“என் கணவரைப் பற்றி யாராவது கேட்டால், அவர் துபைக்கு வேலைக்குப் போயிருக்கிறார் என்று சொல்வேன். ஆனால் உண்மையில், நான் அவரைக் கொன்று சமையலறையில் புதைத்து விட்டேன். இரண்டு மாதங்கள் அங்கேயே சமைத்து, என் குழந்தைகளுக்கு உணவளித்தேன். பிறகு, என் காதலனுடன் வேறு இடத்தில் வாழச் சென்றேன்.”
ஆமதாபாத் குற்றப்பிரிவு அலுவலகத்தில் ரூபி என்ற பெண் இவ்வாறு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தபோது, போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
ரூபி, தனது காதலனுடன் சேர்ந்து தனது கணவரை கொன்று, அவரது உடலை சமையலறையில் குழி தோண்டி புதைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆதாரங்களை மறைக்க அந்த குழியில் உப்பு போடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் சமையலறையின் தரையில் ஓடுகள் பதித்து, அதனை பழைய நிலைக்கு மாற்றி அமைத்துள்ளனர்.
ஒரு வருடத்திற்கும் மேலாக இதைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை. ஆனால் இறுதியில் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த மர்மம் வெளிப்பட்டுள்ளது. விசாரணையில், முகமது இஸ்ரேல் அக்பரலி அன்சாரி எனப்படும் சமீர் பிஹாரி என்ற நபரின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதையடுத்து, ரூபியும் அவரது காதலர் என்று கூறப்படும் இம்ரான் வகேலாவும் அவரது இரண்டு கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர்.
பட மூலாதாரம், Bhargav Parikh
படக்குறிப்பு, முகமது இஸ்ரேல் அக்பர் அலி அன்சாரி எனப்படும் சமீர் பிஹாரி.
சம்பவத்தின் பின்னணி என்ன?
காவல்துறை அளித்த தகவலின்படி, சமீர் பிஹாரி மற்றும் ரூபி இருவரும் பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொண்ட அவர்கள், சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆமதாபாத் நகரத்துக்கு வந்துள்ளனர்,
சமீர் ஒரு தொழிலாளியாகவும் பெயிண்டராகவும் வேலை பார்த்து வந்தார்.
“கொரோனா காலத்தில் இம்ரான் வகேலா என்ற நபர் அவர்களது பகுதியில் குடிபெயர்ந்து வந்தார். ரூபியும் இம்ரானும் காதலில் விழுந்தனர். சமீர் பிஹாரி தனது மனைவியின் உறவை அறிந்ததும், வீட்டில் அடிக்கடி சண்டை நடந்துள்ளது. சமீர் தன்னை அடிக்கடி அடிப்பார் என ரூபி கூறுகிறார். அதனால் விரக்தியடைந்த அவர் தனது காதலன் இம்ரானிடம் சொல்லி, அவரைக் கொல்ல திட்டமிட்டார்” என்று ஆமதாபாத் குற்றப்பிரிவு துணை ஆணையர் அஜித் ராஜியன் கூறினார்.
இம்ரான் முதலில் தனது இரண்டு உறவினர்களான ரஹீம் ஷேக் மற்றும் மொஹ்சின் பதான் ஆகியோரிடம் பேசி, அவர்களை இந்த கொலைத் திட்டத்தில் சேர்த்தார் என்று போலீசார் கூறுகின்றனர்.
ஒரு வருடத்துக்கு முன்பு, ஒருநாள் இரவு சமீர் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, இம்ரான், ரூபி, ரஹீம் மற்றும் மொஹ்சின் ஆகிய நால்வரும் சேர்ந்து சமீரை கொன்றனர். பின்னர் அவரது உடலை சமையலறையில் தோண்டிய குழியில் புதைத்து, அதன் மீது உப்பை கொட்டி, தரையின் மேல் ஓடுகளை பதித்து மறைத்துள்ளார் என்கிறது காவல்துறை.
போலீசார் அந்த இடத்தை தோண்டியபோது, சமீரின் முடி, எலும்புகள் போன்ற உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர் அவை டிஎன்ஏ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன.
“நாங்கள் ரூபியின் காதலன் இம்ரானை விசாரிக்க அழைத்தபோது, ஆரம்பத்தில் அவர் எதுவும் சொல்லவில்லை. ஆனால் நீண்ட நேர விசாரணைக்குப் பிறகு, குற்றத்தை ஒப்புக்கொண்டார்,” என்று ராஜியன் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Bhargav Parikh
படக்குறிப்பு, குற்றம் சாட்டப்பட்ட ரூபி அன்சாரி.
கொலையைப் பற்றி காவல்துறைக்கு எப்படித் தெரியவந்தது?
ஒரு வருடம் முழுவதும் சமீர் கொலை செய்யப்பட்டதை யாரும் அறியவில்லை. அவரது குடும்பத்தினரும் கூட அவரைப் பற்றி விசாரிக்கவில்லை.
குற்றப்பிரிவு தலைமைக் காவலர் ஷகீல் முகமதுவிடம், தகவல் தரும் நபர் ஒருவர், ஃபதேவாடி பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணின் கணவர் ஒரு வருடமாக காணாமல் போயிருப்பதாகவும், அந்த விஷயம் சந்தேகத்துக்குரியதாகத் தோன்றுவதாகவும் தெரிவித்துள்ளார் என்கிறது காவல்துறை
இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.
“சமீர் பிஹாரி மற்றும் ரூபி இருவரும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆமதாபாத்திற்கு வந்ததாக எங்களுக்குத் தெரியவந்தது. சமீரைப் பற்றி கேட்டபோது, ரூபி தனது கணவர் வேலைக்காக துபைக்குச் சென்றதாகச் சொன்னார். ரூபி தனது காதலர் இம்ரானுடன் வேறு இடத்துக்கு சென்றுவிட்டார் எனவும் அக்கம்பக்கத்தினர் கூறினர். இதனால் எங்களது சந்தேகங்கள் வலுப்பட்டன” என குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் எஸ். ஜே. ஜடேஜா பிபிசியிடம் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், Bhargav Parikh
படக்குறிப்பு, குற்றம் சாட்டப்பட்ட இம்ரான் வகேலா
“எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு தம்பதி குடும்பத்தின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொண்டு ஆமதாபாத்திற்கு வந்து ஒரு வீட்டை கட்டி இங்கேயே வாழ்ந்து வந்துள்ளனர். திடீரென தங்களது இரு குழந்தைகளையும் இங்கே விட்டுவிட்டு, அவர் துபைக்கு போய் வேலை செய்வது என்பது நம்ப முடியாத விஷயம். அதுமட்டுமல்லாமல், இம்ரானுக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகள் இருந்தார்கள். அதில் ரூபி மூன்றாவது மனைவியாக மாறுவது இன்னும் விசித்திரமாக இருந்தது” என்று துணை போலீஸ் கமிஷனர் அஜித் ராஜியன் பிபிசியிடம் தெரிவித்தார்.
கொலை செய்த பிறகு இரண்டு மாதங்கள் தன் குழந்தைகளுடன் அந்த வீட்டிலேயே வசித்து வந்ததாகவும், சமீரின் உடல் புதைக்கப்பட்ட அதே சமையலறையில் தான் தினமும் சமைத்ததாகவும் ரூபி போலீசாரிடம் கூறியுள்ளார்.
ஆனால், அக்கம்பக்கத்தினர் அடிக்கடி ‘உனது கணவர் எப்போது திரும்பி வருவார்?’ என்று கேட்டுக்கொண்டே இருந்ததால், அவர் அந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு , தனது காதலன் இம்ரானுடன் வேறு இடத்தில் குடியேறியுள்ளார்.
கொலையில் ஈடுபட்டது யார் யார்?
பட மூலாதாரம், Bhargav Parikh
படக்குறிப்பு, கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மொஹ்சின்
“சமீர் 2018-ல் இங்கு குடியேறினார். கொத்தனார் வேலை செய்து நல்ல வருமானம் ஈட்டினார். ஆனால் கொரோனா ஊரடங்கின் போது வேலை இல்லாததால் பொருளாதார சிக்கல் ஏற்பட்டது. அந்த நேரத்தில், இம்ரான் தனது முதல் மனைவியை விட்டுவிட்டு, இரண்டாவது மனைவியுடன் இங்கு வந்தார். அதே நேரத்தில் ரூபியும் இம்ரானும் காதலித்தனர். இது இங்குள்ள அனைவருக்கும் தெரிந்த விஷயம்”என்று சமீரின் வீட்டுக்கு அருகே வசிக்கும் ஷபினாபென் என்ற பெண் கூறுகிறார்.
“சமீர் காணாமல் போன பிறகு, ரூபி அவருடைய துணிகளை எரித்துவிட்டு, ‘என் கணவர் துபைக்கு வேலைக்குச் சென்றுவிட்டார் ‘ என்று அக்கம் பக்கத்தினரிடம் கூறினார். ரூபிக்கும், இம்ரானின் இரண்டாவது மனைவிக்கும் இடையில் அடிக்கடி சண்டை நடந்தது. சமீர் நீண்ட காலமாக காணாமல் போயிருந்தாலும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று யாரும் நினைக்கவில்லை”என்று அப்பெண் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், Bhargav Parikh
படக்குறிப்பு, குற்றம் சாட்டப்பட்ட ரஹீம்
இந்தக் கொலையில் இம்ரானின் தாய் மாமா மகன் ரஹீமும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது கிராமத்தைச் சேர்ந்த உறவினர் ஒருவர், “இம்ரான் கிராமத்திற்கு வரும்போது, தாராளமாக பணத்தைச் செலவழிப்பார், அதனால் பலர் அவருடன் வேலை செய்ய ஆமதாபாத்திற்குச் சென்றனர்” என்று கூறினார்.
இந்தக் கொலை வழக்கில் இம்ரானின் உறவினர் மொஹ்சினின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
அவரது குடும்ப உறுப்பினர்களில் ஒருவரான இம்தியாஸ் பதான் பிபிசியிடம் கூறுகையில், “இம்ரான் மொஹ்சினுக்கு ஒரு டெம்போவை கொடுத்து ஓட்டுநராக வேலை கொடுத்திருந்தார். பண்டிகைகளின் போது அவர்கள் கிராமத்திற்கு வரும்போது, ’இம்ரானின் உதவியால் நாங்கள் நல்ல வருமானம் பெறுகிறோம்’ என்று சொல்வார்கள். இம்ரான் செய்த உதவிக்காக, அவருக்கு நன்றியுணர்வோடு இருக்க வேண்டும் என்பதற்காக மொஹ்சின் சிக்கியிருப்பது போலத் தெரிகிறது” என்றார்.