நெல்லை: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது. குற்றாலம் அருவிகளில் 3-வது நாளாக இன்றும் வெள்ளப் பெருக்கு நீடித்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இன்று காலை 8 மணிவரையிலான 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நாலுமுக்கு பகுதியில் 101 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. இதுபோல் மாஞ்சோலை, ஊத்து பகுதிகளில் தலா 80, காக்காச்சியில் 90 மி.மீ. மழை பெய்திருந்தது.
143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 88.10 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,613 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 200 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 93.90 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 712 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணை மூடப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் பெய்துவரும் தொடர் மழையால் மேலப்பாளையம் அருகே குறிச்சி மருதுபாண்டியர் தெருவில் முத்தையா என்பவரது வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி அவரது தாயார் மாடத்தியம்மாள் (75) பலத்த காயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை தீவிரமடைந்துள்ளது. நேற்று மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இதனால் வயல்களில் தண்ணீர் தேங்கியது. நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் தென்காசியில் 99 மி.மீ. மழை பெய்தது.
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் மூன்றாவது நாளாக வெள்ளப் பெருக்கு நீடித்தது. இதனால் குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் குளிக்க விதிக்கப்பட்ட தடை இன்றும் தொடர்ந்தது. தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் குற்றாலம் அருவிகளுக்கு சென்று வெள்ளப் பெருக்கை பார்த்துச் சென்றனர்.