பட மூலாதாரம், Mike Campbell/NurPhoto via Getty Images
பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறது. சில நேரங்களில் பைலட்டுகளின் கல்வித் தகுதி பற்றியும், சில நேரங்களில் நிறுவனத்தை தனியார்மயமாக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் பற்றியும் விமர்சனங்கள் எழுகின்றன.
இதற்கிடையில், பி.ஐ.ஏ ஊழியர்கள் கனடாவில் “காணாமல் போவதாக” தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வார சனிக்கிழமை, கனடாவின் டொரான்டோவில் இருந்து லாகூருக்குச் செல்லவேண்டிய பிகே 798 விமானத்தில் பணிப்பெண்ணாக பணிபுரிந்த ஆசிப் நஜாம், சரியான நேரத்திற்கு விமான நிலையத்திற்கு வரவில்லை என்பதை பி.ஐ.ஏ செய்தித் தொடர்பாளர் அப்துல்லா கான் உறுதிப்படுத்தினார்.
அவரைத் தொடர்பு கொண்டபோது, தனக்கு ‘உடல்நலக்குறைவு’ ஏற்பட்டதால் வர முடியவில்லை என்று அவர் கூறியதாக பி.ஐ.ஏ தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டவிரோதமாக “காணாமல் போனது” தொடர்பாக (illegal disappearance) அந்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பி.ஐ.ஏ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இத்தகைய சம்பவங்கள் இதற்கு முன்பும் நடந்துள்ளன
பி.ஐ.ஏ விமானக்குழுவில் இருந்து ஒருவர், கனடாவிலிருந்து திரும்பாமல் போன சம்பவம் முதல் முறையாக நடைபெறவில்லை. இதற்கு முன்பும், பல விமானப் பணியாளர்கள் அங்கே காணாமல் போன பல சம்பவங்கள் நடந்துள்ளன.
இதேபோன்ற ஒரு சம்பவம் பிப்ரவரி 29, 2024 அன்று வெளிச்சத்திற்கு வந்தது.
பி.ஐ.ஏ விமானம் பிகே 783 மூலம் கராச்சியில் இருந்து டொரான்டோவுக்கு வந்த பி.ஐ.ஏ விமானப் பணியாளர் ஜிப்ரான் பலோச், பிகே 782 விமானத்தில் திரும்ப வேண்டும் என்று திட்டமிடப்பட்டிருந்தது. டொரான்டோ பியர்சன் விமான நிலையத்தின் டெர்மினல் 3-இல் விமானம் புறப்படத் தயாராக இருந்தது.
ஆனால் ஜிப்ரானைக் “காணவில்லை”.
விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டிய நேரத்தில் அவர் ஹோட்டலிலிருந்து வெளியே வரவில்லை.
பாகிஸ்தான் செய்தித்தாள் டான் தெரிவித்துள்ளபடி, பின்னர் ஊழியர்கள் அவரது ஹோட்டல் அறையில் சென்று தேடியபோது, அவரைக் “காணவில்லை”. அதிகாரிகளால் அவரைப் பற்றிய எந்த தடயத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அத்தகவல் கூறுகிறது.
இந்தச் சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, அதே நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்த மரியம் ராசாவும் டொரான்டோவிலுள்ள தனது ஹோட்டல் அறையிலிருந்து இதேபோல் ‘காணாமல் போனார்’ என செய்தி வெளியாகியது.
நிறுவன அதிகாரிகள் அந்த அறையில் அவரது ஆடைக்கு அருகில் “நன்றி பி.ஐ.ஏ” என்று எழுதப்பட்ட ஒரு குறிப்பைக் கண்டனர் என சாமா டிவி கூறியது.
அதேபோல், 2024ம் ஆண்டு ஜனவரி மாதத் தொடக்கத்தில் விமானப் பணிப்பெண் ஃபைசா முக்தரும் திட்டமிட்டபடி கனடாவிலிருந்து பாகிஸ்தானுக்கு திரும்பவில்லை.
2023 ஆம் ஆண்டு ஏழு பி.ஐ.ஏ விமானக் குழுவினர் “காணாமல் போனார்கள்”என டான் பத்திரிகை செய்தி வெளியிட்டது.
அதேபோல், 2022-ஆம் ஆண்டு ஐந்து விமான பணியாளர்கள் எந்தச் சுவடுமின்றி “காணாமல் போனார்கள்” என்று எக்ஸ்பிரஸ் டிரிப்யூன் தெரிவித்துள்ளது.
பிஐஏ என்ன கூறுகிறது?
பட மூலாதாரம், AAMIR QURESHI/AFP via Getty Images
கடந்த சில ஆண்டுகளாக கனடாவுக்கு சென்ற பிஐஏவின் பல விமான பணியாளர்கள் பாகிஸ்தானுக்குத் திரும்பவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் முன்பும் நடந்துள்ளன, ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் இது அதிகரித்துள்ளது என பி.ஐ.ஏ செய்தித் தொடர்பாளர் அப்துல்லா கான் கூறியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தானில் மோசமடைந்து வரும் பொருளாதார சூழல் மற்றும் பி.ஐ.ஏ தனியார்மயமாக்கப்படுவதற்கான முயற்சி நடைபெறுவது போன்றவை இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
கடந்த இருபது ஆண்டுகளில் இந்தத் திசையில் பாகிஸ்தான் எடுத்து வைத்திருக்கும் முதல் முயற்சியாகவே பி.ஐ.ஏவின் தனியார்மயமாக்கல் பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் 7 பில்லியன் டாலர் திட்டத்தின் கீழ், இந்த நடவடிக்கை அரசுக்கு அவசியமானதாகியுள்ளது.
ஆனால், கனடாவின் அகதி சட்டம் பரவலாக இருப்பதால், அதன் சலுகைகளை ஊழியர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று பி.ஐ.ஏ கூறுகிறது.
ஆனால் இந்த காலகட்டத்தில் மற்ற எந்த விமான நிறுவனத்தின் விமான பணியாளர்களும் கனடாவில் காணாமல் போனதாக எந்தத் தகவலும் இல்லை.
ஆனால் இந்தப் பிரச்னை பிஐஏ ஊழியர்கள் அல்லது பாகிஸ்தானோடு மட்டும் தொடர்புடையது அல்ல. மற்ற பிற நாடுகளிலிருந்தும் மக்கள் கனடாவின் அகதிச் சட்டங்களை பயன்படுத்திக்கொள்கின்றனர் என்று கனடாவில் குடியேற்றத்தை கண்காணிக்கும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
விதிகளை மாற்றிய பிஐஏ
2021-ஆம் ஆண்டு, பிஐஏ தனது விதிகளை மாற்றி, சர்வதேச விமானப் பயணங்களின் போது வெளிநாட்டு விமான நிலையங்களில் விமானப் பணியாளர்கள் தங்களது பாஸ்போர்ட்டுகளை கட்டாயமாக ஒப்படைக்க வேண்டும் என்று அறிவித்தது.
மறுபுறம், இளம் விமானப் பணிப்பெண்கள் மற்றும் விமானப் பணியாளர்களை சர்வதேச விமானங்களுக்கு அனுப்ப மாட்டோம் என்றும் பிஐஏ தீர்மானித்தது.
ஆனால், இந்த நடவடிக்கைகள் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. இந்த விவகாரத்தை விசாரிக்க அந்நிறுவனம் ஒரு பிரிவை உருவாக்கியுள்ளது மற்றும் குழுவினரையும் கண்காணித்து வருகிறது என்று அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
“இந்த விவகாரம் குறித்து நாங்கள் கனடா அதிகாரிகளுடனும் பேசியுள்ளோம். குழுவினரின் அனைத்து தகவல்களையும் அவர்களுக்கு வழங்கியுள்ளோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால், இத்தனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், ஏன் பிஐஏ ஊழியர்கள் ‘காணாமல் போவதற்கு’ விரும்பும் நாடாக கனடா மாறியுள்ளது?
இந்தக் கேள்விக்கு விடை தெரிந்துகொள்ள, கடந்த ஆண்டு பிபிசி டொரான்டோவில் உள்ள அதிகாரிகள், பிஐஏ மற்றும் பிற விமான நிறுவன ஊழியர்கள், கனடாவில் குடியேற்ற வழக்குகளில் பணிபுரியும் வழக்கறிஞர் மற்றும் குடியேற்ற ஆலோசகரைச் சந்தித்து பேசியது.
கனடா ஏன் விருப்பமான நாடாக உள்ளது?
பட மூலாதாரம், Arlyn McAdorey/Toronto Star via Getty Images
டொரான்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையம், கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள பீல் பிராந்திய காவல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
காணாமல் போன பிஐஏ விமான குழுவினர் குறித்து ஏதேனும் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று பிபிசி பீல் காவல்துறையிடம் கேள்வி எழுப்பியது.
“எங்கள் விமான நிலைய பிரிவுடன் உறுதிப்படுத்தியுள்ளோம். இந்த விவகாரத்தில் எங்களுக்கு காணாமல் போனவர் தொடர்பான எந்த புகாரும் வரவில்லை” என்று பீல் காவல்துறை செய்தித் தொடர்பாளர் ரிச்சர்ட் சின் பிபிசியிடம் மின்னஞ்சல் மூலம் தெரிவித்தார்.
“பொதுவாக, ஒருவர் காணாமல் போனதாக புகார் பதிவு செய்ய குடும்பத்தினர் அல்லது அவரை அறிந்தவர்கள் காவல்துறையைத் தொடர்புகொள்வார்கள். விமானப் பணியாளர்கள் புகலிடம் கோருவதற்காக ‘காணாமல் போனால்’, கனடா எல்லை சேவைகள் அமைப்பு (CBSA) தொடர்பு கொள்ளப்படலாம்” என்றும் அவர் கூறினார்.
ஆனால் சிபிஎஸ்ஏ செய்தித் தொடர்பாளர் கரேன் மார்டெல் பிபிசிக்கு மின்னஞ்சல் மூலம் அளித்த தகவலில், “தனிநபர்கள் அல்லது அவர்களின் வழக்குகள் குறித்து சிபிஎஸ்ஏ எந்த கருத்தும் தெரிவிக்காது. எல்லை மற்றும் குடியேற்றத் தகவல்கள் தனிப்பட்டவை, அதனால் அவை தனியுரிமைச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன” என்றார்.
கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் துறையும் (IRCC) இதேபோன்ற பதிலை அளித்தது.
தனியுரிமைச் சட்டங்களின் காரணமாக தனிப்பட்ட வழக்குகள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று அத்துறை மின்னஞ்சல் மூலம் பிபிசியிடம் தெரிவித்தது.
வெளிநாட்டு விமானங்களின் பணியாளர்களுக்கான விதிகள் என்ன?
கனடாவுக்குச் செல்லும் விமானங்களில் பணிபுரியும் விமான குழுவினருக்கு பொருந்தும் சட்டங்களை கரேன் மார்டெல் விளக்கினார்.
குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை (திருத்தம்) சட்டத்தின்படி, ஒரு விமானக் குழுவினர் கனடாவுக்குள் நுழையவோ, தங்கவோ தற்காலிக விசா தேவையில்லை. ஆனால், கனடா மற்றும் அந்த விமானம் புறப்பட்ட நாட்டுக்கிடையில் விசா தொடர்பான ஒப்பந்தம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.
சிபிஎஸ்ஏ செய்தித் தொடர்பாளர் கரேன் மார்டெல் கூறுகையில், “கனடா வந்த பிறகு வெளிநாட்டு விமானக் குழுவினர் தங்கள் வேலையை விட்டு வெளியேறினால், அதைப் பற்றி விமான நிறுவனம் சிபிஎஸ்ஏவுக்குத் தெரிவிக்க வேண்டும்” என்றார்.
ஒருவர் திடீரென காணாமல் போகும் போது, அவர் தனது பணியிலிருந்து விலகிவிட்டார் என்பதற்கான வலுவான சான்றுகள் இருக்கும்போது இந்த விதி பொருந்தும்.
கனடாவின் விதிமுறைகளின் படி, “ஒரு ஊழியர் தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டாலோ, அல்லது 72 மணி நேரத்திற்குள் தானாகவே கனடாவை விட்டு செல்லவில்லை என்றாலோ, விமான நிறுவனம் கட்டாயமாக கனடா அதிகாரிகளுக்கு தகவல் தர வேண்டும்”.
அதேபோல், “சரியான ஆவணங்கள் இல்லாமல் யாரையும் கனடாவுக்குள் அழைத்து வரக் கூடாது என்பதை விமான நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும். இல்லையெனில் விதிமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படலாம்” என்றும் சிபிஎஸ்ஏ செய்தித் தொடர்பாளர் கூறினார்.
கனடாவில் ‘காணாமல் போகும்’ ஊழியர்கள்
பட மூலாதாரம், ADRIAN DENNIS/AFP via Getty Images
கனடாவில் பிஐஏ ஊழியர்கள் எப்படி இவ்வளவு எளிதாக ‘காணாமல் போகிறார்கள்’ என்பதைப் புரிந்துகொள்ள, பிபிசி பிஐஏ மற்றும் பிற விமான நிறுவனங்களின் தற்போதைய மற்றும் முன்னாள் ஊழியர்களிடம் பேசியது.
கனடாவில் உள்ள சட்டங்கள் மற்றும் வலுவான வலையமைப்பு காரணமாக, இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பது எளிதல்ல என்பதை அவர்கள் அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள்.
அதேபோல் இந்த விவகாரத்தில் ஆவணங்கள் மற்றொரு சிக்கலாக உள்ளன.
விமான ஊழியர்களின் பயண ஆவணங்கள் சாதாரண பயணிகளின் ஆவணங்களைக் காட்டிலும் வித்தியாசமானவை.
அவர்களுக்கு விசா தேவையில்லை. அதற்கு பதிலாக, பொதுவான அறிவிப்பைப் பயன்படுத்தி அவர்கள் பயணம் செய்யலாம்.
சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் கூற்றுப்படி, இந்த ஆவணத்தில் விமானக் குழு உறுப்பினர்களின் விவரங்கள், விமானப் பதிவு எண், விமானம் எப்போது வந்து எப்போது புறப்படும் என்பது போன்ற தகவல்கள் அடங்கும்.
இந்த ஆவணம், விமான குழுவினர் குறிப்பிட்ட நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என்பதற்கான ஒரு வகையான “உத்தரவாதம்” போல குடியேற்ற அதிகாரிகளுக்குப் பயன்படுகிறது.
“ஒரு குழு உறுப்பினர் காணாமல் போனால், அவர்கள் அதைப் பற்றி யாருக்கும் தெரியப்படுத்த மாட்டார்கள். இது அனைத்தும் மிகவும் ரகசியமாக நடைபெறுகிறது. அவர்கள் ஏற்கெனவே அந்த நாட்டில் உள்ளவர்களுடன் இதைப் பற்றி பேசி வைத்திருக்கிறார்கள்” என்று பி.ஐ.ஏ. அதிகாரி ஒருவர் கூறினார்.
“இது ஒரு நாளில் எடுக்கப்படும் முடிவு அல்ல, மாறாக, கனடாவில் உள்ள முகவர்களின் வலையமைப்புடன் பல மாதங்களாக திட்டமிட்டு ஆவணங்களைத் தயாரித்த பிறகு அவர்கள் இந்த நடவடிக்கையை எடுக்கிறார்கள்” என்று அவர் விளக்குகிறார்.
“பிஐஏவில் உள்ள ஒழுங்குமுறை செயல்முறைகள் மற்ற நிறுவனங்களைப் போல கடுமையாக இல்லை. இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என தனியார் விமான நிறுவனத்தைச் சேர்ந்த வணிக விமானி ஒருவர் பிபிசியிடம் கூறினார்.
இது தவிர, பாகிஸ்தானின் பொருளாதாரம் மற்றும் பிஐஏ தொடர்பான நிச்சயமற்ற சூழ்நிலையும் இதற்குப் பின்னால் உள்ள காரணங்களாக உள்ளன.
உலகம் முழுவதும் விமான குழு உறுப்பினர்கள் நீண்ட தூர விமானப் பயணங்களின் போது, நாட்டுக்குள் பயணம் செய்வதற்கோ அல்லது உறவினர்களைச் சந்திப்பதற்கோ எந்தத் தடையும் இல்லை என்று விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் ஏன் கனடா தேர்ந்தெடுக்கப்படுகிறது?
கனடா குடிவரவு வழக்கறிஞர் மெஹ்ரீன் ராசா கடந்த 20 ஆண்டுகளாக கனடாவில் அகதிகள் தொடர்பான வழக்குகளில் பணிபுரிந்து வருகிறார்.
அவர் ஒன்டாரியோவில் சவுத் ஏசியன் சட்ட கிளினிக் ஒன்றை நிறுவியுள்ளார். இந்த அமைப்பு, வேறொரு நாட்டில் புகலிடம் கோர முடியாத மக்களுக்கு உதவுகிறது.
“பிஐஏ குழு உறுப்பினர்கள் தொடர்பான செய்திகளை நாங்களும் பார்த்திருக்கிறோம். கடந்த சில ஆண்டுகளில், பாகிஸ்தான் உட்பட பல நாடுகளில் இருந்து மக்கள், பல்வேறு காரணங்களுக்காக கனடாவில் புகலிடம் கோர விண்ணப்பிப்பது அதிகரித்துள்ளது” என்று மெஹ்ரீன் ராசா பிபிசியிடம் தெரிவித்தார்.
“கனடாவில், புகலிடம் கோருவோரை எந்த சூழ்நிலையிலும் சந்தேகத்துடன் நடத்தக்கூடாது என்று சட்டம் கூறுகிறது. இதைப்பற்றி நாங்களும் பயிற்சிகள் நடத்துகிறோம். சிலர் இங்கு வந்து திருமணம் செய்து கொண்டு, தங்கள் துணையின் உதவியுடன் வாழ்க்கைத் துணை விசா அல்லது நிரந்தர விசாவைப் பெறவும் வாய்ப்புள்ளது” என்று அவர் கூறுகிறார்.
கனடாவின் குடிவரவு மற்றும் அகதிகள் வாரியத்தின் தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டு, மொத்தம் 144,000 புகலிடம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.
இது 2022ம் ஆண்டை விட 57% அதிகம்.
இதில் பாகிஸ்தானிலிருந்து மட்டும் 4,832 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இது கடந்த ஆண்டின் 1,894 விண்ணப்பங்களை விட 60 சதவிகிதம் அதிகமாகும்.
குடிவரவு ஆலோசகர் அப்துல்லா பிலால் கடந்த பல ஆண்டுகளாக கனடாவில் குடிவரவு ஆலோசனை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
பிபிசியிடம் பேசிய அவர், “கனடா சட்டத்தின் கீழ், நீங்கள் நாட்டுக்குள் நுழையும் இடத்திலிருந்து புகலிடம் கோரலாம். அதன் பிறகு, நாட்டுக்குள் நுழைந்த பிறகு, நீங்கள் ஒருவருடன் தங்கி, புகலிடம் கோரி வழக்குத் தாக்கல் செய்யலாம்” என்றார்.
மேலும், “இந்த முழு செயல்முறையும் நடைபெற சில ஆண்டுகள் ஆகலாம். ஏதேனும் காரணத்தால் உங்களுக்கு புகலிடம் வழங்கப்படாவிட்டால், நீங்கள் மேல்முறையீடு செய்யலாம்”என்றும் அவர் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், Getty Images
புகலிட நடைமுறை குறித்து அப்துல்லா பிலால் கூறுகையில், “அரசாங்கம் முதலில் விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்து, பின்னர் அகதிகள் பாதுகாப்பு பிரிவுக்கு அனுப்புகிறது. உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், நீங்கள் மேல்முறையீட்டு பிரிவுக்குச் செல்லலாம். இந்த நேரத்தில், நீங்கள் வேலை செய்யலாம், அதேபோல் இலவச மருத்துவ சிகிச்சை போன்ற வசதிகளையும் பெற்றுக்கொள்ளலாம். பலர் இங்கே திருமணம் செய்துகொண்டு, நிதியுதவியும் பெற்றுக்கொள்கிறார்கள்” என்றார்.
கனடாவில் நீங்கள் அகதிகளுக்கான பல்வேறு சேவைகளை அணுகலாம் என்றும், சில சந்தர்ப்பங்களில் இந்த செயல்முறைக்கான செலவுகளை ஈடுகட்ட மத அமைப்புகளின் உதவியையும் நீங்கள் பெறலாம் என்றும் அவர் கூறுகிறார்.
மெஹ்ரீன் மற்றும் பிலால் இருவரும், புகலிடம் கோருபவர்கள் பல நேரங்களில் ‘தவறான காரணங்களை’ கூறுவதாகவும், இது உண்மையில் புகலிடம் பெற தகுதியுடையவர்களைப் பாதிக்கிறது என்றும் கூறினர்.
“புகலிடம் கோருவதற்கான காரணங்களில் மதம், பாலின விருப்பம், அரசியல் காரணங்கள் அல்லது குடும்ப காரணங்களால் குறிவைக்கப்படுவது அடங்கும்” என்று மெஹ்ரீன் ராசா பிபிசியிடம் தெரிவித்தார்.
“கனடாவில் புகலிடம் கோரும் செயல்முறை இப்போது வணிகமயமாக்கப்பட்டு வருகிறது. மக்கள் பார்வையாளர் விசாக்களில் வந்து பின்னர் புகலிடம் கோரி விண்ணப்பிக்கிறார்கள்”என்கிறார் அப்துல்லா பில்லா.
பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, இந்தியா, இரான், நைஜீரியா, மெக்சிகோ போன்ற பிற நாடுகளைச் சேர்ந்தவர்களும் கனடாவில் தஞ்சம் புக விரும்புகிறார்கள், ஆனால் இதற்கான காரணங்களை உறுதிப்படுத்துவது கடினம் என்று அவர் கூறுகிறார்.
மேலும், “யாராவது தங்களை தன்பாலின ஈர்ப்பாளர்கள் என்று சொன்னால், அதை எப்படி உறுதிப்படுத்துவது? மதச் சிறுபான்மை காரணமாக அச்சுறுத்தப்படுகிறோம் என்பன போன்ற கூற்றுகளையும் சரிபார்ப்பது சிரமம்தான்,” என்று அவர் விளக்குகிறார்.
இந்தப் பிரச்னையைத் தீர்க்க பிஐஏ என்ன செய்துள்ளது?
இந்த விவகாரம் குறித்து, பெயர் வெளியிட விரும்பாத ஒரு பிஐஏ நிர்வாக அதிகாரி பிபிசியிடம் பேசினார்.
அவர் கூறுகையில், “இத்தகைய சம்பவங்களைத் தடுக்க, ஊழியர்களிடமிருந்து பத்திரங்கள் (bond) பெறும் நடைமுறை தொடங்கப்பட்டது. ஆனால் அது எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை.” என்றார்.
ஊழியர்களிடமிருந்து பத்திரங்கள் பெறப்பட்டன. ஆனால் ஊழியர்கள் ‘காணாமல் போவது’ நிற்கவில்லை என்று அவர் கூறினார்.
“காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யும் யோசனையும் பரிசீலிக்கப்பட்டது, ஆனால் அது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்று கருதப்பட்டதால் அது கைவிடப்பட்டது. நீதிமன்றம் அதை ஒரு நிமிடத்தில் நிராகரித்திருக்கும்,” என்றும் பிஐஏ அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “இவ்வாறு காணாமல் போகும் ஊழியர்களின் பெயர்களை ‘ரெட்-ஃப்ளை லிஸ்ட்’ல் சேர்க்க வேண்டும் எனவும் யோசனை வந்தது. இருப்பினும், இந்த மக்கள் நாடு கடத்தப்படாததால் இது கடினம். சில ஆண்டுகளில் அவர்கள் வேறு நாட்டின் பாஸ்போர்ட்டை பெற்றுவிட்டு அதில் பயணம் செய்ய தொடங்குகிறார்கள். அவர்களைத் தடுக்க முடியாது”என்றும் அவர் கூறுகிறார்.
விமான நிலையத்தில் பாஸ்போர்ட்களை ஒப்படைக்கும் செயல்முறை பற்றி மெஹ்ரீன் ராசா கூறுகையில், “புகலிடம் கோருபவர்கள் முதலில் அழிப்பது பாஸ்போர்ட் தான், எனவே அதனால் எந்தப் பயனும் இல்லை” என்கிறார்.
மேலும், “இந்த பிரச்னையைத் தீர்க்க, இரு நாடுகளின் அதிகாரிகளும் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.” என்றும் அவர் கூறுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு