போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தராகச் செயல்படுவதில் இருந்து கத்தார் விலகியுள்ளது.
இஸ்ரேலும் ஹமாஸும் பேச்சுவார்த்தைக்குத் ‘தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தும்’ போது தான் இந்தப்பணியை மீண்டும் துவங்க இருப்பதாகக் கத்தார் கூறியுள்ளது.
ஹமாஸ் பிரதிநிதிகள் கத்தாரில் இருப்பதை அமெரிக்கா இனி ஏற்காது என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ள நிலையில் கத்தார் இந்த முடிவை எடுத்துள்ளது.
காஸாவில் நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சமீபத்தியத் திட்டங்களை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
மத்தியஸ்தராகச் செயல்படுவதில் இருந்து முழுமையாக விலகியுள்ளதாகக் கத்தார் தெரிவித்துள்ளது. மேலும் தோஹாவில் உள்ள ஹமாஸின் அரசியல் அலுவலகம் ‘அதனுடைய நோக்கத்தை நிறைவேற்றவில்லை’ என்றும் அது ‘தவறு’ என்றும் குற்றம்சாட்டுகிறது கத்தார்.
10 நாட்களுக்கு முன்பே முடிவை கூறிய கத்தார்
கத்தார் வெளியுறவு அமைச்சகம் இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டது. “ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கான கடைசி முயற்சியாக இந்தச் சுற்றுப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே மத்தியஸ்தராகச் செயல்படுவதில் இருந்து கத்தார் விலகிக்கொள்ளும் என்று எல்லா தரப்பினருக்கும் 10 நாட்களுக்கு முன்பே கத்தார் தெரிவித்துவிட்டது,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் அனைத்து தரப்பினரும் தங்கள் விருப்பத்தையும் தீவிரத்தையும் காட்டினால் மட்டுமே கத்தார் தனது முயற்சிகளை மீண்டும் தொடங்கும்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஒபாமா நிர்வாகத்தின் வேண்டுகோளைத் தொடர்ந்து 2012-ஆம் ஆண்டு முதல் கத்தார் தலைநகரில் ஹமாஸின் அரசியல் அலுவலகம் இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
நல்லெண்ணத்துடன் உடன்பாடு பற்றிய பேச்சுவார்த்தையில் ஈடுபட மறுத்ததால் தோஹாவில் உள்ள அதன் அரசியல் அலுவலகத்தை மூடுமாறு அமெரிக்காவுடன் சேர்ந்து, கத்தார் ஹமாஸைக் கேட்டுக்கொள்ள ஒப்புக்கொண்டதாகப் பல செய்தி முகமைகள் சனிக்கிழமை (நவம்பர் 09) தெரிவித்தன.
ஆனால் இந்தத் தகவல்கள் தவறானவை என்று கத்தார் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் அதிகாரிகளும் இந்தக் கூற்றை நிராகரித்துள்ளனர்.
எங்கே செல்லும் ஹமாஸ்?
கத்தார் ஒரு சிறிய நாடு. ஆனால் மத்திய கிழக்கில் செல்வாக்கு மிக்கது. இது அமெரிக்காவின் முக்கியக் கூட்டாளியாக இருந்து வருகிறது. இங்கு ஒரு பெரிய அமெரிக்க ராணுவத் தளமும் உள்ளது. இரான், தாலிபன், ரஷ்யா உள்ளிட்டப் பல முக்கியமான பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தராக கத்தார் பங்கு வகித்துள்ளது.
காஸாவில், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே ஒரு வருடத்திற்கும் மேலாகப் போர் நீடித்து வருகிறது. இந்த நிலையில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான தற்போதைய பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா மற்றும் எகிப்துடன் கத்தாரும் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. எனினும், இரு தரப்புக்கும் இடையிலான இந்தப் பேச்சு வார்த்தைகள் இதுவரை வெற்றி பெறவில்லை.
கூடவே இந்த உறவுகளில் நிறைய மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன.
ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் இறந்த பிறகு ஹமாஸ் தோஹாவில் ஒரு சிறிய மண்டபத்தில் இரண்டு மணிநேர துக்க நிகழ்ச்சியை நடத்தியது, அதேசமயம் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் மரணத்திற்குப் பிறகு அது மூன்று நாள் நிகழ்ச்சியாக இருந்தது.
கடந்த அக்டோபர் மாதம் இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்படாமல் முடிந்தது. குறுகிய கால போர்நிறுத்தத்திற்கான முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்தது.
கத்தார் வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில், “தோஹாவில் ஹமாஸ் அலுவலகம் இருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் ஆதாரமற்றவை,” என்று கூறியுள்ளது.
“கத்தாரில் அலுவலகம் இருப்பதன் முக்கிய நோக்கம், கடந்த காலங்களில் போர்நிறுத்தங்களைச் செயல்படுத்த அது உதவியது போலவே இந்த முறையும் பேச்சுவார்த்தைக்கு உதவி செய்வதாகும்,” என்று அது தெரிவித்தது.
உடன்பாட்டை ரத்து செய்ததாக இஸ்ரேல் மீதும் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த வாரம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலெண்ட், பாதுகாப்புத் தலைவர்களின் ஆலோசனைக்குச் செவிமடுக்காமல் போர் நிறுத்தத்தை நிராகரித்ததாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது குற்றம் சாட்டியுள்ளார்.
ஹமாஸை கத்தாரில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையானது, ஜனவரியில் தன் பதவிக்காலம் முடிவடைவதற்குள் ஏதோ ஒரு விதமான சமாதான உடன்படிக்கையை எட்டச்செய்யும் பைடன் நிர்வாகத்தின் முயற்சியாகத் தோன்றுகிறது.
தோஹாவை விட்டு வெளியேறிய பிறகு ஹமாஸின் அரசியல் அலுவலகம் எங்கு இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. முக்கிய நட்பு நாடான இரானுக்கு அது செல்லக்கூடும். ஆனால் ஜூலை மாதம் தெஹ்ரானில் ஹமாஸின் முன்னாள் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்ட பின்னர் இஸ்ரேலிடமிருந்து அதற்கு அச்சுறுத்தல் உள்ளது. இதனுடன் மேற்கத்திய நாடுகளில் இருந்து இதுவரை கிடைத்துவந்த தூதாண்மை வசதிகளும் அங்கு அதற்கு கிடைக்காது.
துருக்கியின் பெயர் அடிபடுவது ஏன்?
துருக்கியும் அதற்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம். துருக்கி நேட்டோவில் உறுப்பினராகவும், சன்னி முஸ்லிம் பெரும்பான்மை நாடாகவும் உள்ளது. ஹமாஸுக்கு ஒப்பீட்டளவில் பாதுகாப்புடன் செயல்பட ஒரு இடத்தை துருக்கியால் வழங்க முடியும்.
கடந்த ஆண்டு ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே மற்றும் அவரது தூதுக்குழுவை இஸ்தான்புல்லில் துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்தோகன் வரவேற்றார். “காஸாவில் தேவைப்படுபவர்களுக்கு மனிதாபிமான உதவிகளைத் தடையின்றி வழங்குவது மற்றும் பிராந்தியத்திற்கான நியாயமான மற்றும் நீடித்த அமைதிச் செயல்முறை,” குறித்து இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
துருக்கி இந்த நடவடிக்கையை வரவேற்கக்கூடும். ஏனெனில் அது பெரும்பாலும் மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளுக்கு இடையே மத்தியஸ்தராக தன்னைப் பார்க்க விரும்புகிறது.
ஹமாஸ் குழுவின் முக்கியப் பிரமுகர்களான ஒஸாமா ஹம்தான், தாஹிர் அல்-நுனு மற்றும் பிற தலைவர்கள் செய்தி சேனல்களில் அடிக்கடி தோன்றுகின்றனர். பல மாதங்களாக அவர்கள் இஸ்தான்புல்லில் வசித்து வருகின்றனர்.
குறுகிய காலத்திற்கு மட்டுமே அவர்கள் அங்கு சென்றுவந்த முந்தைய வருகைகளிலிருந்து இது வேறுபட்டது.
தற்போது ஹமாஸ் தலைவர்களின் மிகப்பெரிய கவலை சொந்த பாதுகாப்பு என்று நம்பப்படுகிறது, ஏனெனில் கடந்த நான்கு மாதங்களில் அதன் உயர்மட்ட தலைவர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹமாஸ் தலைவர்களின் பாதுகாப்பு பிரச்சனை
ஜூலை மாதம் தெஹ்ரானில் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார். இதற்குப் பிறகு அக்டோபர் மாதம் காஸாவில் இஸ்ரேலிய ராணுவத் தாக்குதலில் யாஹ்யா சின்வர் இறந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர் யாஹ்யா சின்வர் என்று இஸ்ரேல் கூறி வருகிறது.
“இஸ்ரேலின் எதிர்காலப் படுகொலை முயற்சிகளை சமாளிக்க பகிரப்பட்ட தலைமையின் தற்காலிக உத்தியை ஹமாஸ் பின்பற்றுகிறது,” என்று ஐரோப்பிய வெளியுறவு கவுன்சில் கூறுகிறது.
“கத்தார் பிராந்தியத்தில் மிகப் பெரிய அமெரிக்க ராணுவத் தளம் இருக்கும்போதும் கூட இஸ்ரேலின் படுகொலை முயற்சிகளில் இருந்து ஹமாஸ் தலைவர்கள் கத்தாரில் பெற்ற பாதுகாப்பை வேறு எங்கும் அவர்கள் பெறமுடியாது,” என்று ஹெல்லியர் கருதுகிறார்.
போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேலிய அரசு கடைப்பிடித்த அணுகுமுறையால் அமெரிக்க அதிகாரிகள் ஏமாற்றமடைந்துள்ளதாகத் தோன்றும் நேரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 12-ஆம் தேதிக்குள் காஸாவுக்கு மேலும் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் அனுமதிக்கவில்லை என்றால், அந்த நாடு ‘சொல்லமுடியாத’ விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று இந்த ஆண்டு அக்டோபரில் அமெரிக்க வெளியுறவுச்செயலரும் பாதுகாப்புச் செயலரும் எச்சரித்தனர்.
கடந்த வாரம் ஐ.நா-வைச் சேர்ந்த பல அதிகாரிகள் வடக்கு காஸாவின் நிலைமை ‘மிகவும் மோசமாக உள்ளது’ என்று எச்சரித்தனர். ‘அங்கு பசி பட்டினிச் சூழல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது’ என்று கூறினர் என்று சுதந்திரமாகச் செயல்படும் பஞ்சம் தொடர்பான மறுஆய்வுக் குழு சனிக்கிழமை (நவம்பர் 09) தெரிவித்தது.
காஸாவில் ஹமாஸுக்கு எதிரான போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளன. காஸாவில் பாலத்தீனர்களுக்குக் கூடுதல் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும் மற்றும் ஏதோ ஒருவித உடன்பாடு எட்டப்பட வேண்டும் என்பதற்கும் அமெரிக்கா அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
ஆனால், சமரசத்திற்கான அமெரிக்காவின் முயற்சிகளில் அதிக தவறு உள்ளது என்று ஹெல்லியர் கூறுகிறார்.
“முதலில் ஒரு சிவப்பு கோட்டை வரைந்து, பின்னர் எந்த விளைவுகளும் தண்டனையும் இல்லாமல் அந்த சிவப்பு கோட்டை கடக்க நெதன்யாகுவை அனுமதித்தது அவரது துணிச்சலை அதிகப்படுத்தியுள்ளது. வரவிருக்கும் 10 வாரங்களில் நிலைமை மாறும் என்று நான் கருதவில்லை,” என்று அவர் தெரிவித்தார்.
எந்த வகையான அமெரிக்க முன்முயற்சியும் நெதன்யாகு மற்றும் அவரது வலதுசாரி கூட்டணியால் மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்பட்டது. தற்போது டொனால்ட் ட்ரம்ப் புதிய அதிபராக பதவியேற்கும் செய்தி அவர்களுக்கு மேலும் பலத்தை அளிக்கும்.
டிரம்பின் வருகையால் ஏதாவது மாறுமா?
மத்தியக் கிழக்கு பிராந்தியம் தொடர்பான டொனால்ட் டிரம்பின் அணுகுமுறை என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும் அவர் இஸ்ரேலை அதன் சொந்த நிபந்தனைகளின்படிச் செயல்பட அனுமதிக்கலாம் என்று நம்பப்படுகிறது.
“காஸாவில் தொடங்கியதை இஸ்ரேல் முடிக்க வேண்டும்,” என்று முன்னதாக டிரம்ப் கூறியிருந்தார்.
டிரம்ப் தனது முதல் பதவிக் காலத்தில் இஸ்ரேலுக்குச் சாதகமான பல நடவடிக்கைகளை எடுத்தார். அமெரிக்கத் தூதரகத்தை டெல் அவிவில் இருந்து ஜெருசலேமுக்கு மாற்றியதும் இதில் அடங்கும்.
தான் மீண்டும் பதவியேற்கும் முன் இந்தப் போர் முடிவடைவதைப் பார்க்கத் தான் விரும்புவதாக நெதன்யாகுவிடம் டிரம்ப் கூறியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
எப்படியிருந்தாலும், இஸ்ரேலிய அரசின் மீது அமெரிக்க நிர்வாகத்தின் அழுத்தம் அவ்வளவாக இருக்காது என்று தெரிகிறது.
எனவே தற்போதைய சூழ்நிலையில் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு ஹமாஸ் மீது அழுத்தம் கொடுப்பதே சிறந்த வழி என்று அமெரிக்கா நினைக்கலாம்.
ஆனால் இந்த உத்தி வேலை செய்யுமா இல்லையா என்பது முற்றிலும் கத்தாரைச் சார்ந்துள்ளது. நீண்ட காலமாக அமெரிக்காவின் நட்பு நாடாக இருந்து வரும் கத்தார், இந்த விஷயத்தில் அதற்கு ஆதரவாக இருக்க வாய்ப்புள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு