பட மூலாதாரம், @AnitaAnandOE
கனடாவின் அரசு செய்தி ஊடகமான சிபிசி நியூஸின் கூற்றுப்படி, மார்க் கார்னியின் லிபரல் கட்சி நாட்டின் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.
ஆனால், பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கத் தேவையான 172 இடங்களை அந்தக் கட்சி பெறுமா அல்லது வேறு கட்சியின் ஆதரவைப் பெற வேண்டுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
மார்க் கார்னி தமது வெற்றி உரையில், “நம் மீது ஆதிக்கம் செலுத்தும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்மை உடைக்க முயற்சிக்கிறார். அது ஒருபோதும் நடக்காது” என்று கூறினார் .
மேலும் “அமெரிக்காவுடனான எங்கள் பழைய உறவு இப்போது முடிந்துவிட்டது. அமெரிக்கா செய்த துரோகத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சியை நாங்கள் கடந்துவிட்டோம்” என்றார்.
மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த தேர்தல்களில் லிபரல் கட்சி மிகவும் பின்தங்கியிருந்தது, ஆனால் அமெரிக்காவுடன் வளர்ந்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் மார்க் கார்னி கட்சியைக் கைப்பற்றினார்.
இதன் பிறகு, அக்கட்சியின் பிரசாரத்தில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், கனடாவின் பிரதமராக ஒன்பது ஆண்டுகள் பதவி வகித்த ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியதை அடுத்து, மார்க் கார்னி லிபரல் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பிரதமரானார்.
ஜஸ்டின் ட்ரூடோவின் பதவிக் காலத்தில், இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகளில் மிகுந்த பதற்றம் நிலவியது, மேலும் இரு நாடுகளும் தங்கள் ராஜ்ஜீய உறவுகளை கணிசமாகக் குறைத்திருந்தன.
வெற்றிக்கு வழிவகுத்த டிரம்பின் கருத்துக்கள்
பட மூலாதாரம், Getty Images
பிபிசி செய்தியாளர் ஆண்டனி ஜெர்க்கரின் கூற்றுப்படி, டொனால்ட் டிரம்பின் கொள்கைகளும் லிபரல் கட்சியின் வெற்றியில் ஒரு பங்கைக் கொண்டிருந்தன.
டிரம்ப் பலமுறை கனடாவைத் தூண்டிவிட்டு, அதை அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாற்றுவதாக குறிப்பிட்டார், இது கனட வாக்காளர்களை ஒன்றிணைத்தது என்று அவர் கருதுகிறார்.
கனடா அரசியலில் லிபரல் கட்சி கடந்த சில மாதங்களாக மிகுந்த அழுத்தத்தில் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு வரை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது என்று கருதப்பட்ட அக்கட்சி, இப்போது நான்காவது முறையாக ஆட்சி அமைப்பதற்கான சூழலில் உள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மாதத் தொடக்கத்தில், தனது சொந்தக் கட்சியில் அழுத்தம் அதிகரித்து வந்ததால், ஜஸ்டின் ட்ரூடோ தேர்தலுக்கு சற்று முன்பு பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
கனடாவின் பொறுப்பை கார்னி ஏற்றுக்கொண்டதிலிருந்து, அவருக்கு முன்பு பதவி வகித்த ட்ரூடோவுடன் ஒப்பிடும்போது இந்தியாவுடனான உறவுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆண்டனி ஜெர்க்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவை ‘மிக முக்கியமானது’ என்று திங்களன்று கனடாவின் முன்னாள் வங்கியாளரும், பிரதமராக தேர்வாகி உள்ள மார்க் கார்னி விவரித்தார்.
மேலும் அவர் மீண்டும் பிரதமரானால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்த முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார்.
இந்தியாவைப் பற்றி கார்னியின் கருத்துக்கள் என்ன?
சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது கனடாவின் சேனல் ஒய் மீடியாவின் கேள்விக்கு பதிலளித்த கார்னி ,
“இந்தியாவுடனான உறவில் பதற்றம் இருப்பது தெளிவாகிறது, ஆனால் அது நம்மால் அல்ல. ஒருவருக்கொருவர் மரியாதையுடன் அதை மீண்டும் கட்டியெழுப்புவதே முன்னோக்கி செல்லும் வழி” என்றார் .
ஆட்சிக்கு வந்தால் இந்தியா-கனடா உறவுகளை மேம்படுத்த என்ன செய்வீர்கள் என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
“இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவு பல நிலைகளில் மிகவும் முக்கியமானது. தனிப்பட்ட உறவுகள், பொருளாதார மற்றும் மூலோபாய துறைகளிலும் கூட முக்கியமானது.
இந்தியாவுடன் தனிப்பட்ட உறவுகளைக் கொண்ட பல்வேறு மக்கள் கனடாவில் உள்ளனர்.
உலகப் பொருளாதாரம் ஆட்டம் கண்டு, புதிய வடிவம் பெறும் இந்த நேரத்தில், இந்தியா மற்றும் கனடா போன்ற நாடுகள் மிகப் பெரிய பங்கை வகிக்க முடியும் என்பதை எனது அனுபவத்திலிருந்து நான் கூறுகிறேன்,” என்று அவர் பதிலளித்தார்.
வர்த்தகப் போர் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றும் மார்க் கார்னி கூறினார்.
“வணிகப் போர் போன்ற எதிர்மறையாக நடந்த சம்பவங்கள், வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளன என்று நான் நினைக்கிறேன். பிரதமராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், அந்த வாய்ப்புகளில் ஒன்றாக இதை எடுத்துக்கொண்டு செயல்பட விரும்புகிறேன்,” என மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கை வாக்கெடுப்புக்கு சற்று முன்பு வெளியிடப்பட்டது. மேலும் இது கார்னியின் அரசாங்கம் இந்தியாவுடனான அதன் உறவுகளில் என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்பதற்கான ஒரு முக்கிய அறிகுறியாகவும் உள்ளது.
இந்தியா குறித்த கார்னியின் பார்வை
பட மூலாதாரம், Getty Images
ஆனால் கார்னி இது போன்ற கருத்தை தெரிவிப்பது முதல் முறை அல்ல.
கடந்த மார்ச் மாதம், அவர் லிபரல் கட்சியின் தலைவராகும் போட்டியில் இருந்தபோது, ’இந்தியாவுடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது’ பற்றிப் பேசியிருந்தார் .
மார்க் கார்னி பிரதமரானால், இந்தியாவுடனான வர்த்தக உறவுகளை மீட்டெடுப்பதாகக் கூறியிருந்தார்.
ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளுடன் கனடாவின் வர்த்தக உறவுகளைப் பன்முகப்படுத்துவது குறித்தும் அவர் பேசினார்.
“ஒத்த எண்ணம் கொண்ட நட்பு நாடுகளுடன் தனது வர்த்தக உறவை பன்முகப்படுத்த கனடாவுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. இந்தியாவுடனான நமது உறவை மீண்டும் கட்டியெழுப்ப நமக்கு ஒரு வாய்ப்பு உள்ளது.
அந்த வணிக உறவைச் சுற்றி பகிரப்பட்ட மதிப்பு உணர்வு இருக்க வேண்டும், நான் பிரதமரானால் , அந்த வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளேன்,” என்று கார்னி கூறினார்.
மார்ச் மாதத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தின் போது, ‘கனடாவுக்கு புதிய நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் தேவை’ என்று அவர் கூறியிருந்தார்.
இது தொடர்பாக, அவர் இந்தியாவைக் குறிப்பிட்டிருந்தார்.
கனடாவில் உள்ள இந்திய மக்களுடன் தொடர்புகொள்வதில் மார்க் கார்னி நம்பிக்கை கொண்டுள்ளார்.
இந்த மாதம் ஏப்ரல் 6 ஆம் தேதி, அவர் டொராண்டோவில் உள்ள ஒரு இந்து கோவிலுக்குச் சென்று, ராம நவமி அன்று மக்களை வாழ்த்தினார்.
இந்த மாதம் ஏப்ரல் 14 ஆம் தேதி, பைசாக்கிக்கு வாழ்த்து தெரிவிக்க ஒட்டாவா சீக்கிய சங்க குருத்வாராவுக்குச் சென்ற கார்னி, அதன் படங்களை தனது எக்ஸ் கணக்கில் பகிர்ந்து கொண்டார்.
ட்ரூடோவின் பதவிக் காலத்தில் இந்தியா-கனடா உறவுகள்
பட மூலாதாரம், Getty Images
ஜஸ்டின் ட்ரூடோ பதவிக் காலத்தின் கடைசி கட்டத்தில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகளில் பதற்றம் நிலவியது.
கனடாவில் காலிஸ்தான் ஆதரவுத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதே இரு நாடு உறவுகளில் ஏற்பட்ட கசப்புக்குக் காரணம்.
இந்த வழக்கில், நிஜ்ஜாரின் கொலையில் இந்திய உளவுத்துறையின் தொடர்புக்கு ‘நம்பகமான ஆதாரங்கள்’ இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டை இந்தியா மறுத்திருந்தது. அன்றிலிருந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமான நிலைக்குச் சென்றன.
இரு நாடுகளும் பரஸ்பரம் தங்கள் தூதர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டன.
தற்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மிக மோசமான கட்டத்தை கடந்து செல்கின்றன.
ட்ரூடோ இந்தியா மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தபோது, கனடாவில் உள்ள சீக்கிய சமூகத்தின் வாக்குகளைப் பெறுவதற்காக ட்ரூடோ இந்தியா மீது இவ்வளவு ஆக்ரோஷத்தைக் காட்டுகிறார் என்றும் கூறப்பட்டது.
காலிஸ்தான் பிரிவினைவாதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசு நீண்ட காலமாக கனடாவிடம் கேட்டு வருகிறது.
காலிஸ்தான் ஆதரவு வாக்கு வங்கி அரசியலை மனதில் கொண்டு, ட்ரூடோ அரசாங்கம் அதன் மீது மென்மையாக நடந்து கொள்கிறது என்று இந்தியா நம்புகிறது.
வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் இதைக் கூறியுள்ளார்.
இந்தியா குறித்த ட்ரூடோவின் கொள்கைகளை விமர்சிப்பவர்கள், காவல்துறையினரின் விசாரணை முடிவடைவதற்கு முன்பே ட்ரூடோ இந்தியா மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகக் கூறினர்.
இதுவரை, ட்ரூடோவுடன் ஒப்பிடும்போது இந்தியாவைப் பற்றிய கார்னியின் கருத்துக்கள் மிகவும் நேர்மறையாக உள்ளன.
ஆனால் நிஜ்ஜார் போன்ற வழக்குகளில் மார்க் கார்னியின் அணுகுமுறை பற்றி அதிகம் தெரியவில்லை என்பதும் உண்மை.
ஆனால், இந்தியாவுடனான உறவுகளை மீண்டும் சரி செய்வதற்கு ஆதரவாக மார்க் கார்னி உள்ளார் என்பது தெளிவாகிறது.
மார்க் கார்னி யார்?
பட மூலாதாரம், Getty Images
இங்கிலாந்து வங்கியின் முன்னாள் ஆளுநராக இருந்தவர் மார்க் கார்னி .
மத்திய வங்கியின் 300 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றில், உயர் வங்கிப் பொறுப்பை வகித்த முதல் பிரிட்டன் அல்லாதவராகவும் கார்னி உள்ளார்.
2008 நிதி நெருக்கடியின் போது கனடா வங்கியின் ஆளுநராக தனது நாட்டை அவர் முன்னர் வழிநடத்தினார்.
பெரும்பாலான பிரதமர் வேட்பாளர்களைப் போல் அல்லாமல், கார்னி இதற்கு முன்பு ஒருபோதும் அரசியல் பதவிகளை வகித்ததில்லை.
இருப்பினும், கடந்த மார்ச் மாதம் வெளியேறும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை மாற்றுவதற்கான லிபரல் கட்சியின் தேர்தலில் அவர் எளிதாக வெற்றி பெற்றார்.
இப்போது அவர் வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு மீண்டும் பிரதமராக உள்ளார்.
உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளைக் கையாண்டதில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றி பெருமையாகக் கூறியுள்ள கார்னி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை எதிர்த்து நிற்கக்கூடிய தலைவராக கனடா மக்களால் பார்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முழுவதும் பயணம் செய்து, நியூயார்க், லண்டன் மற்றும் டோக்கியோ போன்ற இடங்களில் அவர் பணிபுரிந்துள்ளார்.
மேலும் அவர் ஐரிஷ் மற்றும் கனேடிய குடியுரிமை இரண்டையும் பெற்றுள்ளார்.
2018 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் குடியுரிமையைப் பெற்ற கார்னி, சமீபத்தில் பிரதமருக்கு கனட குடியுரிமை மட்டுமே இருக்க வேண்டும் என்று கருதுவதால் தனது பிரிட்டிஷ் மற்றும் ஐரிஷ் குடியுரிமையை கைவிட விரும்புவதாகக் கூறினார்.
கார்னியின் தந்தை ஒரு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்தவர்.
உதவித்தொகை பெற்று ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்குச் சென்று படித்த கார்னி, 1995 ஆம் ஆண்டு, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
“உள்நாட்டுப் போட்டியால், ஒரு நாட்டின் பொருளாதாரத்தை தேசிய அளவில் அதிக போட்டித்தன்மையுடன் மாற்ற முடியுமா?” என்பது தான் அவரது முனைவர் பட்ட ஆய்வறிக்கையின் தலைப்பு.
அமெரிக்கா விதிக்கும் வரிகளை எதிர்கொண்டு, நாட்டுக்குள் வர்த்தகத்தை சீராக்கும் அவரது திறனைச் சோதிக்கும் முக்கியமான பிரச்னை இது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.