• Wed. Nov 27th, 2024

24×7 Live News

Apdin News

கனமழை எதிரொலி: புழல் ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 672 கன அடியாக அதிகரிப்பு | inflow of rainwater from the catchment areas to Puzhal Lake has increased to 672 cubic feet per second

Byadmin

Nov 27, 2024


திருவள்ளூர்: கனமழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து புழல் ஏரிக்கு வரும் மழை நீர்வரத்து விநாடிக்கு 672 கன அடியாக அதிகரித்துள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் புதன்கிழமை காலை 6 மணி வரை சராசரியாக 3 செ.மீ., பெய்துள்ளது. இம்மழையால் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளான புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 5 ஏரிகளுக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து மழைநீர் வந்து கொண்டிருக்கிறது.

அம்மழைநீர், புதன்கிழமை காலை நிலவரப்படி, புழல் ஏரிக்கு விநாடிக்கு 672 கன அடி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 450 கன அடி, பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 100 கன அடி, சோழவரம் ஏரிக்கு விநாடிக்கு 36 கன அடி, கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரிக்கு விநாடிக்கு 15 கன அடி என, வந்துக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், பூண்டி ஏரிக்கு, விநாடிக்கு 190 கன அடி கிருஷ்ணா நீரும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 200 கன அடி நீர் பூண்டி ஏரியிலிருந்தும் வந்துக் கொண்டிருக்கிறது.

ஆகவே, 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீர் இருப்பு 2,349 மில்லியன் கன அடியாகவும், 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு 2,198 மில்லியன் கன அடியாகவும், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு 470 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அதே போல், 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீர் இருப்பு 117 மில்லியன் கன அடியாகவும், 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரியின் நீர் இருப்பு 301 மில்லியன் கன அடியாகவும் இருக்கிறது என நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



By admin