சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு இன்று கமல்ஹாசன் தலைமையில் சென்னையில் நடக்கிறது. இதில் 2026 சட்டப்பேரவை தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவையில் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் போட்டிப்போட்டு தயாராகி வருகின்றன.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கட்டம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னையில் இன்று (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் கட்சியின் அனைத்து நிர்வாகக்குழு உறுப்பினர்களும், செயற்குழு உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கட்சியின் பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம் உறுப்பினர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளார்.
மநீம திமுக கூட்டணியில் இருந்து வருகிறது. திமுகவின் ஆதரவோடு கமல்ஹாசன் விரைவில் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் கூட்டணியில் எத்தனை இடங்கள் கேட்கலாம் என்பது குறித்தும் தேர்தல் பிரச்சார உத்திகள் குறித்தும் இன்று நடைபெறும் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.