0
கனடா மற்றும் சீனாவுக்கிடையேயான வர்த்தக உறவுகளில் புதிய திருப்பமாக, இரு நாடுகளும் குறைந்த வரி விகிதங்களை அறிவித்துள்ளன. பெய்ஜிங்கில் நடைபெற்ற முக்கிய சந்திப்பைத் தொடர்ந்து, கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) மற்றும் சீன ஜனாதிபதி சி ஜின்பிங் (Xi Jinping) இந்த முடிவை வெளியிட்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தின் படி, மார்ச் 1ஆம் திகதிக்குள் சீனா, கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கனோலா எண்ணெய் மீதான வரியை 85 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைக்க ஒப்புக் கொண்டுள்ளது. இதேவேளை, கனடா, சீன மின்சார வாகனங்களுக்கு “மிகவும் சாதகமான நாடு” என்ற நிலை வழங்கி, 6.1 சதவீத வரியை விதிக்க சம்மதித்துள்ளதாக பிரதமர் கார்னி தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக நீடித்த பதற்றம் மற்றும் பரஸ்பர வரி விதிப்புகளுக்குப் பிறகு, இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் உறவில் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இந்த முயற்சியை சி ஜின்பிங் பாராட்டியதுடன், சுமார் ஒரு தசாப்தத்திற்கு பிறகு சீனாவிற்கு விஜயம் செய்த முதல் கனேடியத் தலைவர் என்ற வகையில், இந்தப் பயணம் கார்னிக்கான அரசியல் வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த வரிகள் காரணமாக உருவான வர்த்தக நிச்சயமற்ற சூழ்நிலையைத் தொடர்ந்து, கனடா தனது வர்த்தக உறவுகளை பன்முகப்படுத்த முயன்று வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே சீனாவுடன் இந்த நெருக்கம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. சீனாவுடனான உறவுகள் சமீப காலங்களில் “கணிக்கக்கூடியதும், மரியாதைமிக்கதுமாக” இருந்ததாக கார்னி குறிப்பிட்டார்.
அதே நேரத்தில், மனித உரிமைகள், தேர்தல் தலையீடு மற்றும் தேசிய பாதுகாப்பு போன்ற விடயங்களில் கனடாவின் “சிவப்பு கோடுகள்” தெளிவாக வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் வலியுறுத்தினார். இந்தப் பயணம், அமெரிக்க வரி விதிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள பிற நாடுகளுக்கும் ஒரு முன்மாதிரியாக அமையக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
மறுபுறம், சீனா தன்னை ஒரு நிலையான மற்றும் நடைமுறை உலக நண்பராக முன்வைக்க முயற்சித்து வருகிறது. அண்மைய வாரங்களில் தென் கொரிய ஜனாதிபதி மற்றும் ஐரிஷ் பிரதமர் பெய்ஜிங்கிற்கு விஜயம் செய்துள்ள நிலையில், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி தலைவர்களும் விரைவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
“உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது; இன்றைய முடிவுகள் எதிர்கால தசாப்தங்களை வடிவமைக்கும்,” என கார்னி கூறினார். சந்திப்பின் போது, சீனா–கனடா உறவுகள் உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு உதவும் என சி ஜின்பிங் தெரிவித்தார்.