பட மூலாதாரம், Getty Images
ஜூன் 25, 1983: கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி. முதலிரு உலகக் கோப்பையையும் வென்றிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை அன்று இந்திய அணி எதிர்த்தது விளையாடியது அந்த இரு உலகக் கோப்பைகளிலும் சேர்த்து ஒரேயொரு போட்டியில் மட்டுமே வென்றிருந்தது இந்தியா.
அதனால் தான் அன்று வெஸ்ட் இண்டீஸ் ஜெயிக்கும் என்றே பெரும்பாலானவர்கள் கருதினார்கள். “நாங்கள் லார்ட்ஸ் மைதானத்துக்குள் நுழைந்தபோது, இந்தியா வெற்றி பெற 50/1 (அதாவது ஒரு ரூபாய்க்கு 50 ரூபாய்), 100/1 என்ற வாய்ப்புகள் வரை புக்கிக்கள் வழங்கினார்கள்” என்று கூறினார் ‘தி நைன் வேவ்ஸ் – தி எக்ஸ்டிரார்டினரின் ஸ்டோடி ஆஃப் இந்தியன் கிரிக்கெட்’ புத்தகத்தை எழுதிய மிஹிர் போஸ்.
அந்த அளவுக்குக் குறைத்து மதிப்பிடப்பட்டிருந்த இந்திய அணி, எதிர்பாராததை அரங்கேற்றி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணியை அவ்வாறு முன்னின்று வழிநடத்தி சாம்பியனாக்கியிருந்தார் கபில் தேவ்.
“நாங்கள் உலகக் கோப்பையை வெல்வோம் என்று ஒருவர் நம்பியிருந்தாரெனில் அது ஒரேயொருவர் மட்டும்தான் – கபில் தேவ்” என்று 83 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது கூறியிருந்தார் அந்த உலகக் கோப்பை வென்றிருந்த இந்திய அணியில் இடம்பெற்றிருந்த கே.ஶ்ரீகாந்த்.
ஶ்ரீகாந்த், கவாஸ்கர் உள்பட பல வீரர்களும் கபில்தேவ் அந்த அணியில் ஏற்படுத்திய தாக்கம் எந்த அளவுக்கு அணியின் நம்பிக்கையை உயர்த்தியது என்று சொல்லியிருக்கிறார்கள்.
அப்படி இந்தியாவின் மிகமுக்கிய வெற்றியின் மிகமுக்கியக் காரணமாக விளங்கிய கபில்தேவுக்கு ஜனவரி 6ம் தேதி பிறந்த நாள். ஆனால், அவர் ஒரு உலகக் கோப்பையை வென்றுகொடுத்த கேப்டனாக மட்டுமல்ல, பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் சோபித்த பன்முகத்தன்மை கொண்டவர். நான்கு துறைகளில் இந்தியாவுக்கு சிறந்த பங்களிப்பைக் கொடுத்து இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பெரும் தாக்கம் ஏற்படுத்திய ஆல்ரவுண்டர் அவர்.
நம்பிக்கையூட்டிய கேப்டன்
இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை மற்றவர்களுக்கு மட்டுமல்ல, பெரும்பாலான இந்திய வீரர்களுக்குமே இருந்திருக்கவில்லை.
“அணியின் ஒரு சில வீரர்கள் அமெரிக்காவில் விடுமுறையை செலவு செய்யத் திட்டமிட்டிருந்தோம். அமெரிக்கா போகும் வழியில் உலகக் கோப்பை ஆடிச் செல்லலாம் என்கிற மனநிலையில் இருந்தோம். நாங்கள் உலகக் கோப்பை வெல்வோம் என்றெல்லாம் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. அனைத்துக்கும் காரணம் கபில் தேவின் தீர்க்கமான மனநிலை தான். அதன் காரணமாக, எங்களுடைய மனநிலையுமே மாறியது” என்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்போர்ஸ்டார் பத்திரைகைக்குக் கொடுத்த பேட்டியில் கூறியிருந்தார் ஶ்ரீகாந்த்.
இந்தியா அப்போது பலமான அணியாக இருந்திருக்கவில்லை. 1975 மற்றும் 1979 உலகக் கோப்பை தொடர்களில் அவர்களின் செயல்பாடு மிகவும் ஏமாற்றகரமானதாக இருந்தது. அப்போது டெஸ்ட் அங்கீகாரம் பெற்றிடாத இலங்கை அணியிடம் கூட இந்தியா தோற்றிருந்தது. ஆனால், கபில் தேவ் அந்த அணியின் அணுகுமுறையை மாற்றினார். வெற்றி பெறமுடியும் என்ற நம்பிக்கையை தொடர் தொடங்கியதில் இருந்தே அணிக்கு விதைத்தார் அவர்.
பட மூலாதாரம், Getty Images
1983 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் மட்டுமல்ல, அந்தத் தொடரின் முதல் போட்டியிலுமே வெஸ்ட் இண்டீஸை இந்தியா வென்றிருந்தது. அந்த வெற்றிதான் இந்தியாவுக்கு பெரும் நம்பிக்கையைக் கொடுத்தது. அந்தப் போட்டிக்கு முன்பு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸை ஒருமுறை ஒருநாள் போட்டியில் (கயானா, மார்ச் 1983) வீழ்த்தியிருந்தது.
அதனால், உலகக் கோப்பையிலும் அவர்களை வெல்ல முடியும் என்று நம்பிக்கை கொடுத்திருக்கிறார் கபில் தேவ். அந்த நம்பிக்கை களத்திலும் பிரதிபலிக்க, நடப்பு சாம்பியனை வீழ்த்தி அந்த உலகக் கோப்பையை கைப்பற்றியது இந்தியா. அந்த கயானா போட்டியில் இந்தியா வெற்றி பெற்றபோது ஆட்ட நாயகன் விருதை வென்றதே கபில் தேவ் தான்!
2019-ஆம் ஆண்டு சென்னை வந்திருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் அளித்த பேட்டியில், “யாரும் எதிர்பாராத வகையில் இந்திய அணி 1983-ல் கோப்பை வென்றது. அந்த வெற்றிக்கான முக்கியக் காரணம் என்று எதை நினைக்கிறீர்கள்?” என்று அவரிடம் கேட்டேன்.
அதற்கு அவர் சொன்ன பதில் – கபில் தேவ்.
அதுபற்றி மேலும் பேசிய ரிச்சர்ட்ஸ், “கபில் தான் இந்திய அணியின் முகத்தை மொத்தமாக மாற்றியவர். அப்போதைய இந்திய அணி அவ்வளவு தைரியமான அணி கிடையாது. வீரர்கள் எளிதில் தளர்ந்துவிடுவார்கள். அதற்கு முன் அவர்களிடம் பெரிதாகப் போராட்ட குணத்தைப் பார்த்ததில்லை. ஆனால், கபில் தேவ் அதையெல்லாம் மாற்றினார். களத்தில் தன் வீரர்கள் சோர்ந்துபோகவே விடமாட்டார். அந்த மொத்த அணியின் திறனையும் அந்த ஒற்றை ஆள் தூக்கி நிறுத்தினார். நிச்சயம் அவர்தான் அந்த உலகக் கோப்பையை இந்தியா வெல்ல முக்கியக் காரணம்” என்று கூறினார்.
வீரர்களுக்கு நம்பிக்கை கொடுத்தது, கடினமான சூழ்நிலைகளில் உத்வேகம் கொடுத்தது என டிரஸ்ஸிங் ரூம் முதல், ஆடுகளம் வரை ஒரு கேப்டனாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார் கபில் தேவ்
மீட்டெடுக்கும் பேட்டர்
பட மூலாதாரம், Getty Images
மிடில் ஆர்டரில் ஒரு மிகச் சிறந்த அதிரடி பேட்டராக விளங்கினார் கபில் தேவ். கடினமான சூழ்நிலைகளில் பலமுறை இந்திய அணியைத் தன் பேட்டிங்கால் மீட்டெடுத்திருக்கிறார் அவர். 1983 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் அவர் அடித்த 175 ரன்கள் அதற்கு மிகச் சிறந்த உதாரணம்.
வெற்றி அவசியம் என்ற நிலையில் ஆடிய போட்டியில், இந்தியா 17/5 என்ற மிகமோசமான நிலையில் இருந்தது. அந்தப் போட்டியில் முதலில் நிதானமும், பின்னர் அதிரடியும் காட்டிய கபில் தேவ், 175 ரன்கள் விளாசினார். அப்போது ஒருநாள் போட்டிகளில் அடிக்கப்பட்ட தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் இதுதான். வேறு எந்த வீரரும் 25 ரன்களைக் கூடத் தாண்டாத அந்தப் போட்டியில் தனி ஆளாக அவ்வளவு பெரிய ஸ்கோர் எடுத்து இந்தியாவை வெற்றி பெறவைத்தார் அவர்.
கபில் தேவின் பேட்டிங் என்றாலே எப்போதும் இந்த இன்னிங்ஸ் தான் அதிகம் பேசப்படும். ஆனால், இதுபோல் பல்வேறு முக்கியமான இன்னிங்ஸ்களை அவர் இந்தியாவுக்கு ஆடியிருக்கிறார்.
1990-ஆம் ஆண்டு லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடியது இந்தியா. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 653 ரன்கள் எடுக்க, இந்திய அணி ஃபாலோ ஆனைத் தவிர்க்க 454 ரன்கள் எடுக்கவேண்டியிருந்தது. ஆனால், 430/9 என்ற நிலையில் இருந்தது. ஃபாலோ ஆனைத் தவிர்ப்பது கடினம் என்று கருதப்பட்டிருந்த நிலையில், எட்டீ ஹெம்மிங்ஸ் பந்துவீச்சில் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்களை விளாசினார் கபில் தேவ். அதனால், சரியாக ஃபாலோ ஆனைத் தவிர்க்கத் தேவைப்பட்ட 454 ரன்களை எட்டியது இந்தியா. அப்படியான தருணங்களில் மிகவும் தைரியமாக ஆடக்கூடிய பேட்டர் அவர்.
இதுபோல். பல சிறப்பான செயல்பாடுகளை பேட்டிங்கில் கொடுத்துள்ளார் கபில் தேவ். இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தரவுகளின்படி அவரது ஓடிஐ ஸ்டிரைக் ரேட் 95.07. டெஸ்ட் போட்டிகளில் 8 சதங்களும், 27 அரைசதங்களும் விளாசியிருக்கிறார் அவர்.
துடிப்பான ஃபீல்டர்
கபில் தேவ் களத்தில் மிகவும் துடிப்பாக இருப்பவர். அந்தக் காலகட்டத்திலேயே மிகச் சிறந்த ஃபீல்டர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர். 1983 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விவியன் ரிச்சர்ட்ஸ் கேட்சை அவர் பிடித்தது இன்னும் மிகச் சிறந்த உலகக் கோப்பை தருணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
மதன் லால் பந்துவீச்சில், ரிச்சர்ட்ஸ் ஓங்கி அடிக்க, பந்து ‘டீப் மிட்விக்கெட்’ திசைக்குச் சென்றது. மிட் விக்கெட்டில் நின்றுகொண்டிருந்த கபில் தேவ், வேகமாக பின்னால் ஓடி அந்த கேட்சைப் பிடித்தார். அவர் பிடித்தவுடனேயே பல ரசிகர்கள் உத்வேகத்தில் களத்துக்குள் ஓடிவந்து அவரைப் பிடித்துக் கொண்டாடினார்கள். அந்த அளவுக்கு சிறப்பாக இருந்தது அந்த கேட்ச்.
2019 நேர்காணலில் இது பற்றி பேசிய ரிச்சர்ட்ஸ், “உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், அந்த இடத்தில் நான் அமர்நாத், கவாஸ்கர் போன்றவர்களில் யாரையாவது பார்த்திருந்தால், ‘நிச்சயம் எனக்கு வாய்ப்பு இருக்கிறது’ என்று நினைத்திருப்பேன். ஆனால், அந்த இடத்தில் கபில்தேவைப் பார்த்த நொடியே எனக்கு வாய்ப்பு இல்லை என்பதை முடிவு செய்துவிட்டேன். அவர் கேட்சைப் பிடிப்பதற்கு முன்பே என் கிளவுஸ்களை நான் கழற்றி நடக்கத்தொடங்கிவிட்டேன். ரசிகர்கள் எழுப்பிய பெரும் சத்தம், அவர் அதைப் பிடித்துவிட்டார் என்பதை உறுதி செய்தது. கபில் நிச்சயம் அதைத் தவறவிடமாட்டார் என்று எனக்குத் தெரியும்” என்று கூறினார்.
எதிரணியில் ஆடியவர்களுக்கும் கபில் தேவ் எப்படிப்பட்ட வீரர் என்பது புரிந்திருந்தது. அந்த உலகக் கோப்பையில் மட்டுமே 7 கேட்சுகள் பிடித்திருந்தார் அவர்.
பட மூலாதாரம், Getty Images
பெரும் தாக்கம் ஏற்படுத்திய வேகப்பந்துவீச்சாளர்
கபில் தேவ், உலகக் கோப்பை என்று பேசும்போது அவரது தலைமைப்பன்பு, பேட்டிங், ஃபீல்டிங் போன்றவை அதிகம் பேசப்படும். ஆனால், இந்திய கிரிக்கெட்டுக்கு வேகப்பந்துவீச்சாளராக அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது.
1983 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியில் அந்த அணி 320 ரன்கள் குவித்தபோது, 43 ரன்கள் மட்டுமே கொடுத்து, 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார் கபில் தேவ். அதேபோல், இங்கிலாந்துக்கு எதிரான மிகமுக்கிய அரையிறுதியிலும் அவர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மொத்தம் அந்தத் தொடரில் 2.91 என்ற எகானமியில் 12 விக்கெட்டுகள் கைப்பற்றினார் அவர்.
இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் அவ்வளவாக தாக்கம் ஏற்படுத்திடாத அந்தக் காலகட்டத்திலேயே டெஸ்ட் அரங்கில் 434 விக்கெட்டுகள் வீழ்த்தினார் கபில் தேவ். ஒருகட்டத்தில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற சாதனையுமே அவர் வசம்தான் இருந்தது.
கபில் தேவுக்கு முன்புவரை சர்வதேச போட்டிகளில் ஒரு இந்திய பௌலர் அவ்வளவு வேகமாகப் பந்துவீசி உலகம் பார்த்திருக்கவில்லை என்று கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் கூறுகிறார்கள்.
2020-ல் வெளியான ஒரு ஐசிசி வீடியோவில் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே இப்படிக் கூறுகிறார்: “கபில் தேவ் 1977/78 காலகட்டத்தில் இந்திய அணிக்குள் நுழைகிறார். அதற்கு முன்பெல்லாம் இந்திய அணிக்குப் புதிய பந்தில் வீசியவர்கள் சுமார் 120 kmph, 125 kmph வேகத்தில் பந்துவீசிக்கொண்டிருந்தனர். பல தருணங்களில் ஸ்பின்னர்கள் கூட புதிய பந்தில் பந்துவீசியிருக்கிறார்கள். அதன்பிறகு, கபில் தேவ் வருகிறார். 1979-ல் அவர் இங்கிலாந்தில் கால்பதித்தபோது மிகவும் துல்லியமாக செயல்படுகிறார். அவுட் ஸ்விங் வீசுகிறார். அப்போது, ஒரு இந்திய இளைஞன் வேகமாக பந்துவீசலாம் என்று கனவு காண்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. நான் அதைப் பார்த்தபோது, ‘ஒரு இந்தியர் வெளிநாட்டு வீரருக்கு பௌன்ஸ் வீசுகிறாரா’ என்று நினைத்து ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்” என்று கூறினார்.
இந்திய கிரிக்கெட்டுக்கு கபில் தேவின் மிகச் சிறந்த பங்களிப்பே அதுதான் என்று கூறினார் ஹர்ஷே போக்ளே.
பட மூலாதாரம், Getty Images
மறக்கவேண்டிய பக்கங்கள்
மறக்க முடியாத கபில் தேவின் கிரிக்கெட் வாழ்க்கையில் சில மறக்க முடியாத பக்கங்களும் இருக்கின்றன. 1999/2000 காலகட்டத்தில் இந்தியாவில் கிரிக்கெட் சூதாட்டப் புகார் பூதாகரமாக வெடித்தது. அதில் கபில் தேவின் பெயரும் அடிபட்டது.
தி கார்டியன் செய்திப்படி, 1994 சிங்கர் கோப்பை போட்டியின்போது சரியாக விளையாடவேண்டும் என்று சொல்லி கபில் தேவ் தனக்கு பணம் கொடுக்க முயன்றதாக மனோஜ் பிரபாகர் குற்றம்சாட்டினார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அப்போது இந்திய தேசிய அணியின் பயிற்சியாளராக இருந்த கபில்தேவ் அந்தப் பதவியில் இருந்து விலகினார். அசாருதீன், ஜடேஜா போன்ற வீரர்கள் மீதான குற்றம் அப்போது நிரூபிக்கப்பட்டிருந்தாலும், கபில் தேவ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை.

2007-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐசிஎல்) தொடரின் நிர்வாகக் குழு தலைவர் பொறுப்பை ஏற்றிருந்தார் கபில் தேவ். அது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) ஒப்புதல் பெறாமல் தொடங்கப்பட்டதால், கபில் தேவ் உள்பட அதில் தொடர்புகொண்டிருந்த அனைத்து வீரர்களின் பென்ஷன் தொகையையும் பிசிசிஐ ரத்து செய்தது.
அதேபோல், தேசிய கிரிக்கெட் அகாடெமி (என்சிஏ) தலைவர் பொறுப்பில் இருந்தும் கபில் தேவ் நீக்கப்பட்டார். 2012-ஆம் ஆண்டு ஐசிஎல் நிர்வாகத்திலிருந்து கபில் தேவ் வெளியேறியதால் மீண்டும் பிசிசிஐ அமைப்புக்குள் அவரால் வர முடிந்தது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு