ஒரே நாடு ஒரே தேர்தல் நாட்டின் நலன் கருதி கொண்டு வரப்படுகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் நேற்று ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் பாரிவேந்தர், பாஜக சமூக ஊடக பிரிவு மாநில தலைவர் அர்ஜூன மூர்த்தி, தெலங்கானா மாநில முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது: மாணவச்செல்வங்கள் மத்தியில் ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தை எடுத்துச் செல்லும் வகையில் இந்த கருத்தரங்கு நடத்தப்படுகிறது. எட்டு முறை மத்திய பட்ஜெட்டை அறிவித்த ஒரே தமிழர் மற்றும் பெண் நிதி அமைச்சர் என்ற பெருமையை கொண்டவர் நிர்மலா சீதாராமன். குடும்பக் கட்டுப்பாடு போல தேர்தல் கட்டுப்பாடு மிகவும் அவசியம். அடிக்கடி தேர்தல் வரும்போது தேவையற்ற செலவுகள் ஏற்படுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து 10 ஆண்டுகளாக பல மேடைகளில் விவாதம் செய்யப்பட்டு வருகின்றன. நமது நாட்டில் அரசு அரசியல்ரீதியாக சில விஷயங்கள் கண்மூடித்தனமாக நடைபெற்று வருகின்றன. நாட்டின் நலனுக்காக எடுக்கப்படும் சில முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 1960 வரை ஒரே நாடு ஒரே தேர்தலாக நடத்தப்பட்டது. மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்கள் மட்டும் ஒன்றாக நடத்தப்படும் என கூறுகிறோம். உள்ளாட்சி தேர்தல்களை சேர்த்து நடத்த வேண்டும் என கூறவில்லை.
இந்த முடிவு பிரதமர் மட்டுமோ அல்லது நான்கு அதிகாரிகளோ சேர்ந்து எடுத்த முடிவு இல்லை. 2029-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு தான் குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்க உள்ளார். 82 ஏ, 83(7) சட்ட திருத்தங்கள் வர உள்ளன. இதன் வாயிலாக தேர்தல் ஆணையத்தில் அதிகாரம் கிடைக்கும். இதனை தனி உயர்மட்ட குழு முடிவு செய்கிறது. அனைத்து மாநில அரசுகளின் ஆட்சி காலங்களையும் ஒருங்கிணைந்து 2034-க்கு முன் நடைமுறைக்கு வர சாத்தியம் இல்லை. இந்த திட்டம் சிலர் சொல்வதைபோல உடனே நடைபெறக் கூடிய விஷயம் இல்லை. 1961 முதல் 1970 வரை 10 ஆண்டுகளில் 5 மாநிலங்களில் மூன்று முறை தேர்தல் நடத்தப்பட்டது. அடுத்த 10 ஆண்டுகளில் 15 மாநிலங்களில் அடிக்கடி தேர்தல் நடத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் வளர்ச்சி திட்ட பணிகள் பெருமளவில் பாதிப்பு ஏற்படுகிறது.
2019-ல் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் 19 கட்சிகளில் 16 கட்சிகள் ஒத்துக்கொண்டன. சி.பி.எம். உள்ளிட்ட 3 கட்சிகள் மட்டுமே ஒப்புக்கொள்ளவில்லை. அதனையடுத்து உயர்மட்டக் குழு முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்டது. அந்த உயர்மட்ட குழுவும் 47 கட்சிகளை அழைத்து 32 கட்சிகள் ஒரே தேர்தலுக்கு ஒப்புக்கொண்டன. 15 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. 15 கட்சிகள் தங்கள் கருத்துகளை அளிக்கவில்லை.
வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கடி தேர்தலின்போது தேர்தல் நடத்தை விதிமீறல்கள் இடையூராக உள்ளன. 2019-ம் ஆண்டு தேர்தலில் 10 லட்சம் பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மக்களவை தேர்தலை நடத்த 25 லட்சம் பேர் பயன்படுத்தப்பட்டனர். 2024 மக்களவை தேர்தலுக்கு ரூ. 1 லட்சம் கோடி செலவாகி உள்ளது. இது ஒரே தேர்தலாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தினால் ரூ. 12 ஆயிரம் கோடி சேமிக்கப்படும். இதனை மக்கள் நல திட்டங்களுக்கு பயன்படுத்தலாம். இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் ரூ. 4.5 லட்சம் கோடி மதிப்பிலான 1.5 ஜி.டி.பி., கூடுதலாக உயரும். நாம் பொருளாதாரத்தில் பலமாக இருந்தால் ஜாதி, மதம், இன வேறுபாடின்றி உயரும். மேலும் கடந்த காலம் போல் கேரளா, கர்நாடகா பகுதிகள் போல் ஓட்டுபதிவு சதவீதம் உயரும்.
கலைஞர் கருணாநிதி தனது சுயசரிதையில் ஒரே நாடு ஒரே தேர்தலை ஆதரித்து உள்ளார். ஆனால் தற்போது நமது முதல்வர் ஸ்டாலின் தனது தந்தை சென்ற பாதையில் செல்லாமல் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். ஒரே நாடு ஒரே தேர்தல் நாட்டின் நலன் கருதி கொண்டு வரப்படுகிறது. இதன் முக்கியத்துவம் குறித்து தங்கள் பகுதியில் உள்ள மக்களுக்கு எடுத்து கூறுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.