ராமநாதபுரம்: கமுதி அருகே பசும்பொன்னில் இன்று நடைபெறும் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்று, நினைவிடத்தில் மரியாதை செலுத்துகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 63-வது குருபூஜை விழா மற்றும் 118-வது ஜெயந்தி விழா ஆகியவை யாகசாலை பூஜை, லட்சார்ச்சனையுடன் நேற்று முன்தினம் தொடங்கின. நேற்று 2-வது நாளாக யாகசாலை பூஜை, லட்சார்ச்சனை விழா நடைபெற்றது.
ஏராளமான பொதுமக்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். நூற்றுக்கணக்கானோர் வரிசையில் நின்று தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். இன்று (அக். 30) தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா அரசு விழாவாக நடைபெறுகிறது. இன்று காலை 8.30 மணிக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து, தேவர் வாழ்ந்த வீட்டைப் பார்வையிடுகிறார்.
தேவர் நினைவிடப் பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜனை சந்தித்து நலம் விசாரிக்கிறார். இதற்காக குடியரசு துணைத் தலைவர் மதுரை விமான நிலையத்திலிருந்து இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் பசும்பொன் தேவர் நினைவிடம் அருகே அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் வந்திறங்குகிறார். இதேபோல, மதுரையிலிருந்து காரில் பசும்பொன் வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை 9.30 மணிக்கு தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.
தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வி.கே.சசிகலா, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் மரியாதை செலுத்த உள்ளனர்.
தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில், ராமநாதபுரம் சரக டிஐஜி மூர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் மற்றும் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.