• Thu. Apr 3rd, 2025

24×7 Live News

Apdin News

‘கருணை அடிப்படையில் பெண் வாரிசுகளுக்கு மட்டுமே அங்கன்வாடி பணி வழங்கப்படும்’ | Anganwadi work will be provided only to female heirs on compassionate grounds

Byadmin

Apr 2, 2025


சென்னை: கருணை அடிப்படையில் பெண் வாரிசுகளுக்கு மட்டுமே அங்கன்வாடி பணியாளராக வேலை வழங்கப்படும் என்ற அரசாணை இன்னும் அமலில் உள்ளதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

அங்கன் வாடி பணியாளராக பணியாற்றிய தனது தாயார் உயிரிழந்த நிலையில், கருணை அடிப்படையில் அந்த வேலையை தனக்கு வழங்கக்கோரி விழுப்புரத்தை சேர்ந்த விக்ரம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், கருணை அடிப்படையில் பெண் வாரிசுகளுக்கு மட்டுமே அங்கன்வாடி பணியாளராக வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்ற அரசாணையை அரசு ரத்து செய்து விட்டதால், தனக்கு அங்கன்வாடி பணியாளராக வேலைவாய்ப்பு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரரான விக்ரமுக்கு 8 வார காலத்தில் பணி வழங்க உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவை உயர் நீதிமன்றம் அமல்படுத்தவில்லை எனக்கூறி விக்ரம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சமூக நலத்துறை செயலாளரான ஜெயஶ்ரீ முரளிதரன் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது சமூக நலத்துறை செயலர் ஜெயஶ்ரீ முரளிதரன் ஆஜரானார். அப்போது தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞரான ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, அங்கன்வாடி பணியாளராக கருணை அடிப்படையில் பெண் வாரிசுகளுக்கு மட்டுமே பணிநியமனம் வழங்கப்படும் என்ற அரசாணையை ரத்து செய்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், அந்த அரசாணை இன்னும் அமலில் தான் உள்ளது என்றார். அதையடுத்து இந்த வழக்கில் சமூக நலத்துறைச் செயலர் தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஏப்.15-க்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.



By admin