அமெரிக்க அதிபர் தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பல நிபுணர்களும் இந்த தேர்தல் உலகின் பல்வேறு பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகின்றனர்.
இந்த தேர்தலில், அமெரிக்க அதிபராக ஏற்கனவே ஒருமுறை வெற்றி பெற்று மற்றொரு முறை தோல்வியை தழுவிய டொனால்ட் டிரம்ப் குடியரசுக் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார்.
மற்றொரு புறம், தொடக்கத்தில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஜோ பைடனே களம் காணவிருந்தார். ஆனால் பலரும் அவருடைய ஆரோக்கியம் குறித்து கேள்வி எழுப்பியதால், தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கினார். அவருடைய ஆட்சியில் துணை அதிபராக பதவி வகித்து வரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தற்போது ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக களத்தில் டிரம்பின் சவாலை எதிர்கொள்கிறார்.
பிபிசி ஹிந்தி சேவையின் வாராந்திர சிறப்பு நிகழ்வான ‘தி லென்ஸில்’ இந்த வாரம் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்த விவாதம் நடைபெற்றது.
இந்தியாவின் பார்வையில் யார் சிறந்த வேட்பாளர்? இந்தியாவில் அமர்ந்திருக்கும் ஒருவருக்கு இந்த தேர்தல் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?
மத்திய கிழக்கில் நடைபெற்றுவரும் போர் இந்த தேர்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? அமெரிக்கவாழ் இந்தியர்களுக்கு இந்த தேர்தல் எத்தகைய தாக்கத்தை தரும்? என்று இந்த வார நிகழ்வில் விவாதிக்கப்பட்டது.
பிபிசி செய்தியாளர்களான திவ்யா ஆர்யா, தர்ஹப் அஸ்கர் ஆகியோர் அமெரிக்காவில் இருந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சர்வதேச அரசியல் குறித்து ஆர்வம் காட்டும் பிரிட்டனில் உள்ள மூத்த பத்திரிகையாளர் சிவ்காந்த், இந்தியா – அமெரிக்கா உறவு பற்றிய நிபுணரும் முன்னாள் இந்திய தூதரக அதிகாரியுமான ஸ்கந்த் தயாள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை கலெக்டிவ் நியூஸ்ரூமின் ஊடகவியல் இயக்குநர் முகேஷ் ஷர்மா தொகுத்து வழங்கினார்.
வெற்றியைத் தீர்மானிக்கும் “எலக்டோரல் காலேஜ்”
கலிஃபோர்னியா அதிகபட்சமாக 54 எலக்டோரல் காலேஜ் வாக்குகளைக் (Electoral) கொண்டுள்ளது. அலாஸ்கா மாகாணம் 3 எலக்டோரல் காலேஜ் வாக்குகளையே கொண்டுள்ளது.
இந்த தேர்தலில் கலிஃபோர்னியாவும் அலாஸ்காவும் ஒரே விதமான செல்வாக்கை கொண்டிருக்கவில்லை என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது. தேர்தல் வியூகங்கள், ஒவ்வொரு மாகாணத்திலும் நிலவும் அரசியல் போக்குகளை மனதில் கொண்டே வகுக்கப்படுகின்றன.
அதிபர் யார் என்பதை தீர்மானிக்கும் மாகாணங்கள் என்று அழைக்கப்படும் ‘Swing States’, அமெரிக்க அதிபர் தேர்தலில் மிகவும் முக்கியமானவை. இந்த மாகாணங்களில் உள்ள வாக்காளர்கள் யாரைத் தேர்வு செய்வார்கள் என்று யூகிக்க இயலாது. எனவே தேர்தல் முடிவுகளில் செல்வாக்கு செலுத்தக் கூடிய மாகாணங்களாக இவை திகழ இயலும்.
இதனை விவரிக்கும் திவ்யா ஆர்யா, “கலிஃபோர்னியா தற்போது ஜனநாயகக் கட்சியின் பக்கம் சாய்கிறது. ஆனால் டெக்ஸாஸ் மாகாணம் குடியரசுக் கட்சிக்கு சாதகமான மாகாணமாகவே கருதப்படுகிறது.” என்கிறார்.
இந்த தேர்தலில் முடிவைத் தீர்மானிக்கும் ஆறு மாகாணங்களை பட்டியலிடுகிறார் திவ்யா. அவரின் கூற்றுப்படி, விஸ்கான்சின், நெவேடா, மிச்சிகன், வடக்கு கரோலினா, அரிஸோனா மற்றும் பென்சில்வேனியா ஆகிய மாகாணங்கள் அடுத்த அதிபர் யார் என்பதை தீர்மானிப்பதில் முக்கியமானவை.
ஆகவே, இந்த ஆறு மாகாணங்களிலும் வேட்பாளர்கள் தங்களின் முழு கவனத்தையும் செலுத்தியுள்ளனர் என்கிறார் திவ்யா ஆர்யா.
அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் மொத்தமாக 538 எலக்டோரல் காலேஜ் வாக்குகள் உள்ளன. வெற்றியை உறுதி செய்ய வேட்பாளர்கள் பெரும்பான்மை எண்ணிக்கையான 270 அல்லது அதற்கு மேற்பட்ட எலக்டோரல் காலேஜ் வாக்குகளை பெற வேண்டும்.
இரண்டு மாகாணங்களை தவிர, இதர மாகாணங்களில் அதிக வாக்குகளை பெறும் வாக்காளர்களுக்கு தேர்வாளர் குழு வாக்குகள் முழுமையாக வழங்கப்படும்.
கடந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான ஜோ பைடன் 306 எலக்டோரல் காலேஜ் வாக்குகளைப் பெற்றார். குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்புக்கு 232 எலக்டோரல் காலேஜ் வாக்குகள் கிடைத்தன.
அமெரிக்காவைப் பொருத்த வரை அனைத்து மாகாணங்களிலும், எலக்டோரல் காலேஜ் வாக்குகள் ஒரே எண்ணிக்கையில் இல்லை.
இந்தியா உட்பட உலக நாடுகள் இந்த தேர்தலை உன்னிப்பாக கவனிப்பது ஏன்?
இந்தியா உட்பட ஒட்டுமொத்த உலகமும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவின் தாக்கத்தை எதிர்கொள்ளும். இந்தியாவின் கண்ணோட்டத்தில், அமெரிக்கா இந்தியாவை எவ்வாறு அணுகுகிறது என்பதைப் பொருத்தே பல்வேறு விசயங்கள் நடைபெறுகின்றன.
“அமெரிக்கா முன்பு போல் தற்போது பலமாக இல்லை. ஆனாலும் அமெரிக்காவின் ஆதிக்கம் சர்வதேச நிறுவனங்களில் இன்னும் இருக்கிறது” என்று கூறுகிறார் ஷிவ்காந்த்.
இந்தியா போன்ற பெரிய நாடுகளின் கருத்துகள் முறையாக கேட்கப்படுவதற்கும், முறையான பிரதிநிதித்துவம் கிடைக்கவும் ஐ.நாவில் மாற்றங்களைக் கொண்டுவர இந்தியா பல காலமாக முயற்சி செய்து வருகிறது. ஆனால் அமெரிக்கா இதற்கு தயாரானால் மட்டுமே இது சாத்தியம் என்கிறார் அவர்.
அமெரிக்காவே அதனை ஒப்புக் கொண்டாலும் அதில் பெரிய சவால் உள்ளது என்று கூறுகிறார். சர்வதேச நிறுவனங்கள் முறையாக செயல்பட அதிகமாக நன்கொடை வழங்கும் நாடாக உள்ளது அமெரிக்கா. அமெரிக்காவில் எந்த விதமான முடிவுகள் எட்டப்பட்டாலும், இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் உள்ள அரசியலில் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுகிறார் ஷிவ்காந்த்.
“வர்த்தகமாக இருக்கட்டும், தூதரக ரீதியிலான விவகாரமாகட்டும், சுற்றுச்சூழல் பிரச்னைகள், காலநிலை மாற்றம், பயங்கரவாதம் என எதுவாக இருந்தாலும் அதில் பாதிப்பை ஏற்படுத்தும்,” என்று அவர் கூறுகிறார்.
“அமெரிக்க மக்கள் எடுக்கும் முடிவானது, வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் ஏற்படும் பிரச்னைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே தான் உலக நாடுகளில் உள்ள அனைவரும் இந்த தேர்தலை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இந்தியாவும் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று மேலும் விவரிக்கிறார் ஷிவ்காந்த்.
யாருடைய வெற்றி இந்தியாவுக்கு கூடுதல் நன்மை தரும்?
சமீபத்திய காலங்களில் இரு நாட்டு உறவும் நேர்மறையாக உள்ளது. டொனால்ட் டிரம்பின் ஆட்சியாக இருக்கட்டும், ஜோ பைடனின் ஆட்சியாக இருக்கட்டும், இரு நாட்டு உறவும் வலுவாகவே உள்ளது.
அமெரிக்காவின் அதிபராக யார் இருந்தாலும் இந்தியாவுடனான உறவு ஸ்திரத்தன்மையுடன் திகழும் என்று நம்புகிறார் முன்னாள் தூதரக அதிகாரி ஸ்கந்த் தயால்.
இந்திய நிர்வாகத்தின் கண்ணோட்டத்தில் இருந்து இதை அணுகினால், இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான உறவில் மூன்று விவகாரங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அரசாங்கத்திற்கு வெளியே இருக்கும் எங்களைப் போன்றவர்கள், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை ரஷ்யாவை சீனாவின் பக்கம் திருப்புகிறது என்று நம்புகிறோம். டிரம்ப் அதனை கருத்தில் கொண்டு செயல்படுவார் என்று பலரும் நம்புகின்றனர்.
தயாளைப் பொருத்தவரை, “ரஷ்யாவுக்கு ஆதரவாக இந்தியா இருக்கிறது. அமெரிக்க நிர்வாகம் இதனை விரும்பவில்லை. இதுமட்டுமின்றி, இந்தியா, அமெரிக்கா உட்பட உலக நாடுகள் பலரும் எதிர்கொள்ளும் சவாலானது சீனாவில் இருந்து எழுகிறது.”
இந்த விவகாரத்தில் பைடனும், டிரம்பும் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர். கமலா ஹாரிஸ் வெற்றிபெறும் பட்சத்தில் பைடனின் வெளியுறவுக் கொள்கையே தொடரும் என்று மக்கள் நம்புகின்றனர்.
ஷிவ்காந்த் இது குறித்து பேசும் போது குடியரசுக்கட்சி ஆட்சியின் நிர்வாகம், கொள்கை மட்டத்தில் இந்தியாவுக்கு சாதகமாக இருந்தது என்பதை நிரூபித்துள்ளது என்கிறார்.
வரலாற்று ரீதியிலான முக்கியத்துவம் வாய்ந்த பல ஒப்பந்தங்களும் அந்த ஆட்சிகாலத்தில் கையொப்பமானவை. தற்போது இருக்கும் வேட்பாளர்கள் பற்றி பேசினால், இந்திய பிரதமர் மோதியுடனான டொனால்ட் டிரம்பின் உறவு தனித்து நிற்கிறது என்று மேற்கோள்காட்டுகிறார் ஷிவ்காந்த்.
வெளியுறவுக் கொள்கையை விடுத்து, வர்த்தக கொள்கைகள் பற்றி குறிப்பிடுகையில், “டிரம்பின் வர்த்தக கொள்கை (அமெரிக்காவின் நலனை) பாதுகாக்கும் ஒன்றாக இருக்கிறது. இந்தியாவின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதை இந்த கொள்கை கடினமாக்கியது,” என்கிறார் ஷிவ்காந்த்.
குடியேற்ற கொள்கையில் டிரம்ப் காட்டும் தீவிரம் இந்தியாவின் நலனை கேள்விக்குள்ளாக்கும் வகையில் இருக்கிறது என்று நம்புகிறார் ஷிவ்காந்த். “உலக நாடுகள் அச்சமடையும் வகையிலான ஒரு தலைவராக டொனால்ட் டிரம்ப் தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார். ஆனால், அவருடைய நிச்சமற்ற தன்மை காரணமாக நம்பிக்கையின்மை ஏற்படுகிறது” என்று ஷிவ்காந்த் கூறுகிறார்.
“நீங்கள் அனுமானிக்கக் கூடிய நபராக இல்லையென்றால் உங்களை எந்த ஒரு ஒப்பந்தத்திலும் கொள்கையிலும் நம்ப இயலாது,” என்கிறார் அவர்.
“இந்திய அரசாங்கத்திற்கும், சில நேரங்களில் இந்திய பொருளாரத்திற்கும், இவ்விரு கட்சிகளும் பிரச்னைகளையும் சாதக பாதகங்களையும் கொண்டுள்ளன,” என்றார் ஷிவ்காந்த்.
சீனாவுக்கு சாதகமாக இருக்கும் வேட்பாளர் யார் என்று கேள்வி எழுப்பிய போது, யார் அமெரிக்காவின் அடுத்த அதிபராக வந்தாலும் சீனா மீதான அமெரிக்காவின் கொள்கைகளில் பெரிய மாற்றம் வர வாய்ப்புகள் இல்லை என்கிறார் தயாள்.
டிரம்ப், சீனாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள முடிவெடுத்தால் மற்ற நாடுகளின் நலன்களையெல்லாம் தியாகம் செய்துவிடுவார். சீனாவைப் பொருத்தவரை, டிரம்ப் மீண்டும் அதிபராவது கவலைக்கான காரணமாக இருக்கும் என்றார் தயாள்.
மத்திய கிழக்கு பிரச்னை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?
மத்திய கிழக்கு பிரச்னைகள், குறிப்பாக காஸாவில் ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கும் இஸ்ரேலின் தாக்குதல் அமெரிக்க அதிபர் தேர்தலில் விவாதத்திற்கு உள்ளானது.
வாக்காளர்களும், அரசியல் கட்சியினரும் இந்த விவகாரங்களை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். ஏன் என்றால் இது வெளியுறவுக் கொள்கை மற்றும் உள்நாட்டு சமூக உறவுகளில் தாக்கங்களை ஏற்படுத்தும்.
“இது அமெரிக்காவில் குடியேறும் நபர்களின் பிரச்னை மட்டுமல்ல. குடிமக்களாக வாக்களிக்கும் உரிமைகளைப் பெற்றவர்களின் பிரச்னையும் கூட,” என்கிறார் பிபிசியின் தர்ஹப் அஸ்கர்.
மத்திய கிழக்கில் நடைபெறும் போர் அமெரிக்கர்களின் பொருளாதாரத்தில் நேரடி தாக்கத்தைக் கொண்டிருப்பதால் அநேக அமெரிக்கர்கள் இதனால் கவலை அடைந்துள்ளனர் என்கிறார் தர்ஹப்.
அமெரிக்காவின் கொள்கையில், மத்திய கிழக்கு மற்றும் இரானின் தற்போதைய நிலை முக்கிய பிரச்னையாக கருதப்படுகிறது.
கமலா ஹாரிஸ் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் தற்போதைய கொள்கைகளே தொடர்ந்து பின்பற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம், டிரம்ப் ஆட்சிக்கு வந்தால் எதிர்பாராத முடிவுகள் எடுக்கப்படலாம். இருப்பினும், மத்திய கிழக்கு விவகாரம் உட்பட பல்வேறு சர்வதேச பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு எட்டப்படும் என்று அவர் தொடர்ச்சியாக கூறி வருகிறார்.
இந்திய வம்சாவளியினர் கருத்து என்ன?
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியேற்றம் மற்றும் விசா கொள்கைகள் முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளன.
திவ்யா இது குறித்து பேசும் போது, “இந்திய வாக்காளர்கள் மத்தியில் கமலா ஹாரிஸின் இந்திய வேர்கள் ஓர் இணைப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பலரிடம் பேசிய பிறகு உணர முடிகிறது,” என்றார்.
களத்தில் சிறுசிறு அமைப்புகளும், கட்சிகளும் ஜனநாயகக் கட்சியுடன் கைகோர்த்து பிரசார பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்று திவ்யா கூறுகிறார்.
அதேநேரத்தில் மோதியுடனான டிரம்பின் உறவையும் கவனத்தில் கொள்ள வேண்டும். “டிரம்ப் ஆட்சியின் போது டெக்ஸாஸில் நடைபெற்ற ஹவ்டி மோதி போன்ற நிகவுகள் மக்களின் மனதில் இன்னும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுபோன்ற சூழலில், இந்த இரண்டு வேட்பாளர்களின் தனிப்பண்புகளும் இந்த தேர்தலில் முக்கியத்துவம் வாய்ந்தவை,” என்று விவரிக்கிறார் திவ்யா.
இந்திய வம்சாவளிகளில் இருவகையினர் உள்ளனர். ஒரு பிரிவினர் H-1B விசாவைப் பெற்று தற்காலிகமாக அங்கே வசிப்பவர்கள். மற்றொரு பிரிவினர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள்.
இரண்டாம் பிரிவினரே வாக்களிக்க இயலும் என்றாலும் முதல் பிரிவினர் க்ரீன் கார்டு பெற 20 முதல் 30 வருடங்கள் காத்திருக்கின்றனர்.
இவர்கள் மிகவும் எச்சரிக்கையாக தேர்தல் நடைமுறைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். ஆனால் அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை என்கிறார் திவ்யா. “வாக்காளர்களோ, வாக்குரிமை அற்றவர்களோ, குடியேற்றம், சட்டப்பூர்வ குடியேற்றம் அவர்களுக்கு முக்கியத்துவமானது,” என்றார் திவ்யா.
குடியேற்றம் தொடர்பான டிரம்பின் கொள்கையும் பெரிய விவகாரமாக மாறியுள்ளது. சட்டத்திற்கு புறம்பான குடியேற்றங்களை தடுக்க பைடன் நிர்வாகம் தவறிவிட்டது என்று டிரம்ப் விமர்சனத்தை முன்வைத்தார்.
தர்ஹப் இது குறித்து மேலும் பேசும் போது, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இதர தெற்காசிய நாடுகளில் இருந்து வரும் மக்களுக்கு குடியேற்றம் மிகப்பெரிய கவலையாக உள்ளது என்றார். டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடியேற்ற செயல்பாடுகள் பெரும் தடையை சந்திக்கும் என்று கூறினார் தர்ஹர்.
டிரம்ப்பின் வெற்றி எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?
“கடந்த தேர்தலில் குடியரசுக் கட்சி ஆதரவாளர்கள் கேப்பிட்டல் ஹில்லில் (US Capitol Hill) திரண்டு வன்முறையில் ஈடுபட்டனர். தேர்தலுக்குப் பிறகு இதேபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் நிகழக் கூடும் என்ற அச்சம் அமெரிக்க மக்கள் மத்தியில் உள்ளது,” என்று கூறுகிறார் திவ்யா.
மூத்த பத்திரிகையாளர் ஷிவ்காந்த், “இதற்கு சாத்தியம் இருக்கலாம் என்பதை நினைவில் கொண்டு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். டிரம்ப் தன்னுடயை வழக்கறிஞர்கள் குழுவை உருவாக்கியுள்ளார். தேர்தல் பணியாளர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய, வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பல மாகாணங்களில் போட்டி கடுமையாக இருக்கும். இது போன்ற சூழலில் வாக்கு வித்தியாசம் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை இருக்கும் பட்சத்தில், வாக்குகள் மீண்டும் எண்ணப்படும்,” என்றார்.
வாக்குச்சாவடிகளில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் ஏதேனும் நிகழ்வுகள் நடந்தாலும் வாக்குகள் மீண்டும் எண்ணப்படும். அதனைத் தொடர்ந்து சட்ட ரீதியிலான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
சிறிதளவு வாக்கு வித்தியாசத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் முடிவுகள் வெளியாவதை தாமதிக்கச் செய்யும் செயல்களில் ஈடுபட டிரம்ப் முயற்சி செய்யலாம் என்று ஷிவ்காந்த் கூறினார்.
அமெரிக்க அதிபர் தேர்தலைக் காட்டிலும், அதன் முடிவும், அதிகார மாற்றமும் தான் அதிக ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. அனைத்தும் சிறப்பான முறையில் முடிவடைந்தால் உலக மக்கள் நிம்மதி அடைவார்கள்.
ஸ்கந்த் தயாள் இது குறித்து பேசும் பொது, “அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளில் பாரிய மாற்றங்களை டிரம்பின் வெற்றி கொண்டுவரக்கூடும்.” என்றார்.
ரஷ்யா – யுக்ரேன் போரில் எதிர்பாராத திருப்பங்கள் நடக்கலாம் என்றும் ஸ்கந்த் கணிக்கிறார்.
“டிரம்ப் வெற்றி பெற்றால், இஸ்ரேல் விரும்பியதை விருப்பம் போல் செய்யட்டும் என்ற சுதந்திரம் அந்த நாட்டிற்கு வழங்கப்படும். வன்முறை அதிகரிக்கக் கூடும்,” என்றும் அவர் கூறுகிறார்.
“உலக நாடுகளுக்கு ஜனநாயகத்தையும் குடியாட்சியையும் அமெரிக்கா வலியுறுதி வருகிறது. ஆனால் அதன் அதிபர் வேட்பாளர் தனது தோல்வியை ஏற்காத போது, அமெரிக்காவின் ஒழுங்கியல் சேதமடையக் கூடும்,” என்றார் அவர்.
உலக அரசியல் மட்டுமின்றி, உலக ஸ்திரத்தன்மை மற்றும் ஜனநாயக மதிப்புகளுக்கும் இந்த அமெரிக்க அதிபர் தேர்தல் மிகவும் முக்கியமான தருணமாக இருக்கிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு