பட மூலாதாரம், Getty Images
வளைகுடா நாடான கத்தாரைப் பாதுகாக்க அமெரிக்க ராணுவம் உட்பட அனைத்து முறைகளையும் பயன்படுத்துவதாக உறுதியளிக்கும் நிர்வாக உத்தரவில் அதிபர் டிரம்ப் இந்த வாரம் கையெழுத்திட்டார்.
எரிசக்தி வளம் மிக்க சிறிய நாடான கத்தார் மீது ஏற்படும் எந்த ஆயுதத் தாக்குதலையும் அமெரிக்கா மீதான நேரடி அச்சுறுத்தலாகக் கருதும், அமெரிக்காவும் கத்தாரும் நலன்களைப் பாதுகாக்கவும், அமைதியையும் உறுதியையும் மீட்கவும், அரசியல், பொருளாதார, தேவைப்பட்டால் ராணுவ ரீதியிலான நடவடிக்கைகள் உட்பட அனைத்து சட்டபூர்வமான முறைகளும் எடுக்கப்படும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கும் முக்கிய அரபு கூட்டாளியான கத்தாருக்கும் இடையிலான அசாதாரணமான பாதுகாப்பு ஒப்பந்தமான இது, நேட்டோ கூட்டணியின் அம்சங்களை பிரதிபலிக்கிறது.
இதைப் பார்த்து அந்தப் பிராந்தியத்தில் உள்ள அண்டை நாடுகள் பொறாமை கொள்ளலாம்.
சில ஆண்டுகளுக்கு முன், கத்தார் அதன் அண்டை நாடுகளால் பொருளாதார, அரசியல் புறக்கணிப்புக்கு உள்ளானது. ஆனால் இப்போது, மத்திய கிழக்கின் தூதர்கள் சந்திக்கும் முக்கிய இடமாக மாறியுள்ளது. சமீபத்தில் இஸ்ரேல்-ஹமாஸ் மத்தியஸ்தத்தில் கத்தார் முக்கிய பங்கு வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹமாஸ் தனது அரசியல் அலுவலகங்களை தோஹாவில் வைத்திருக்கிறது. இப்போது, திங்களன்று வெள்ளை மாளிகையில் டிரம்ப் அறிவித்த 20 அம்ச காஸா அமைதி திட்டத்தை ஆராய்ந்து வருகிறது. தோஹாவில் மத்திய கிழக்கின் மிகப்பெரிய அமெரிக்க விமானப்படை தளமான அல் உதெய்தும் இருக்கிறது.
கடந்த மாதம், இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்கள் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்தன. இதில் ஹமாஸின் சில கீழ்மட்ட உறுப்பினர்களும் ஒரு கத்தார் பாதுகாப்பு அதிகாரியும் உயிரிழந்தனர். இதனால், ஆளும் அல் தானி குடும்பம் கடும் கோபமடைந்தது. இதையடுத்து, டிரம்ப் கத்தாருக்கு அமெரிக்க பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்தார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில், அமெரிக்கா இரானின் அணுசக்தி நிலையங்களைத் தாக்கியதற்கு பழிவாங்கும் விதமாக, இரான் கத்தாரைத் தாக்கியது.
அமெரிக்காவுடன் இணைந்து ராணுவ தளங்களை நடத்தினாலும், எதிர்பார்த்த பாதுகாப்பு கிடைக்கவில்லை என்ற கவலை வளைகுடா அரபு நாடுகளிடையே பரவி வருகிறது.
டிரம்பின் உத்தரவை, “இரு நாடுகளின் நெருக்கமான பாதுகாப்பு கூட்டணியை வலுப்படுத்தும் முக்கிய படி” என்று கத்தார் வெளியுறவு அமைச்சகம் மகிழ்ச்சியுடன் வரவேற்றது.
ஆனால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நேரமும் நோக்கமும் பல கேள்விகளை எழுப்புகிறது.
அதேபோல் இது அமெரிக்காவில் எதிர்ப்பைச் சந்திக்கவும் வாய்ப்பு உள்ளது.
ஹமாஸ், டிரம்பின் காஸா திட்டத்தை ஆராயும் இந்த நேரத்தில், இந்த உத்தரவு பிராந்தியத்தின் உணர்ச்சிகரமான நிலையை பாதிக்கும் முக்கிய அடையாளமாக இருக்கிறது.
இஸ்ரேலுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் டான் ஷாபிரோ, தோஹாவிடம் உறுதிமொழி பெறுவதற்கு முன்பே டிரம்ப் கத்தாருக்கு பெரிய பரிசு கொடுத்ததாகச் சொல்கிறார்.
“ஹமாஸ் ‘ஆம்’ என்று சொல்லாவிட்டாலோ, அல்லது ‘இல்லை’ என்று சொன்னால், அவர்களை வெளியேற்றாவிட்டாலோ, கத்தாருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த பாதுகாப்பு உறுதிமொழிக்கு எந்தப் பொருளும் இல்லை,” என்கிறார் அவர்.
“ஹமாஸ் தலைமை கத்தாரில் வசிக்கும் போது, அவர்கள் எங்கு சென்றாலும் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள் என்று நெதன்யாகு எச்சரித்தபோதும், டிரம்ப் அவர்களுக்கு பாதுகாப்பு அளித்துவிட்டார்”என இஸ்ரேலிய செய்தித்தாள் ஹாரெட்ஸ் சுருக்கமாக விவரித்தது.
ஆனால், இஸ்ரேல் தனது எல்லைகளுக்கு அப்பால் தாக்குதலை அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்கா வழங்கும் பாதுகாப்பு நம்பகமாக இல்லை என்ற கவலைகளால் பதற்றமடைந்த வளைகுடா பிராந்தியத்தை உறுதிப்படுத்த இந்த உத்தரவு முக்கியம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
யூரேசியா குழுமத்தின் ஃபிராஸ் மக்சாத், இந்த நடவடிக்கை கத்தாரையும் மற்ற வளைகுடா நாடுகளையும் “ஏதோ ஒரு வகையில்” நிம்மதி அடையச் செய்கிறது என்கிறார். சவுதி அரேபியாவும் இதேபோல ஒரு உறுதிமொழி கேட்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.
“இவர்களை அமெரிக்காவின் பக்கம் வைத்திருப்பது அமெரிக்காவுக்கு முக்கியம்,” என பிபிசியிடம் தெரிவித்தார் மக்சாத்.
கத்தாருக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தின் வரம்பு விரிவாக உள்ளது. அந்த நாடு தாக்கப்படுமானால், அமெரிக்க ராணுவம் ஆதரவு தரும்.
இது நேட்டோவின் பிரிவு 5-ஐப் போல, ஒரு உறுப்பினர் தாக்கப்பட்டால் கூட்டு பதிலடி தர வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது.
ஆனால், இது வெள்ளை மாளிகையின் நிர்வாக உத்தரவாக வந்ததால், படைகளை அனுப்புவதற்கு முன் காங்கிரஸை கலந்தாலோசிக்க வேண்டும் என்ற போர் அதிகாரச் சட்டத்தை மீறுகிறது.
அதனால், இந்த உத்தரவுக்கு சட்ட ரீதியாக வலிமை இல்லாமல் போகலாம். எதிர்கால அதிபர் இதை மாற்றவோ ரத்து செய்யவோ முடியும். காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியினரும் இதை விமர்சிக்கலாம்.
டிரம்பின் “முதலில் அமெரிக்கா” கொள்கைக்கு எதிராக இது இருப்பதாக, அவரது சொந்த ஆதரவு தளத்தில் உள்ள சிலரும் எதிர்க்கின்றனர்.
டிரம்பிற்கு நெருக்கமான, செல்வாக்கு மிக்க தீவிர வலதுசாரி ஆர்வலரான லாரா லூமர், கத்தார் அமெரிக்காவிற்கு நட்பு நாடாக இருப்பதை விட அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறினார்.
டிரம்புக்கு விசுவாசமான வானொலி தொகுப்பாளர் மார்க் லெவின், இந்த உத்தரவு அமெரிக்காவின் பாரம்பரிய கூட்டணிகளைப் புரட்டிப்போடுவதாகக் கூறுகிறார். “கத்தாரில் ஹமாஸ் தலைவர்கள் இஸ்ரேலால் கொல்லப்பட்டால், நாம் இஸ்ரேலுடன் போருக்கு போவோமா?” என்ற கேள்வியையும் எழுப்பினார்.
மேலும், டிரம்ப் குடும்பத்துக்கும் கத்தாருக்குமான தனிப்பட்ட மற்றும் வணிகத் தொடர்புகளும் ஒரு பிரச்னையாக உள்ளது.
இதனால், பணக்கார வளைகுடா நாடான கத்தாருடன் அவர் எடுக்கும் வெளியுறவு முடிவுகள் பாதிக்கக்கூடும் என அவரது எதிர் தரப்பினர் கூறுகின்றனர்.
அவரது மகன்கள் எரிக் மற்றும் டொனால்ட் ஜூனியர் ஆகியோரால் நடத்தப்படும் டிரம்ப் அமைப்பு, ஏப்ரல் மாதம் கத்தாரில் ஒரு சொகுசு கோல்ஃப் ரிசார்ட்டைக் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டது, இதில் டிரம்ப் பிராண்டட் கடற்கரை வில்லாக்கள் மற்றும் கத்தார் அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒரு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கோல்ஃப் மைதானம் ஆகியவை அடங்கும்.
கத்தார், அமெரிக்காவிற்கு 747 ஜெட்லைனரை நன்கொடையாக வழங்கியுள்ளது. இதை ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திற்கு மாற்றாகப் பயன்படுத்த விரும்புகிறார் டிரம்ப். அவர் பதவியில் இருந்து விலகிய பிறகு, அந்த விமானம் சேவையிலிருந்து நீக்கப்பட்டு, இன்னும் கட்டப்படாத அவரது அதிபர் நூலகத்தில் காட்சிப்படுத்தப்படும் என கூறியுள்ளார்.
இந்நிலையில், வணிகத் தொடர்புகள் அல்லது கொள்கைகளில் எந்த தனிப்பட்ட நலன்களும் இல்லை என வெள்ளை மாளிகையும் கத்தார் அதிகாரிகளும் மறுத்துள்ளனர்.
ஆனால் கண்காணிப்புக் குழுவான Accountable.US-இன் டோனி கார்க், வணிகத்துக்கும் அரசியலுக்கும் இடையிலான எல்லையை, டிரம்ப் அழித்துவிட்டதாக குற்றம் சாட்டினார்.
“தனது ஆடம்பர கத்தார் கோல்ஃப் மைதானத்திற்கு அமெரிக்க ராணுவப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என நினைக்கும் டிரம்ப், வரி செலுத்தும் அமெரிக்க மக்கள் அதற்கான செலவை ஏற்க வேண்டும் என்று கருதுகிறார்.
அதே நேரத்தில், கத்தார் அரசாங்கத்துடன் தொடர்புடைய வணிக கூட்டாளிகளிடம் ஆதரவைப் பெறவும் முயல்கிறார்” என அவர் கூறினார்.
மே மாதம், தனது பிராந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக டிரம்ப் தோஹாவுக்குப் பயணம் செய்தார். அப்போது, பிராந்தியத்தின் சக்திவாய்ந்தவர்களுடனும் , செல்வந்தர்களுடனும் தங்க முலாம் பூசப்பட்ட அரண்மனைகளில் வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
ஆனால், தனது சொந்த நலன்களுக்காக அதிகாரத்தைப் பயன்படுத்துவதாக எழும் குற்றச்சாட்டுகளை, வெள்ளை மாளிகை எப்போதுமே கடுமையாக நிராகரித்து வருகிறது.
“அதிபர் டிரம்பின் சொத்துகள் அவரது குழந்தைகளால் நிர்வகிக்கப்படும் அறக்கட்டளையில் உள்ளன. இதில் எந்தவிதமான தனிப்பட்ட நலன்களும் இல்லை” என்று துணை பத்திரிகைச் செயலாளர் அன்னா கெல்லி பிபிசியிடம் குறிப்பிட்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.