பட மூலாதாரம், Getty Images
செவ்வாயன்று தோஹாவில் மூத்த ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, காணாமல் போன இரண்டு பேரைத் தேடி வருவதாகவும், மனித எச்சங்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாகவும் கத்தார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மிகவும் சர்ச்சைக்குரிய இந்த தாக்குதல் வெற்றி பெறவில்லை என்ற கவலை இஸ்ரேல் ராணுவ வட்டாரங்களில் உள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாலத்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் தெரிவித்த ஐந்து கீழ்மட்ட உறுப்பினர்களில் மூவரின் உடல்களை, கத்தார் உள்துறை அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது, அவர்களோடு ஒரு கத்தார் பாதுகாப்பு அதிகாரியும் கொல்லப்பட்டுள்ளார்.
தனது பேச்சுவார்த்தைக் குழுவை குறிவைத்த இந்த தாக்குதல் தோல்வியடைந்ததாக ஹமாஸ் கூறியுள்ளது.
சின்என்-க்கு அளித்த பேட்டியில், ஹமாஸின் தலைமை பேச்சுவார்த்தையாளர் கலீல் அல்-ஹய்யாவின் நிலை குறித்து கத்தார் பிரதமர் எதையும் வெளிப்படுத்தவில்லை.
“இதுவரை… எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை,” என்று ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி புதன்கிழமை மாலையில் தெரிவித்திருந்தார்.
இஸ்ரேலின் நடவடிக்கை “அரச பயங்கரவாதம்” எனக் கருதப்பட வேண்டியதாகவும், கத்தாரின் பிராந்திய கூட்டாளிகள் “கூட்டாகப் பதில்” அளிப்பார்கள் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் தலைமையிலான தாக்குதலில் “பயங்கரவாத மூளையாக இருந்தவர்களை” குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் நியாயமானது என்று தெரிவித்தார்.
அக்டோபர் 7 தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 251 பேர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற போரில், காஸாவில் நடந்த இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது 64,656 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அப்பகுதியில் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம், AFP
அமெரிக்காவின் முக்கிய பிராந்தியக் கூட்டாளியாக இருக்கும் கத்தாரில், பெரிய அமெரிக்க விமானத் தளம் அமைந்துள்ளது. 2012 முதல் ஹமாஸ் அரசியல் பணியகம் அங்கு செயல்பட்டு வருகிறது. மேலும், அமெரிக்கா மற்றும் எகிப்துடன் இணைந்து, ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான மறைமுக பேச்சுவார்த்தைகளில் கத்தார் மத்தியஸ்தராகவும் இருந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் வடக்கு தோஹாவில் நடந்த வான்வழித் தாக்குதல், ஹமாஸ் அரசியல் பணியகத்தின் பல உறுப்பினர்கள் வசித்த குடியிருப்பு வளாகத்தை குறிவைத்ததாக கத்தார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அப்போது அவர்கள், அமெரிக்கா முன்மொழிந்த சமீபத்திய போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்தைப் பற்றி ஆலோசித்து வந்தனர்.
இந்த நடவடிக்கையை “ஆபரேஷன் சம்மிட் ஆஃப் ஃபயர்” என அழைத்த இஸ்ரேலிய அதிகாரிகள், அதன் முடிவுகள் குறித்து தொடக்கத்தில் நம்பிக்கையுடன் இருந்ததாக இஸ்ரேலிய ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.
ஆனால் புதன்கிழமை வந்த தகவல்கள், அந்த தாக்குதல் அவர்கள் நினைத்த அளவுக்கு வெற்றிகரமாக அமையவில்லை என்ற சந்தேகங்களை வெளிப்படுத்தின. சில அதிகாரிகள், ஹமாஸ் தலைவர்கள் கட்டிடத்தின் வேறு பகுதியில் இருந்திருக்கலாம் என்று குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஹமாஸ், இந்த “கொடூரமான குற்றத் தாக்குதலில்” தனது ஐந்து உறுப்பினர்கள் உயிரிழந்ததாகக் கூறியது.
கலீல் அல்-ஹய்யாவின் மகன் ஹுமாம், ஹய்யாவின் அலுவலக இயக்குநர் ஜிஹாத் லபாத், மற்றும் பாதுகாப்பு வீரர்கள் மோமன் ஹசௌனா, அப்துல்லா அப்துல் வாஹித், அகமது அல்-மம்லுக் ஆகியோர் தான் அந்த ஐவர்.
“பேச்சுவார்த்தைக் குழுவில் உள்ள எங்கள் சகோதரர்களை கொல்லும் முயற்சி தோல்வியடைந்தது,” என்று ஹமாஸ் கூறியிருந்தாலும், அதற்கான எந்த ஆதாரத்தையும் அது வெளியிடவில்லை.
புதன்கிழமை மாலை, ஹுமாம் அல்-ஹய்யா, லபாத், ஹசௌனா, மேலும் கத்தார் உள்நாட்டு பாதுகாப்புப் படையைச் சேர்ந்த கார்ப்ரல் பத்ர் அல்-ஹுமைடி ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கத்தார் உள்துறை அமைச்சகம் அறிவித்தது.
“காணாமல் போனதாகக் கூறப்படும் இரண்டு நபர்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன,” என்றும், “பல்வேறு இடங்களில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன” என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கலீல் அல்-ஹய்யாவின் இருப்பிடத்தைப் பற்றி இதுவரை எந்தத் தகவலும் வெளிப்படவில்லை. அவர் இன்னும் பொதுவெளியிலும் தோன்றவில்லை.
கத்தார் ஹமாஸ் தலைவர்களுக்கு “பாதுகாப்பான புகலிடத்தை” வழங்கியதால், அவர்களைக் குறிவைத்து இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தியதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.
“பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் வழங்கும் கத்தார் உட்பட அனைத்து நாடுகளுக்கும் நான் கூறுகிறேன், அவர்களை வெளியேற்றுங்கள் அல்லது நீதியின் முன் நிறுத்துங்கள். இல்லையெனில், நாங்களே நடவடிக்கை எடுப்போம்,” என்று அவர் எச்சரித்தார்.
இதற்கு பதிலளித்த கத்தார் பிரதமர் ஷேக் முகமது, “நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டியது நெதன்யாகு தான். அவர் தான் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தேடப்பட்டு வருபவர்,” என்று சிஎன்என்-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு, காஸாவில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு நெதன்யாகுவும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லன்டும் குற்றவியல் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளதாகக் கூறி, ஐசிசி நீதிபதிகள் இருவருக்கும் கைது வாரண்டுகளை பிறப்பித்தனர்.
ஆனால் இஸ்ரேலிய அரசும், அந்த இருவரும் அக்குற்றச்சாட்டுகளை மறுத்தனர்.
இஸ்ரேலின் சமீபத்தியத் தாக்குதல், காஸாவில் மீதமுள்ள 48 பணயக்கைதிகள் மீதான நம்பிக்கையை “கொன்றுவிட்டது” என தாம் அஞ்சுவதாகவும், அதில் 20 பேர் உயிருடன் இருப்பதாக நம்பப்படுவதாகவும் ஷேக் முகமது தெரிவித்தார்.
தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன், ஒரு பணயக்கைதியின் குடும்பத்தினரை சந்தித்ததாகவும், அவர்கள் “இந்த போர்நிறுத்த மத்தியஸ்தத்தையே முழுமையாக நம்பியிருந்தனர், அவர்களுக்கு வேறு எந்த நம்பிக்கையும் இல்லை” எனக் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இஸ்ரேலின் நடவடிக்கை “போருக்கு முடிவு காணும் கதவைத் திறக்கக்கூடும்” என்று நெதன்யாகு செவ்வாயன்று கூறினார்.
மேலும், அமெரிக்கா முன்மொழிந்த போர்நிறுத்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாகவும் உறுதிப்படுத்தினார். அதேசமயம் காஸா மக்களும் அதைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
கத்தார் இப்போது ஹமாஸ் அலுவலகத்தை மூடுமா என்ற கேள்விக்கு, தனது அரசு “எல்லாவற்றையும் மறுபரிசீலனை செய்து வருகிறது” என்றும், அடுத்தடுத்த நடவடிக்கைகள் குறித்து அமெரிக்காவுடன் “விரிவான உரையாடல்” நடத்தி வருவதாகவும் ஷேக் முகமது கூறினார்.
இந்தத் தாக்குதலின் ஒவ்வொரு அம்சத்திலும் தான் மிகவும் அதிருப்தியடைந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
“அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியும் இறையாண்மை கொண்ட நாடான கத்தாருக்குள் ஒருதலைப்பட்சமாக குண்டுவீசுவது, அமைதியை நிலைநாட்ட எங்களுடன் கடினமாகவும் துணிச்சலாகவும் ஆபத்துகளை எதிர்கொண்டு செயல்படும் ஒரு நாட்டுக்கு எதிராகச் செய்யப்படும் நடவடிக்கை. இது இஸ்ரேலின் இலக்குகளையோ அல்லது அமெரிக்காவின் இலக்குகளையோ முன்னேற்றாது”, “ஆனால், காஸாவில் வாழும் மக்களின் துயரத்திலிருந்து லாபம் ஈட்டிய ஹமாஸை ஒழிப்பது ஒரு நியாயமான குறிக்கோள்”என்று டொனால்ட் டிரம்ப் செவ்வாயன்று ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க ராணுவத்திடம் இருந்து தகவல் கிடைத்ததும், வரவிருக்கும் தாக்குதல் குறித்து கத்தாருக்குத் தெரிவிக்குமாறு சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப்பிடம் தெரிவித்ததாகவும், ஆனால் அது “மிகவும் தாமதமாகிவிட்டது” என்றும் டிரம்ப் கூறினார்.
அமெரிக்கா “தாக்குதல் நடந்த 10 நிமிடங்களுக்குப் பிறகு தான்” கத்தாரைத் தொடர்பு கொண்டதாக ஷேக் முகமது தெரிவித்தார்.
கத்தாரின் சக அரபு நாடுகளும் இஸ்ரேலிய தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
புதன்கிழமை, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைவர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், ஒற்றுமையை வெளிப்படுத்த தோஹாவிற்கு விமானம் மூலம் சென்றார்.
கத்தாரின் எமிர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியிடம், இஸ்ரேலின் “குற்றவியல் தாக்குதல்” மத்திய கிழக்கின் “பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் அமைதிக்கான வாய்ப்புகளை” அச்சுறுத்துவதாக கூறியதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் டபுள்யூஏஎம் (WAM) செய்தி நிறுவனம் தெரிவித்தது.
வியாழக்கிழமையன்று தோஹாவுக்கு வரவிருக்கும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத், இஸ்ரேலின் “கொடூரமான ஆக்கிரமிப்பு” நடவடிக்கைக்கு பதில் தேவைப்படுவதாகக் கூறினார்.
ஷேக் முகமதுவின் கூற்றுப்படி, பிராந்திய ரீதியான பதிலை விவாதிக்க விரைவில் கத்தாரில் ஒரு உச்சிமாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு