இலங்கையின் முக்கிய நபர்கள் மீது பிரிட்டன் விதித்துள்ள தடையைத் தொடர்ந்து, உள்நாட்டு அரசியல் களத்தில் கடும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் இலங்கை அரச பாதுகாப்பு பிரதானிகள் மூவருக்கு பிரிட்டன் தடை விதித்துள்ளது.
பாதுகாப்புப் படைகளின் முன்னாள் பிரதானி ஷவேந்திர சில்வா, இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஒஃப் த பீல்ட் வசந்த கரணாகொட, இலங்கை ராணுவ முன்னாள் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஆகியோருக்கே இவ்வாறு பிரிட்டன் தடை விதித்துள்ளது.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தில் மனித உரிமை மீறல் இடம் பெற்றுள்ளமைக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் என பிரிட்டனில் இந்த நால்வர் அடையாளப்படுத்தப்பட்டு, அவர்கள் மீது இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நால்வருக்கும் பிரிட்டனுக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு பிரிட்டனில் சொத்துகளை வாங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பிரிட்டனுக்குள் இந்த நால்வருக்கும் சொத்துகள் இருக்கும் பட்சத்தில், அவற்றைத் தடை செய்வதற்கும் அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கை உள்நாட்டு யுத்தத்தில் மனித உரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பான குற்றச்சாட்டை அடுத்தே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த 15 வருடங்கள்
பட மூலாதாரம், SRI LANKA ARMY
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி முடிவுக்கு வந்தது.
முல்லைத்தீவு மற்றும் அதை அண்மித்த பகுதிகளில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகப் பல்வேறு தரப்பினர் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
அத்துடன், ராணுவத்திடம் சரணடைந்த பெரும்பாலான தமிழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் தமிழர்களின் உறவினர்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக இன்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் முடிவடைந்துள்ள பின்னணியிலும், தமக்கான நீதி இன்று வரை கிடைக்கவில்லை எனக் கோரி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் போராட்டங்களை நடத்துகின்றனர்.
இவ்வாறான பின்னணியிலேயே இந்தத் தடையை பிரிட்டன் விதித்துள்ளது.
எந்தெந்த நாடுகளில் யார் யாருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது?
- கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி ஜெனரல் ஷவேந்திர சில்வா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்குத் தமது நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு அமெரிக்கா தடை விதித்திருந்தது.
- கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் தேதி கடற்படை புலனாய்வு அதிகாரியான சந்தன ஹெட்டியாராட்ச்சி, சிப்பாய் சுனில் ரத்நாயக்க உள்ளிட்டோர் மற்றும் அவர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு அமெரிக்காவுக்குள் பிரவேசிக்கத் தடை விதிக்கப்பட்டது.
- கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் தேதி மேஜர் பிரபாத் புலத்வத்த மற்றும் அவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்குத் தமது நாட்டிற்குள் பிரவேசிக்க அமெரிக்கா தடை விதித்திருந்தது. அவர்களின் சொத்துகளைத் தடை செய்யவும் தீர்மானம் எட்டப்பட்டது.
- கோட்டாபய ராஜபக்ஸ, மஹிந்த ராஜபக்ஸ, சிப்பாய் சுனில் ரத்நாயக்க, லெப்டினன் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராட்ச்சி ஆகியோருக்கு, 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி, தமது நாட்டிற்குள் பிரவேசிக்க கனடா தடை விதித்தது. அந்த நாட்டிலுள்ள அவர்களின் சொத்துகளை முடக்கவும் தீர்மானம் எட்டப்பட்டது.
- கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி கடற்படைத் தளபதி வசந்த கரணாகொடவிற்கு தமது நாட்டிற்குள் பிரவேசிக்க அமெரிக்கா தடை விதித்திருந்தது.
- கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி ஸ்ரீலங்கா விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன, ரஷ்யாவின் முன்னாள் இலங்கைக்கான தூதுவர் உதயங்க வீரதுங்க ஆகியோருக்கும், அவர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் தமது நாட்டிற்குள் பிரவேசிக்க அமெரிக்கா தடை விதித்திருந்தது.
- ஷவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத் ஜயசூரிய, விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு 2025ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி பிரிட்டன் தடை விதித்துள்ளது.
இலங்கை அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பு
பட மூலாதாரம், Getty Images
இலங்கை உள்நாட்டுப் போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்த குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் பிரிட்டனால் தடை விதிக்கப்பட்டுள்ள நால்வருக்கு ஆதரவு தெரிவித்து இலங்கை அரசியல்வாதிகள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
யுத்தம் முடிவடைந்த தருணத்தில் பதில் பாதுகாப்பு அமைச்சராகக் கடமையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டார்.
நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்கள் மீது இவ்வாறு தடை விதிப்பதானது, அசாதாரணமாக செயற்பாடு என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிக்கும்போது தானே பதில் பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றியதாகக் கூறிய அவர், இறுதித் தருணத்தில் என்ன நேர்ந்தது என்பதை தாம் நன்கு அறிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
”இந்தப் பாதுகாப்புப் படைகளின் தலைவர்கள் தாய்நாட்டின் ஒற்றுமைக்காகவும், பிராந்திய ஒருமைப்பாட்டிற்காகவும் போராடினார்கள். அவர்கள் பொது மக்களைக் கொலை செய்யவில்லை. யுத்தத்தின் இறுதி இரண்டு வாரங்களும் நினைவில் இருக்கும். இனங்களை அடிப்படையாகக் கொண்டு யாரும் கொலை செய்யப்படவில்லை” என்று கூறினார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
தொடர்ந்து பேசிய அவர், “நான் 5 சந்தர்ப்பங்களில் பதில் பாதுகாப்பு அமைச்சராகக் கடமையாற்றியிருந்தேன். பிரபாகரன் உயிரிழக்கும் சந்தர்ப்பத்திலும் நானே பதில் பாதுகாப்பு அமைச்சராகக் கடமையாற்றியிருந்தேன். இறுதி இரண்டு வாரங்களில் என்ன நேர்ந்தது என்பதை நான் நன்கு அறிவேன். அதனால், எமது முப்படை அதிகாரிகளுக்கு இவ்வாறு தடை விதித்தமையானது அசாதாரணமான செயற்பாடாகும். அவர்கள் நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்கள். எமது ராணுவத்தினர் தமது உயிர்களை எந்தளவுக்கு அர்ப்பணித்துள்ளார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள்.
அல்பிரட் துரையப்பா, அமிர்தலிங்கம் போன்றவர்களையும் விடுதலைப் புலிகள் அமைப்பு கொலை செய்தது. அவர்களை ஏன் கொலை செய்தாரகள்? இந்த விடயங்கள் குறித்தும் கதைக்க வேண்டும். எனினும், எமது ராணுவத்தினர் மீதான இந்த நடவடிக்கையானது ஒரு சூழ்ச்சியாகும். மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். யுத்தம் முடிவடையவில்லை என்றால், கொழும்பும், பொலன்னறுவையும் இருந்திருக்காது. இந்த நாட்டைக் காப்பாற்றிய வீரர்களுக்கு சர்வதேச ரீதியில் இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பில் நான் கவலையடைகிறேன்” என யுத்தம் முடிவடையும் சந்தர்ப்பத்தில் பதில் பாதுகாப்பு அமைச்சராகக் கடமையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.
பிரிட்டன் அரசாங்கத்தால் விதிக்கப்பட்டுள்ள தடையானது, மனித உரிமை மீறல் தொடர்பானது அல்லது எனக் கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, விடுதலைப் புலி அமைப்பிற்கு உதவி வழங்குவோரின் அழுத்தங்கள் காரணமாகவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகனான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவே இதைக் குறிப்பிட்டுள்ளார். இது நீதியான விடயம் அல்ல என்பதுடன், சில மேற்குலக நாடுகளின் அரசியல்வாதிகளுடைய நிதியின் ஊடாக விடுக்கப்படும் அழுத்தம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பட மூலாதாரம், PMD
”நாட்டில் பயங்கரவாதம் முடிவுக்கு வந்துள்ள போதிலும், சர்வதேச ரீதியில் பிரிவினைவாதம் முடிவுக்கு வரவில்லை. விடுதலைப் புலிகளுக்குப் பின்னர் தற்போதுள்ள புலம்பெயர்ந்தோர் அரசியலில் ஆட்சி கவிழ்ப்புகளை மேற்கொள்வதற்கும், ஆட்சிகளை அமைப்பதற்குமான உதவிகளை வழங்கி வருகின்றனர். இதன்படி, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அரசியல்வாதிகள் தமது அரசாங்கங்களின் ஊடாகவும், தமது நிர்வாக வியூகங்களின் ஊடாகவும் எமது நாட்டின் மீது மீண்டுமொரு முறை பிரிவினைவாதத்தை ஸ்தாபிப்பதற்கும், ஈழ அரசாங்க கனவை நனவாக்கிக் கொள்வதற்குமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்” என்று கூறுகிறார் மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ.
மேலும் பேசிய அவர், “இது இன்று நேற்று இடம்பெற்ற ஒன்றல்ல. இதைத்தான் நாங்கள் முதலில் இருந்தே கூறி வருகிறோம். தற்போதுள்ள இலங்கை அரசாங்கம் இதுதொடர்பான பதில் அறிவிப்பை வெளியிடவில்லை. முதலில் அரசாங்கம் தமது நிலைப்பாட்டைக் கூற வேண்டும். ராணுவத்தினர் இந்த நாட்டிற்காகவே யுத்தத்தை நடத்தினார்கள்.
அது அவர்களின் தனிப்பட்ட பிரச்னை கிடையாது. அதற்கான தலைமைத்துவத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வழங்கியிருந்தார். அதற்கு முன்னர் பல ஜனாதிபதிகள் இருந்துள்ளனர். அவர்கள் அரசியல் தலைமைத்துவத்தை வழங்கவில்லை. மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம், பயங்கரவாதத்தை இல்லாது ஒழிப்பதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தியதை மாத்திரமே இந்த அதிகாரிகள் மேற்கொண்டிருந்தார்கள்” என்றார்.
“எனினும், தெரிவு செய்யப்பட்ட சில அதிகாரிகளை மாத்திரம் இலக்காகக் கொண்டு யுத்த குற்றங்களுக்கு குற்றவாளிகளாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. இது தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையிலான பிரச்னை கிடையாது. இது விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கையர்களுக்கு இடையிலான பிரச்னை. நாங்கள் பயங்கரவாதிகளுடன் மோதினோம்.
இன்று புலம்பெயர்ந்தோரிடம் இருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளும் சில உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியல்வாதிகள் என்ற இரு தரப்பினரும் இன்று தமிழ்-சிங்களப் பிரச்னையாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு இடம்பெறுவதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். இந்த நாட்டு ராணுவ வீரர்களுக்காக நாங்கள் முன்னின்று குரல் எழுப்புவோம். அரசாங்கம் தமது நிலைப்பாட்டைக் கூற வேண்டும் என்பதுடன், மக்கள் ராணுவ வீரர்களுடன் இன்று ஒன்றுபட வேண்டும்,” என்றார் நாமல் ராஜபக்ஸ.
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த மஹிந்த ராஜபக்ஸவின் பதில்
பட மூலாதாரம், NAMAL RAJAPAKSA’S FACEBOOK
யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் பாரியளவிலான யுத்த குற்றங்கள் இடம்பெற்றதாக பிரிட்டன் அரசாங்கம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை தாம் நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதியும், யுத்தத்தை நிறைவு செய்ய தலைமைத்துவம் வழங்கியவருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
பிரிட்டன் அரசாங்கம் இலங்கைப் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட நால்வர் மீது தடை விதித்த நிலையில், மஹிந்த ராஜபக்ஸ விசேட அறிக்கையொன்றை வெளியிட்டே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
”தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தம் செய்வதற்கான தீர்மானத்தை இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான நானே எடுத்தேன். இலங்கையின் ஆயுதப் படை அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தியது” என மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கடந்த 2002ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கை அமல்படுத்தப்பட்டிருந்த காலப் பகுதியில், 2002ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் 2005ஆம் ஆண்டு செப்டம்பர் வரை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் 363 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து 2004ஆம் ஆண்டு வெளியேறி, ஜனநாயக ரீதியில் அரசியல் நடவடிக்கைகளுக்குள் பிரவேசித்த விநாயகமூர்த்தி முரளிதரன் என அழைக்கப்படும் கருணா அம்மான் மீது பிரிட்டன் தடை விதித்துள்ளமையானது, விடுதலைப் புலிகளுக்கு எதிராகச் செயல்பட்ட தமிழர்களுக்கு தண்டனை வழங்கும் புலம்பெயர் தமிழர்களின் நடவடிக்கை என்பது தெளிவாகியுள்ளதாக அவர் கூறுகின்றார்.
”முப்பது ஆண்டுக் காலம் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பினால், 27,965 ராணுவ மற்றும் போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். அது மாத்திரமன்றி, அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என மேலும் பல்லாயிரக்கணக்கானோரின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன” என மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
கடந்த 2009ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை, உலகிலேயே மிகவும் கொடூரமான பயங்கரவாத அமைப்பு என அமெரிக்காவின் எஃப்.பி.ஐ அமைப்பு 2008ஆம் ஆண்டு பெயரிட்டதாகவும் அவர் கூறுகின்றார்.
அத்துடன், பல்வேறு தரப்பினரால் விடுக்கப்படுகின்ற சட்ட அழுத்தங்களில் இருந்து தமது ஆயதப் படையை பாதுகாத்துக் கொள்வதற்காக பிரிட்டன் அரசாங்கம் 2021 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் விசேட சட்டங்களை இயற்றியதை நினைவு படுத்துவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகத் தமது கடமைகளை நிறைவேற்றிய ஆயுதப் படை அதிகாரிகளை இலக்கு வைத்து வெளிநாட்டு அரசுகள் மற்றும் அமைப்புகள் விடுக்கும் அழுத்தங்களுக்குத் தற்போதைய அரசாங்கம் நேரடியாக முன்நிற்க வேண்டும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு
பட மூலாதாரம், Getty Images
இலங்கையில் தமிழர்கள் மீதான இன அழிப்பு யுத்தத்தில் ஈடுபட்ட நால்வர் மீது பிரிட்டன் விதித்துள்ள தடை ஈழத் தமிழர்களின் நீதிக்கான தேடலின் நம்பிக்கைக் கீற்று எனவும், அந்த அறிவிப்பை தாம் வரவேற்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இலங்கைக்கான பிரிட்டனின் உயர்ஸ்தானிகரகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர், சிறீதரன் இவ்விடயம் சார்ந்து அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில், “எதிர்வரும் செப்டம்பரில் நடைபெறவுள்ள ஜெனீவா அமர்வுகளுக்கு முன்னதாக, இனப்படுகொலையின் பங்குதாரர்களான நால்வர் மீது பிரிட்டன் அரசு விதித்துள்ள பயணத்தடை, காலம் தாழ்த்தியாவது தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை மீள அரும்பச் செய்திருக்கிறது,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “இலங்கையில், குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழர்கள் மீது பேரினவாத அரசு வலிந்து நடத்திய போரின்போது மோசமான மனித உரிமை மீறல்கள், நீதிக்குப் புறம்பான கொலைகள், சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்ட இந்த நான்கு பேர் மீதும் பிரிட்டன் அரசு விதித்திருக்கும் தடையையும், சொத்து முடக்க அறிவிப்பையும், சர்வதேச நீதி கோரும் பயணத்தில் தமக்குக் கிடைத்திருக்கும் ஒரு சிறிய நம்பிக்கை ஒளிக்கீற்றாகவே ஈழத்தமிழர்கள் பார்க்கிறார்கள்” எனவும் கூறியுள்ளார்.
எண்பது வருடங்களுக்கு மேலாகக் கேட்பாரற்றுப் படுகொலை செய்யப்பட்ட தமிழ்த்தேசிய இனத்தின் எண்ணங்களுக்கும் இறந்துபோன ஆத்மாக்களுக்கும் இந்தத் தடை அறிவிப்பு நீதியின் கதவு திறக்கும் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், “காலனித்துவ ஆட்சி முடிவில், சுதேசிகளான தமிழர்களின் இறைமையை பிறிதோர் இனத்தவரிடம் ஒப்படைத்துச் சென்றமை வரலாற்றுத் தவறு என்பதை உலகம் இப்போதாவது உணரத்தலைப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் பதில்
பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான உள்நாட்டுப் பொறிமுறையை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் அரசாங்கத்தால் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட நால்வர் மீது விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து, இலங்கைக்கான பிரிட்டன் உயர்ஸ்தானிகருக்கு விடயங்களை தெளிவூட்டியபோதே அவர் இதைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் ஏதோவொரு வகையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருக்குமானால், அது தொடர்பில் உள்நாட்டுப் பொறிமுறையின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறுகின்றார்.
தடை விதிக்கப்பட்ட நபர்களுக்கு அந்த நாட்டிலுள்ள சொத்துகள் முடக்கப்படும் மற்றும் அவர்களுக்கு அந்த நாட்டிற்குள் பிரவேசிக்கத் தடை விதிக்கப்பட்டமையானது, பிரிட்டனால் எடுக்கப்பட்ட ஒருதலைபட்ச நடவடிக்கை எனவும் அவர் கூறியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளால் இவ்வாறு எடுக்கப்படுகின்ற ஒரு தலைப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இலங்கை உள்நாட்டு நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு எந்தவித ஒத்துழைப்பும் வழங்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டன் விதித்த தடையால் இலங்கைக்கு பாதிப்பு உள்ளதா?
பட மூலாதாரம், PRATHIBA MAHANAMAHEWA
இலங்கை முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட நால்வர் மீது பிரிட்டன் விதித்துள்ள தடையால் இலங்கைக்கு எவ்வாறான பாதிப்புகள் காணப்படுகின்றன என்பது தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக் குழுவின் முன்னாள் ஆணையாளர் பிரதீபா மஹனாமஹேவாவிடம் பிபிசி தமிழ் வினவியது.
”இவ்வாறு விதிக்கப்பட்டுள்ள தடையானது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையினால் விதிக்கப்பட்ட தடை கிடையாது. அதை பிரிட்டனே விதித்துள்ளது. அமெரிக்கா, ஐநா மனித உரிமை பேரவையில் இருந்து விலகியதை அடுத்து, இலங்கை தொடர்பில் பிரிட்டனே அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறது. இது நபர்களுக்கு பிரட்டனால் விதிக்கப்பட்ட விசா மற்றும் சொத்துகளுக்கான தடையாகும்.
எனினும், அரச அதிகாரிகள் என்ற வகையில் இலங்கைக்கு இதனூடாக பாதிப்பு காணப்படுகின்றது. 2022ஆம் ஆண்டு மனித உரிமை பேரவையால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டது. அதில் 72 ஈ என்ற ஷரத்தில் ஒரு விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் யுத்தக் குற்றத்தில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மிகவும் தெளிவாகக் கூறியுள்ளனர். எனினும், இது தண்டனை வழங்கும் நடவடிக்கை கிடையாது” என்று அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பிரதீபா மஹனாமஹேவா, “தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கூறப்பட்டுள்ளது. எனினும், 2025ஆம் ஆண்டாகும் போதும், நாம் அது தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. எமது பக்கத்திலும் குறைப்பாடுகள் காணப்படுகின்றன. தேசிய பொறிமுறையொன்றை ஏற்படுத்தி, அதைச் செய்ய வேண்டியிருந்தது. இலங்கைக்குத் தற்போது அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றனர். 72வது ஷரத்திலுள்ள பரிந்துரைகளைச் செயற்படுத்தவில்லை எனக் கூறுகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
மேலும் அழுத்தங்கள் அதிகரிக்கக்கூடும். பொருளாதாரக் குற்றங்கள் இடம் பெற்றுள்ளதாக ஈ சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது தொடர்பிலும் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. முறையற்ற விதத்தில் வேறு நாடுகளில் சொத்துகள் இருக்குமானால், அது தொடர்பிலும் தாம் உதவி செய்வோம் என அவர்கள் கூறுகின்றனர். பொதுநலவாய அமைப்பில் மனித உரிமை பிரிவுடன் இணைந்து பல வேலைகளை எம்மால் செய்திருக்க முடியும். நாங்களும் சிற்சில சந்தர்ப்பங்களில் பலவற்றைத் தவறியுள்ளோம். அதனாலேயே இவ்வாறான விடயங்கள் இடம்பெறுகின்றன” என்றார்.
”இலங்கையில் ஐபிரிட் நீதிமன்றம் ஒன்றை ஸ்தாபிக்குமாறு பிரிட்டன் 2018ஆம் ஆண்டு முதல் கூறி வருகின்றது. ஐபிரிட் நீதிமன்றமொன்று ஸ்தாபிக்க முடியாத பட்சத்தில், அதற்குப் பதிலாக என்ன செய்ய முடியும் என்பதையேனும் நாம் கூறியிருக்க வேண்டும். பிரிட்டன் மீது முழுமையாக விரலை நீட்ட முடியாது. மனித உரிமைப் பேரவையின் ஊடாக நம்மை பிரிட்டனே கண்காணிக்கின்றது. எதிர்காலத்தில் நடைபெறுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய கருத்து” என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் பிரதீபா மஹனாமஹேவா தெரிவிக்கின்றார்.
எனினும், இந்த நிலைமை தொடருமாக இருந்தால், ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு கிடைக்கப் பெறும் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை இல்லாது போகுமோ என்ற அச்சம் எழுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
அத்துடன், தனி நாடொன்று என்ற விதத்தில் அவர்களால் நமக்கு எதிராக பொருளாதாரத் தடையைக்கூட ஏற்படுத்த முடியும் என அவர் கூறுகின்றார்.
வலையில் சிக்கும் விதத்தில் அல்லாமல், வலையில் சிக்காது அதைத் தவிர்த்துக் கொள்ளும் விதத்தில் இலங்கை செயல்பட வேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் பிரதீபா மஹனாமஹேவா தெரிவிக்கின்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.