• Sun. Nov 16th, 2025

24×7 Live News

Apdin News

கட்டு வரியன் பாம்பு கடித்ததை எளிதில் கண்டுபிடிக்க முடியாதது ஏன்?

Byadmin

Nov 16, 2025


காணொளிக் குறிப்பு, ‘மூச்சை விழுங்கும் பாம்பு’ என கட்டு விரியன் அழைக்கப்படுவது ஏன்?

காணொளி: கட்டு வரியன் பாம்பு கடித்ததை எளிதில் கண்டுபிடிக்க முடியாதது ஏன்?

கட்டு வரியன் பாம்புக்கு வட இந்தியாவின் சில கிராமங்களில் ‘மூச்சை விழுங்கும் பாம்பு’ என்ற பெயருண்டு.

அதன் கடிக்கு ஆளான பலரும் உறக்கத்திலேயே இறந்துவிடுவதே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. உண்மை என்ன? கட்டு வரியன் இரவில்தான் கடிக்குமா? அது கடித்தால் உடலில் என்ன நடக்கும்?

விரிவாகத் தெரிந்துகொள்ள பாம்புகள் மற்றும் அவற்றின் நஞ்சு தொடர்பாக ஆய்வு செய்து வரும் வல்லுநர்களிடம் பேசினோம்.

கட்டு வரியன் பாம்பு இரவில்தான் கடிக்குமா?

இதுகுறித்து விளக்கிய ஊர்வனவியலாளர் ரமேஸ்வரன், “கட்டு வரியன் கடிப்பதாலேயே தூங்கும்போது இறப்பு நிகழ்வதாக அர்த்தமில்லை. அவை பல நேரங்களில் மனிதர்களை தூங்கும்போது கடித்துவிடுவதே அதற்குக் காரணம்,” என்றார்.

ஊர்வனவியலாளர் ரமேஸ்வரனின் கூற்றுப்படி, கட்டு வரியன் ஓர் இரவாடிப் பாம்பு, இரவில் அதிக சுறுசுறுப்புடன் இயங்கக்கூடியது.

குறிப்பாக, “அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கும்போது வீடுகளுக்குள் புகுந்து விடுவதால் மக்கள் எளிதில் கவனிப்பதற்கான வாய்ப்புகளும் குறைவு. அது மட்டுமின்றி, கட்டு வரியன்கள் பிற நச்சுப் பாம்புகளைப் போல சீண்டப்படும் போது சத்தமிடுவது, எச்சரிப்பது போன்ற செயல்களைச் செய்யாது. எனவே அவற்றின் இருப்பு கவனிக்கப்படாமல் போக அதிக வாய்ப்புள்ளது,” என்று விவரித்தார் ரமேஸ்வரன்.

அதோடு, அவை நள்ளிரவில் அதிகமாக இயங்குவதே, இரவில் அவற்றால் பாம்புக்கடி விபத்துகள் அதிகம் ஏற்படக் காரணம் என்றார் ரமேஸ்வரன்.

கட்டு வரியன் பாம்பு கடித்தால் வலியே தெரியாதா?

பிற பாம்புக் கடிகளைப் போல கட்டு வரியன் கடித்ததை எளிதில் கண்டுபிடித்துவிட முடியாது என்கிறார் யுனிவெர்சல் பாம்புக்கடி ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனரும் மூத்த விஞ்ஞானியுமான முனைவர் மனோஜ்.

அதுகுறித்து விரிவாகப் பேசிய மனோஜ், “நாகப் பாம்புகளின் நச்சுப் பற்கள் சராசரியாக 8 முதல் 10 மில்லிமீட்டர் வரை இருக்கும். கண்ணாடி விரியனின் நச்சுப்பல் அதைவிடப் பெரியது, சுமார் ஒன்றரை இன்ச் வரைகூட இருக்கும். எனவே அவை கடித்த இடத்தை எளிதில் கண்டறிய முடியும்.

சுருட்டை விரியன் விஷயத்தில்கூட பற்கள் சிறிதாக இருந்தாலும் கடித்த இடத்தில் கொப்புளங்கள் போன்ற காயங்கள் ஏற்படும். அதை வைத்துக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் கட்டு வரியனின் நச்சுப் பற்கள் வெறும் 4 மில்லி மீட்டருக்கும் குறைவான அளவைக் கொண்டவைதான். அதோடு கடித்த இடத்தில் பெரிய வலியோ, தடயமோ இருக்காது” என்று விளக்கினார்.

இந்த சவால்கள், ஒருவர் உடல்நல பாதிப்புகளோடு மருத்துவமனைக்கு வரும்போது “உடலில் பாம்புக்கடி பாதிப்பு இருக்கிறதா என்பதை ஆராய்வதை சிக்கலாக்குகிறது.” என்றார் முனைவர் மனோஜ்.

கட்டு வரியன் கடித்தால் பலரும் தூக்கத்திலேயே இறந்துவிடுவார்களா?

அதன் நஞ்சு “நரம்பு மண்டலத்தை தாக்குவதால், நுரையீரலில் வீக்கம் ஏற்படுகிறது, கண் இமைகளைத் திறக்க முடியாமல் கடிபட்டவர்கள் அரை மயக்க நிலைக்குச் சென்று சுயநினைவை இழக்கின்றனர். வாயில் துர்நாற்றத்துடன் எச்சில் வடியும்.

நேரம் செல்லச் செல்ல ஆக்சிஜனை உடல் முழுக்க கொண்டு செல்லும் திறனை நுரையீரல் இழப்பதால் சுவாசிக்க முடியாமல் கடிபட்டவர்கள் உயிரிழக்கின்றனர்” என்று அறிகுறிகளை விளக்கினார் மனோஜ்.

அது ஒருவேளை தூங்கும்போது கடித்து, அதனால் கடிபட்டவருக்கு ஏற்படும் இந்த பாதிப்புகளை, காலை வரை யாரும் கவனிக்காத சூழல் நிலவினால், உறக்கத்திலேயே இறப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்று விவரித்த மனோஜ், அதனால்தான் “கட்டு வரியன் கடித்தால் தூக்கத்தில் இறந்துவிடுவார்கள்” என்று சொல்லப்படுவதன் பின்னணியில் உள்ள காரணம் எனவும் குறிப்பிட்டார்.

அவரது கூற்றுப்படி, கட்டு வரியன் பாம்பின் நஞ்சு, நாகம் போன்ற பிற பாம்புகளின் நஞ்சைப் போல உடனடியாக பாதிப்புகளை ஏற்படுத்துவது குறைவுதான். இருப்பினும், அவை கடித்துவிட்டதைக் கண்டுபிடிப்பதே கடினம் என்பதால், சவாலான பாம்புக்கடி சிகிச்சைகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin