செப்டம்பர் 9 அன்று கத்தாரின் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், அமெரிக்காவின் பங்கு இருந்ததாக அரபு மற்றும் பிராந்திய ஊடகங்கள் கூறுகின்றன. இந்த தாக்குதல், உயர்நிலை ஹமாஸ் பேச்சுவார்த்தை குழுவை குறிவைத்து நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
செளதி அல் அரேபியா டிவியின் செய்தித் தொகுப்பில், இஸ்ரேல் ஊடகங்களில் வந்த செய்தியை மேற்கோள் காட்டி, தாக்குதல் குறித்து அமெரிக்காவுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதாகவும், அதிபர் டிரம்ப் அதற்கு “பச்சைக்கொடி காட்டினார்” என்றும் ஒரு அதிகாரி கூறியதைத் தெரிவித்தது.
மேலும், பெயர் வெளியிட விரும்பாத ஹமாஸ் தலைவர் ஒருவரின் கூற்றைச் சுட்டிக்காட்டிய அந்த தொலைக்காட்சி, தாக்குதல் தோல்வியடைந்தது, பேச்சுவார்த்தை குழுவினர் உயிர் பிழைத்தனர் என்றும் தெரிவித்தது.
“தோல்வியடைந்த தாக்குதல்” என்று அல் அரேபியா சேனல் விவரித்ததைப் பற்றி விவாதிக்க பாதுகாப்பு ஆய்வாளர் ரியாட் கஹ்வாஜியை அழைத்தது.
இந்த தாக்குதல் இஸ்ரேலின் தவறான மதிப்பீடு மற்றும் உளவுத்துறை தோல்வியைக் காட்டுகிறது அல்லது பேச்சுவார்த்தை குழுவினருக்கு உளவியல் அழுத்தம் கொடுத்து பயத்தை ஏற்படுத்தி, அவர்களை சமரசம் செய்யத் தள்ளும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது என கஹ்வாஜி கூறினார்.
அல் அரேபியா, தொடர்ச்சியாக வெளியிட்ட முக்கிய செய்திகளில், இந்த தாக்குதல் குறித்து செளதி அரேபியா தெரிவித்த கண்டனத்தையும் பதிவு செய்தது
“கத்தார் எத்தகைய நடவடிக்கை எடுத்தாலும் அதனை ஆதரிக்க எங்களின் திறன் அனைத்தையும் வழங்குவோம். இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு கடுமையான விளைவுகள் ஏற்படும் என செளதி அரசு எச்சரித்ததாகவும் அந்த தொலைக்காட்சி கூறியது.
பட மூலாதாரம், AL ARABIYA TV
படக்குறிப்பு, கத்தாரின் தலைநகர் தோஹா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், அமெரிக்காவின் பங்கு இருந்ததாக அரபு மற்றும் பிராந்திய ஊடகங்கள் கூறுகின்றன
‘அமெரிக்காவை நம்ப வேண்டாம்’
இரான் ஆதரவு பெற்ற ஹூத்தி இயக்கத்தின் அல்-மசிரா டிவி சேனல் தனது இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில், ஆரம்பத் தகவல்களின்படி இந்தத் தாக்குதல் அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து நடத்தப்பட்டதாக கூறியது.
இதற்கிடையில், அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஒரு நிபுணர், அரபு நாடுகளின் பங்கைப் பற்றி பேசினார்.
“ஜூன் மாதத்தில் அமெரிக்காவின் அல்-உதீத் ராணுவத் தளத்தை குறிவைத்த இரானிய ராக்கெட்டுகளைத் தடுத்த அரபு பாதுகாப்பு அமைப்புகள் இப்போது எங்கே?” என்று கேள்வி எழுப்பினார் அவர்
மேலும், அரபு நாடுகள் வெளியிடும் அறிக்கைகளைச் சுட்டிக்காட்டி, “‘நாங்கள் கண்டிக்கிறோம். நாங்கள் கோருகிறோம்’ போன்ற வார்த்தைகளே அதிகம் உள்ளது” என்றார் அவர்.
ஹூத்தி உச்ச அரசியல் கவுன்சில் (SPC) தலைவர் மஹ்தி அல்-மஷாத், “குற்றவாளி டிரம்பின் அனுமதி இல்லாமல் இந்தத் தாக்குதல்கள் நடந்திருக்காது” என்று கூறி, அமெரிக்கா உடந்தையாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
ஹூத்தி கட்டுப்பாட்டில் உள்ள சபா செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், “சியோனிச எதிரி (இஸ்ரேல்) இருக்கும் வரை பிராந்தியத்தில் அமைதியோ, நிலைத்தன்மையோ இருக்க முடியாது என்பதை இந்தச் சம்பவம் எந்த சந்தேகமும் இல்லாமல் நிரூபித்துள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Reuters
மேலும், இது அனைத்து அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கிறது என்றும், “தாமதமாகிவிடும் முன் எச்சரிக்கையாக இருங்கள். சியோனிச அச்சுறுத்தலை எதிர்கொள்ள நாம் ஒன்றுபடாவிட்டால், தோஹாவில் நடந்தது மற்ற நாடுகளிலும் மீண்டும் மீண்டும் நடக்கும்” என்றும் மஷாத் எச்சரித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “இஸ்லாமியர்களே, அமெரிக்காவை நம்பாதீர்கள். அது சியோனிசத்தின் ஆதரவாளரும், பணியாளரும் ஆகும்” என்றார்.
லெபனானின் ஹெஸ்பொலா இயக்கத்தின் அல்-மனார் டிவி, லெபனான் அதிபர் ஜோசப் அவுன் உட்பட பல பிராந்திய தலைவர்களின் கண்டன அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்டது.
அந்த சேனல், கத்தாரின் மத்தியஸ்தர் பங்கு குறித்து ஒரு நிபுணருடன் விவாதித்தது.
“அரபு நாடுகளின் பங்கு சரியான பாதைக்கு திரும்ப வேண்டும். எங்களுக்கு இப்போது உண்மையான, தீவிரமான பங்கு தேவை. பாதிக்கப்பட்டவருக்கும் தண்டனை வழங்குபவருக்கும் இடையில் நீங்கள் மத்தியஸ்தராக இருக்க முடியாது” என்றார் அந்த நிபுணர்.
லெபனான் அரசு செய்தி நிறுவனமான என்என்ஏ (NNA), அதிபர் அவுனின் அறிக்கையை மேற்கோள் காட்டியது.
கத்தார், அதன் தலைமை மற்றும் மக்களுடன் தனது நாட்டின் ஒற்றுமையை அதில் வலியுறுத்தினார் அதிபர் அவுன்.
மேலும், ”இந்தத் தாக்குதல், இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களின் ஒரு பகுதியாகும். இது, பிராந்திய நாடுகளில் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் தகர்க்கும் நடவடிக்கை” என்று கூறியிருந்தார்.
ஹெஸ்போலா சார்பு கொண்ட அல்-அக்பர் பத்திரிகையும், இந்த தாக்குதலுக்கு எதிராக வெளியான பரவலான சர்வதேச மற்றும் அரபு கண்டனங்களை முன்னிலைப்படுத்தியது.
இது, “பிராந்தியத்தின் பாதுகாப்பை அச்சுறுத்தும் விரிவாக்கமாக கருதப்படுகிறது” என்று அது குறிப்பிட்டது.