, ஈரானில் சமீப காலமாக நடைபெற்று வரும் அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்கியதில் 2,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த பின்னணியில், கத்தார் அரசு, தனது குடிமக்கள் மற்றும் நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்களின் பாதுகாப்பே முதன்மை என்றும், முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் இராணுவ தளங்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகத்தின் பேச்சாளர், பாதுகாப்பு காரணங்களால் இங்கிலாந்து படையினர் வாபஸ் பெறப்பட்டதாக கூறப்படும் தகவல்களை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவ தளமாக அல்-உதேய்த் தளம் கருதப்படுகிறது. இங்கு சுமார் 10,000 அமெரிக்க இராணுவ வீரர்களும், 100-க்கும் மேற்பட்ட இங்கிலாந்து பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இதில் எத்தனை பேர் வாபஸ் பெறப்படுவார்கள் என்பது குறித்து தெளிவான தகவல் வெளியாகவில்லை.