பட மூலாதாரம், SHAHNAWAZ AHMAD/BBC
சமீபத்தில் பாட்னா இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் நிறுவனம் (ஐஜிஐஎம்எஸ்) மருத்துவமனை ஒரு அபூர்வ நிகழ்வை எதிர்கொண்டது.
இங்கு ஒரு நோயாளியின் வலது கண்ணில் பல் வளர்ந்துகொண்டிருந்தது. இந்த நோயாளியின் அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர்கள், இதை மருத்துவ அறிவியலில் அபூர்வமான சில சம்பவங்களில் ஒன்றாக கருதுகின்றனர்.
ஆகஸ்ட் 11 அன்று நோயாளியின் கண்ணில் இருந்து பல் அகற்றப்பட்டு, இப்போது அவர் நலமாக உள்ளார். பிபிசி இந்த நோயாளியையும் அவரது அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவர்களையும் பேட்டி எடுத்து இந்த விஷயத்தை புரிந்து கொள்ள முயற்சித்தது.
இந்த செய்தியில், ஐஜிஐஎம்எஸ்ஸின் தனியுரிமை கொள்கையை மதித்து, நோயாளியின் அடையாளத்தை மறைத்து அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளது.
விஷயம் என்ன?
ரமேஷ் குமார் (மாற்றப்பட்ட பெயர்) பிகாரின் சிவான் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 42 வயதான ரமேஷுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மேலுள்ள ஒரு பல்லிற்கு அருகில் ரத்தம் வடிந்தது.
கிராமத்தில் உள்ள ஒரு மருத்துவரிடம் காட்டியதில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, 2024 டிசம்பருக்குள் ரமேஷ் முழுமையாக குணமடைந்தார்.
ஆனால் 2025 மார்ச் மாதத்தில், ரமேஷ் தன் வலது கண்ணுக்கும் பற்களுக்கும் இடையே, அதாவது கன்னங்களில் கட்டி போன்ற ஒரு புண் உருவாகி இருப்பதை உணர்ந்தார். மீண்டும் உள்ளூர் மருத்துவரிடம் காட்டியபோது, அவர் ரமேஷை பாட்னா சென்று பார்க்குமாறு அறிவுறுத்தினார்.
“கட்டி காரணமாக எனக்கு பார்வை மங்கலாக தோன்றியதுடன் தலையின் வலது பகுதியில் எப்போதும் வலி இருந்தது. இதனால் தலைச்சுற்றல் ஏற்பட்டு சோர்வு காரணமாக எப்போதும் தூங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது,” என ரமேஷ் பிபிசி இந்தியிடம் கூறினார்,
“என் முழு வேலையும் பாதிக்கப்பட்டு விட்டது. அதன் பிறகு ஜூன் மாதத்தில் ஐஜிஐஎம்எஸ்ஸில் பல் மருத்துவரை பார்த்தேன். மருத்துவர் சிபிசிடி ஸ்கேன் எடுத்து பார்த்தார். பிறகு என் கண்ணில் பல் இருப்பது தெரியவந்தது. ஆகஸ்ட் 11 அன்று மருத்துவர்கள் என் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். இப்போது நான் முழுமையாக நலமுடன் உள்ளேன்.”
சிபிசிடி என்றால் கோன் பீம் கம்ப்யூட்டட் டோமோகிராஃபி (Cone Beam Computed Tomography) ஆகும். எளிய வார்த்தைகளில், இது ஒரு வகை எக்ஸ்ரே ஆகும், இது மேக்ஸிலோஃபேஷியல் பகுதியின் எக்ஸ்ரே எடுத்து முப்பரிமாண படங்களை உருவாக்குகிறது.
பட மூலாதாரம், Getty Images
நோயாளியின் கண்ணில் ஒரு பல் வளர்ந்தது எப்படி?
ரமேஷின் சிகிச்சையை பல் (டெண்டல்) துறையின் மேக்ஸிலோஃபேஷியல், ஓஎம்ஆர் (ஓரல் மெடிசின் அண்ட் ரேடியாலஜி) மற்றும் டெண்டல் மயக்க மருத்துவ பிரிவுகள் இணைந்து மேற்கொண்டன.
மேக்ஸிலோ என்றால் தாடை மற்றும் ஃபேஷியல் என்றால் முகம். மேக்ஸிலோஃபேஷியல் அறுவை சிகிச்சை நிபுணர் மூளை, கண் மற்றும் காது உட்புற பகுதிகள் மற்றும் தலையிலிருந்து கழுத்து வரை உள்ள அனைத்து அமைப்புகளையும் அறுவை சிகிச்சை செய்கிறார்.
அதேபோல, பற்கள், வாய், எலும்பு மற்றும் முகத்தில் பொதுவான பரிசோதனையில் தெரியாத பிரச்சனைகளை எக்ஸ்ரே போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கண்டறிவதுதான் ஓஎம்ஆர்-ன் பணி.
நோயாளின் கண்ணில் ஒரு பல் வளர்ந்தது எப்படி?
இந்த கேள்விக்கு பதிலளித்த ஐஜிஐஎம்எஸ்ஸின் ஓஎம்ஆர் துறை தலைவர் நிம்மி சிங், “இது ஒரு வளர்ச்சி விதிவிலக்கு (developmental anomaly) ஆகும். அதாவது, குழந்தை வளரும் போது உடல் மற்றும் பற்களும் வளர்ந்து வரும். அந்த நேரத்தில் இந்த பல் அசாதாரணமான இடத்தில் வளரத் தொடங்கியது.”
“நமது உடல் அமைப்பில் பல விஷயங்கள் வழக்கமான இடத்தில் உருவாகாமல் வேறு இடங்களில் உருவாகலாம்,” என அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட மேக்ஸிலோஃபேஷியல் அறுவை சிகிச்சை நிபுணர் பிரியங்கர் சிங் கூறுகிறார்.
“குழந்தை கருவில் இருக்கும் போது அல்லது முகம் வளரும் போது, பல் உருவாக்கும் தன்மை சிதறி வேறு இடத்திற்கு சென்றால், அந்த உடல் பகுதியிலும் அது வளரலாம். இந்த நோயாளி விவகாரத்திலும் அது நடந்து கண்ணின் கீழ் பகுதியில் பல் வளர்ந்தது.”
பல் வேர்கள் கண்ணுக்கு அடியில் இருந்தன
மனிதனின் தலையில் கண் அமைந்திருக்கும் எலும்பு செல் ‘ஆர்பிட்’ என்று அழைக்கப்படுகிறது. மிக எளிய வார்த்தைகளில், கண்களைச் சுற்றி பாதுகாக்கும் கண்கூடு தான் ஆர்பிட். கண்ணின் கீழ் பகுதியை ‘ஃபுளோர் ஆஃப் த ஆர்பிட்’ என்று அழைக்கின்றனர்.
நோயாளி ரமேஷ் குமாருக்கு சிபிசிடி செய்யப்பட்டபோது, அவரது ‘ஃபுளோர் ஆஃப் த ஆர்பிட்’ பகுதியில் பல் வேர்கள் இருப்பது தெரியவந்தது.
“இந்த விஷயத்தில், பல் வேர்கள் ஃபுளோர் ஆஃப் த ஆர்பிட் பகுதியில் இருந்தன. ஆனால் அதன் மகுட பகுதி (பல்லின் வெண்மையான பகுதி) மேக்ஸிலரி சைனஸில் இருந்தது. இந்த பல் தனது வழக்கமான இடத்தில் உருவாகவில்லை, எனவே உடலுக்கு இது அந்நியப்பொருளாக (foreign body) இருந்தது,” என பிரியங்கர் விளக்குகிறார்,
“உடலின் பாதுகாப்பு அமைப்பு இந்த அந்நியப் பொருளிலிருந்து தப்பிக்க, அதைச் சுற்றி ஒரு சிஸ்ட் (ஒரு வகை கூடு) உருவாக்கியது. இந்த சிஸ்ட் முழு மேக்ஸிலரி சைனஸ் பகுதியையும் சுற்றியிருந்தது, இதனால் முகத்தில் வீக்கம் ஏற்பட்டு மேலுள்ள எலும்பு சிதிலமடைந்தது.”
மேக்ஸிலரி சைனஸ் என்பது, ‘ஃபுளோர் ஆஃப் த ஆர்பிட்’ மற்றும் நமது மேல் தாடை எலும்புக்கும் இடையே உள்ள பகுதியாகும். எளிய வார்த்தைகளில், இது கன்னத்தின் ஒரு பகுதியாகும்.
இந்த பல் கண்ணின் ‘ஃபுளோர் ஆஃப் த ஆர்பிட்’ பகுதியில் உருவாகியிருந்ததால், அந்த பகுதியிலிருந்து பல நரம்புகள் வெளியேறுவதால், இது ஒரு சிக்கலான அறுவை சிகிச்சையாக இருந்தது.
பல்லின் அளவு எப்படி இருந்தது?
பட மூலாதாரம், SHAHNAWAZ AHMAD/BBC
நான் நோயாளி ரமேஷ் குமாரை சந்தித்தபோது, அவர் மிகவும் சாதாரணமாக தோன்றினார். அவரது முகத்தில் எந்த வகையான காயமும் இல்லை.
உண்மையில், அவரது வாய்க்குள் அல்லது தாடையின் எலும்பில் கீறல் செய்யப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது, இதில் 10 முதல் 12 தையல்கள் இடப்பட்டுள்ளன.
அறுவை சிகிச்சை நிபுணர் பிரியங்கர் சிங் முதலில் கண்ணுக்கு அருகாமையில் கீறல் செய்து இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்தார். ஆனால் நோயாளி ரமேஷின் குறைவான வயது மற்றும் அவரது தொழிலை கருத்தில் கொண்டு, உள்ளுறை (intraoral) அதாவது வாய்க்குள் இருந்து அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.
இந்த அறுவை சிகிச்சையின் பிறகு நோயாளியின் கண்கள் முழுமையாக நலமாக உள்ளன மற்றும் பார்வை முன்பு இருந்ததைப் போலவே உள்ளது. நோயாளியிடமிருந்து அகற்றப்பட்ட பல்லின் வடிவம் எப்படி இருந்தது?
இதை கேட்டபோது, “இந்த நோயாளியின் பல்லின் அளவு பிரீமோலர் பல் அளவிற்கு இருந்தது,” என நிம்மி சிங் கூறுகிறார்
பிரீமோலர் பற்கள் நமது வாயில் பின்புறத்தில் உள்ளவை. இவை முன்புறத்தில் உள்ள கேனைன் பற்களுக்கும் வாயின் மிக பின்புறத்தில் உள்ள மோலர் (தாடை) பற்களுக்கும் இடையில் உள்ளன.
“நோயாளியிடம் பற்களில் எந்த குறைவும் இல்லை. எல்லா பற்களும் இருக்கும்போதும் புதிய பல் உருவானால், அதை நாம் சூப்பர்நியூமரி டூத் (அசாதாரண பல்) என்று அழைக்கிறோம்.”
இது போன்ற சம்பவங்கள் இதற்கு முன் நடந்துள்ளதா?
பட மூலாதாரம், SHAHNAWAZ AHMAD/BBC
நிம்மி சிங் மற்றும் பிரியங்கர் சிங் ஆகிய இருவருமே இதை மிகவும் அபூர்வமானது என வகைப்படுத்தினர்.
“இந்தியாவில் இதுபோன்ற 2 அல்லது 3 சம்பவங்களே தெரியவந்திருக்கின்றன. 2020 ஆம் ஆண்டு சென்னையில் பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் எஸ்.எம். பாலாஜி இதுபோன்ற ஒரு அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். அந்த சம்பவத்திலும் எங்கள் நோயாளிக்கு இருந்ததைப் போல், பற்கள் மிக முக்கியமான உடல் உறுப்புகளுக்கு அருகாமையில் இருந்ததன,” என்றுபிரியங்கர் சிங் கூறுகிறார்.
மீண்டும் அசாதரண பல் உருவாகுமா?
“மீண்டும் இதுபோன்ற பல் உருவாக வாய்ப்பு இல்லை. ஆனால் நாங்கள் நோயாளியை தொடர்ந்து பரிசோதனை செய்கிறோம். நோயாளியின் சிஸ்ட்டை மிகவும் கவனமாக அகற்றியுள்ளோம். ஆனாலும் சில பகுதிகள் மிஞ்சியிருக்கலாம் என்றும் நாங்கள் நினைக்கிறோம்,” என பிரியங்கர் சிங் கூறுகிறார்,
“அதனால், எதிர்காலத்தில் தொற்று ஏற்படாதவாறு அந்த பகுதியான மேக்ஸிலரி சைனஸை காட்டரைஸ் செய்தோம், அதாவது சிஸ்ட்டின் மிஞ்சிய பகுதியையும் எரித்து விட்டோம்.”
பிபிசி குழு ரமேஷை சந்தித்தபோது, தையல்கள் காரணமாக பேசுவதிலும் சிரிப்பதிலும் அவருக்கு சிறிது சிரமம் இருந்தது. ஆனால் அவர் தனது சிகிச்சையால் மகிழ்ச்சியடைந்து திருப்தியடைந்திருந்தார்.
“என் மனைவி மிகவும் கவலைப்பட்டு அழுதுகொண்டிருந்தாள். அருகிலுள்ள கிராம மக்களுக்கு இது தெரிந்ததும் அனைவரும் என் நலம் விசாரிக்க வந்தனர். ஆனால் இப்போது அதிகம் பேசுவது எனக்கு நல்லதல்ல. நான் திரும்பி என் மக்களிடையே வாழ்க்கையை தொடங்கி, என் மனைவியையும் குழந்தையையும் சந்திக்க ஆவலாக உள்ளேன்,” என ரமேஷ் கூறுகிறார்,
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.