பட மூலாதாரம், @V_Senthilbalaji/X
-
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
கரூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டு வெற்றி பெற்று வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இந்தத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடவுள்ளார்.
திமுக தலைமை விருப்பத்தின்படி, கோவையில் போட்டியிடுவதாக அவர் கூறியுள்ளார்.
கோவை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக தொடர் தோல்வியைச் சந்தித்து வரும் நிலையில் அவருடைய வருகை, இந்தத் தேர்தலில் திமுகவுக்கு வெற்றியைத் தருமென்று நம்புகின்றனர் திமுகவினர்.
ஆனால், செந்தில் பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பேன் என்று அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் பிபிசியிடம் தெரிவித்தார்.
செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிடுவது, ஜெயலலிதா மறைவுக்குப் பின்னும் கோவையை அதிமுக கோட்டையாக வைத்துள்ள வேலுமணிக்கு மிகப்பெரிய சவால் என்று கூறும் திராவிட இயக்க ஆய்வாளர் துரை கருணா, திமுக அங்கு நிச்சயம் பலம் பெறும் என்கிறார்.
”திமுகவின் கட்டமைப்பு பலமாக இருக்கும் நிலையில், செந்தில் பாலாஜியின் தலைமையில் கோவை மாவட்டத்தில் பாதி தொகுதிகளை திமுக வெல்வதற்கான சாத்தியக்கூறு” இருப்பதாகச் சொல்கிறார் எழுத்தாளர் இரா.முருகவேள்.
கோவையை கோட்டையாக வைத்துள்ள அதிமுக – திடீர் வெற்றி பெற்ற திமுக
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா இருந்தபோது கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 9 தொகுதிகளில் அதிமுக வென்றது. ஆனால் ஜெயலலிதா மறைந்த பின்பு, 2021ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழகத்தில் ஆட்சியை இழந்த அதிமுக, கோவை மாவட்டத்தில் 10க்கு 10 தொகுதிகளையும் கைப்பற்றியது. இதனால்தான் கோவையை அதிமுக கோட்டை என்று அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.
மாவட்டத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினரும் இல்லாததால் அமைச்சரவையிலும் கோவைக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. கடந்த 2022 ஆம் ஆண்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்தபோது, கோவை மாவட்டத்தின் பொறுப்பு அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் கோவை மாநகராட்சியில் 100-ல் 97 வார்டுகளையும், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் நகராட்சிகள் உள்ளிட்ட பிற நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் திமுக பெரும் வெற்றி பெற்றது.
அதன்பின்பு அதிமுக ஆட்சியின்போது அமைச்சராக இருந்தபோது நடந்த சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குற்றச்சாட்டு வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறை சென்றார். அப்போது, கோவை மாவட்டத்தின் பொறுப்பு, அமைச்சர் முத்துசாமியிடம் வழங்கப்பட்டது. கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் நடந்தபோதும், செந்தில் பாலாஜி சிறையில்தான் இருந்தார். அந்தத் தேர்தலில் மேற்கு மண்டலத்திலும் திமுக பெரும் வெற்றி பெற்றது.
மாநிலம் முழுவதும் திமுக கூட்டணி வெற்றி பெற்றிருந்தாலும், கோவை தொகுதியில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை திமுக வேட்பாளர் ராஜ்குமார் தோற்கடித்ததே பெரும் பேசுபொருளாக இருந்தது. அந்த வெற்றியின் பின்னணியிலும் செந்தில் பாலாஜியின் வழிகாட்டுதல் இருந்ததாக திமுகவினர் கூறிவந்தனர்.
பட மூலாதாரம், @V_Senthilbalaji/X
பின்பு உச்சநீதிமன்ற உத்தரவு பெற்று பிணையில் வந்தார் செந்தில் பாலாஜி. அதன்பின், அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவே, நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கில் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது குறித்து சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில்தான் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார். கோவையில் அவர் போட்டியிடுவது இதுவே முதல்முறை.
கடந்த முறை கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் நின்று வெற்றி பெற்ற அவர், கடந்த 2019 ஆம் ஆண்டில் அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில்தான் முதல் முறையாக திமுக சார்பில் நின்று வெற்றி பெற்றார்.
அதற்கு முன்பாக 2006 மற்றும் 2011 ஆகிய சட்டப்பேரவைத் தேர்தல்களில் கரூர் தொகுதியிலும், 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியிலும் அதிமுக சார்பில் வென்று சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இதுவரை அவர் தேர்தலில் களம் கண்ட 5 தேர்தல்களிலும் வென்ற அவர், தற்போது கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடவுள்ளார்.
இதேபோன்று ஜெயலலிதா இருந்தவரை, கோவை மாவட்டத்தில் அதிமுக ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், அவர் மறைந்த பின்பு நடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும், ஜெயலலிதா காலத்தில் இழந்த ஒரு தொகுதி உட்பட 10 தொகுதிகளையும் கைப்பற்ற வேலுமணியே காரணமென்று கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் இப்போதும் மேடைதோறும் பேசிவருகின்றனர்.
செந்தில் பாலாஜிக்கும் வேலுமணிக்குமான போட்டியாகும் சட்டப்பேரவை தேர்தல்
பட மூலாதாரம், SPVelumanicbe/X
ஆனால் அதற்குப் பின் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக பெரும் தோல்வியைச் சந்தித்ததற்கு, செந்தில் பாலாஜி கோவை மாவட்ட திமுக பொறுப்பாளராக வந்ததே காரணமென்று திமுகவினர் கூறுகின்றனர். இப்படியொரு சூழ்நிலையில் இந்தத் தேர்தலில் செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதியில் களம் காண்பது, இவ்விருவருக்குமான மோதலாக வர்ணிக்கப்படுகிறது.
பிபிசி தமிழிடம் இதுபற்றி பேசிய திராவிட இயக்க ஆய்வாளர் துரை கருணா, ”செந்தில் பாலாஜி, வேலுமணி இருவருமே தேர்தல் அரசியலில் கரை கண்டவர்கள். ஜெயலலிதா மறைந்த பின்னும் 10 தொகுதிகளை வென்றது வேலுமணியால்தான். இவர்களில் வேலுமணி அதிமுக தலைமைக்கு மட்டுமே நெருக்கமாக இருந்தவர். ஆனால், செந்தில் பாலாஜி மதிமுக, அதிமுக, அமமுக, திமுக என எல்லாக் கட்சிகளிலுமே குறுகிய காலத்தில் கட்சியின் தலைமைக்கு மிக நெருக்கமானவர். இந்த தேர்தல் வேலுமணிக்கு பெரும் சவாலாயிருக்கும்.” என்றார்.
கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளராக அறிவித்த பின்பு, கோவைக்கு வந்த செந்தில் பாலாஜிக்கு திமுகவினர் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. காந்திபுரத்தில் கூட்டணி தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்த செந்தில் பாலாஜி, ”யாரையும் குறைத்து மதிப்பிடுவதற்காக நான் தேர்தலில் போட்டியிடவில்லை. அரசின் சாதனைகளைக் கூறியே தேர்தலில் வெற்றி பெறுவேன்.” என்றார்.
பட மூலாதாரம், Durai Karuna
”கடந்த முறை கோவையிலுள்ள 10 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை திமுக கூட்டணி இழந்த காரணத்தால், கரூரில் போட்டியிட்ட என்னை கோவையில் போட்டியிட முதலமைச்சர் ஸ்டாலின் வாய்ப்பு வழங்கியுள்ளார்” என்று கூறிய செந்தில்பாலாஜி, முதலமைச்சருடைய ஆணைக்கிணங்க கோவையில் உள்ள 10 தொகுதிகளையும் உறுதியாக வெல்ல உழைக்க இருக்கிறோம் என்றார்.
செந்தில் பாலாஜி போட்டியிடவுள்ள கோவை தெற்கு தொகுதி, கடந்த 2011-க்கு முன்பாக கோவை மேற்கு தொகுதியாக இருந்தது. அதன்பின், கோவை தெற்கு தொகுதியானது. கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் அதிமுக கூட்டணியில் பாஜகவும் போட்டியிட்டன. இவர்களைத் தவிர்த்து, புதிதாக கட்சி துவங்கிய கமல் இந்தத் தொகுதியில் நேரடியாகக் களம் கண்டார். ஆனால், 1493 வாக்குகள் வித்தியாசத்தில் கமலை பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தோற்கடித்தார். காங்கிரஸ் கட்சிக்கு மூன்றாம் இடமே கிடைத்தது.
பட மூலாதாரம், Amman Arjunan
கடந்த 2016 தேர்தலில் இத்தொகுதியில் அதிமுக சார்பில் வென்ற அம்மன் அர்ஜுனன், கடந்த தேர்தலில் கோவை வடக்கில் மாறி நின்று வென்றார். இந்தத் தேர்தலில் கோவை வடக்கு பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இருவரும் தொகுதி மாறுவதாகத் தகவல் பரவியது. இதில் அம்மன் அர்ஜுனனுக்கு கோவை தெற்கு தொகுதியில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. ஆனால், கோவை வடக்கு தொகுதிக்கான பாஜக வேட்பாளர் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
கோவை தெற்கில் செந்தில் பாலாஜி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டதும், செய்தியாளர்களிடம் பேசிய அம்மன் அர்ஜுனன், ”உள்ளூரில் வேட்பாளர்களே இல்லையா, கரூரில் தோற்றுவிடுவோம் என்று இங்கே செந்தில்பாலாஜி வருகிறார். அவரை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பேன்.” என்று கூறியிருந்தார்.
அதுபற்றி செந்தில் பாலாஜியிடம் கேட்டதற்கு, ”கோவை தெற்கில் வெற்றி பெற்ற அவர்கள் (அம்மன் அர்ஜுனன், வானதி சீனிவாசன்) ஏன் கோவை வடக்கு தொகுதிக்குப் போனார்கள் என்பதை நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும். எனக்கு கரூரும், கோவையும் வேறு வேறல்ல. கரூர், அரவக்குறிச்சியில் வென்றதைப் போலவே இங்கேயும் வெற்றி பெறுவேன்.” என்று கூறினார்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட 19 வார்டுகளை உள்ளடக்கியுள்ள கோவை தெற்கு தொகுதியில் தற்போது 1,87,081 வாக்காளர்கள் உள்ளனர். இறுதியாக நடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியில் மட்டும் திமுக வேட்பாளர் ராஜ்குமார், 61,929 வாக்குகள் பெற்றிருந்தார். அந்தத் தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் தனித்தனியாக நின்றன. பாஜக சுமார் 53 ஆயிரம், அதிமுக சுமார் 19 ஆயிரம் வாக்குகள் பெற்றிருந்தன.
பட மூலாதாரம், Rajkumar
பிபிசியிடம் பேசிய கோவை நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ்குமார், ”செந்தில் பாலாஜி வெளியூர்க்காரர் என்றால் அம்மன் அர்ஜுனனும் திருமங்கலத்திலிருந்து கோவைக்கு குடிபெயர்ந்து வந்தவர்தான். கரூரிலிருந்து அவர் தொகுதி மாறி வருகிறார் என்றால் அம்மன் அர்ஜுனனும், வானதி சீனிவாசனும் ஏன் தொகுதி மாறியுள்ளனர். ஏனெனில் இருவருமே இரண்டு தொகுதிகளுக்கும் எதுவுமே செய்யவில்லை.” என்றார்.
ராஜ்குமார், அதிமுகவில் மாநகராட்சி கவுன்சிலர், மண்டலத் தலைவர், கோவை மேயர் என பல பதவிகளை வகித்தவர். ஜெயலலிதா மறைவுக்குப் பின், அதிமுகவிலிருந்து விலகி திமுகவுக்கு வந்தவர்.
”செந்தில் பாலாஜி நட்சத்திர வேட்பாளர். கோவையின் பொறுப்பாளராக இருக்கும் அவரே இங்கு நேரடியாக தேர்தலில் நிற்பது மற்ற 9 தொகுதிகளிலும் திமுகவுக்கு வலு சேர்க்கும். முதலமைச்சருக்கு நெருக்கமாக இருக்கும் அவர், இங்கே இருப்பது திமுகவுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கும் உதவும். கோவை அதிமுக கோட்டையாக இருந்ததற்கு செந்தில் பாலாஜி போன்ற செயல்பாட்டாளர்கள் பலரும்தான் காரணம். இப்போது அதில் பெரும்பலம் திமுகவுக்கு வந்துவிட்டது.” என்றார் கோவை எம்.பி. ராஜ்குமார்.
வேலுமணிக்கு எதிராக சாதாரண வேட்பாளரை திமுக நிறுத்தியுள்ளதா?
பட மூலாதாரம், Era Murugavel
ஆனால், செந்தில் பாலாஜி கோவையின் மக்கள் பிரதிநிதியாவதால் கோவைக்கு அமோக வளர்ச்சி கிடைத்துவிடும் அற்புதங்கள் நிகழும் என்று நம்ப முடியாது என்கிறார் எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான இரா.முருகவேள்.
”கோவையில் திமுகவுக்கு கட்டமைப்பு இருக்கிறது. ஆனால் தலைமை இல்லாமல் இருந்தது. அதை நிரப்புவதற்கு செந்தில் பாலாஜியின் வருகை நிச்சயம் பயன்படும். இருப்பினும், மிகக்குறுகிய கால அவகாசத்தில் அவரை களம் இறக்குவதாகத் தெரிவதால் அவரால் கோவையை முழுமையாக வெல்வது கடினம். அதேபோன்று, அதிமுகவும் முன்பு போல 10 தொகுதிகளையும் கைப்பற்ற முடியாது. இரு கட்சிகளும் சமமாகப் பங்கிட வாய்ப்புண்டு. ஆனால் வெற்றி, தோல்வி எதுவுமே 5 ஆயிரம் வாக்குகளுக்குள்தான் நிர்ணயிக்கப்படும்.” என்றார் முருகவேள்.

இந்த கருத்துகளை மறுத்து பிபிசியிடம் பேசிய கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளரும், கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் அர்ஜுனன், ”நான் ஏற்கெனவே கூறியதைப் போல, 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் செந்தில் பாலாஜியை தோற்கடிப்பேன். கடந்த முறை பாஜக கேட்டுக்கொண்டதால் தொகுதியைத் தரவேண்டியிருந்தது. எனது ஆதரவாளர்கள் கூட அதற்கு எதிராக பெரிய போராட்டம் நடத்தினர். கட்சி தலைமைக்குக் கட்டுப்பட்டுதான் கடந்த முறை நான் தொகுதி மாறினேன்.” என்றார்.
செந்தில் பாலாஜியை வெளியூர் வேட்பாளர் என்று கூறிய அம்மன் அர்ஜுனனுக்கு எதிராக, அவரும் திருமங்கலம் தொகுதியிலிருந்து வந்தவர்தான் என்று திமுகவினர் கூறும் குற்றச்சாட்டு பற்றி அவரிடம் கேட்டதற்கு, ”எனது 17 வயதில் இங்கே வந்துவிட்டேன். இப்போது 68 வயது. இதுதான் எனது சொந்தத் தொகுதி. இதே தொகுதியில்தான் நான் 40 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறேன். இந்தத் தொகுதிக்காக நிறைய உழைத்திருக்கிறேன். செந்தில் பாலாஜி பணத்தை நம்பி நிற்கிறார். நான் என் உழைப்பை நம்பி நிற்கிறேன்.” என்றார்.
இருவரும் நேரடியாக நிற்கும் தொகுதிகள் உட்பட கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளிலும் வாக்கு அரசியலைக் கையாள்வதில் வேலுமணி, செந்தில் பாலாஜி இருவருக்கும் இடையில் கடுமையான போட்டி இருக்கும் என்று கூறும் திராவிட இயக்க ஆய்வாளர் துரை கருணா, ஆனால் தேர்தல் அரசியலில் வேலுமணியை விட செந்தில் பாலாஜி வித்தகர் என்கிறார். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் தோற்கடித்தது செந்தில் பாலாஜிதான் என்று அதற்கு உதாரணத்தையும் விளக்குகிறார்.
”தேர்தல் அரசியலில் மட்டுமின்றி, அதிமுகவில் இருந்தபோது பல நெருக்கடியான சூழ்நிலைகளில் பல பெரிய விவகாரங்களை செந்தில் பாலாஜி கையாண்டிருக்கிறார். அதனால் அவருடைய வருகை, கோவை திமுகவை பலமாக்கும் என்பதோடு, அங்குள்ள பல தொகுதிகளை வெல்வதற்கும் உதவும். ஆனால், வேலுமணிக்கு இருக்கும் உள்ளூர் செல்வாக்கு அவருக்குப் பெரும் பலம். அதை செந்தில் பாலாஜி எப்படிக் கையாளப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.” என்றார் திராவிட இயக்க ஆய்வாளர் துரை கருணா.

இந்த விவாதங்கள் ஒருபுறமிருக்க, தொண்டாமுத்தூர் தொகுதியில் வேலுமணிக்கு எதிராக அறிமுகமில்லாத சாதாரண வேட்பாளர் ஒருவரை நிறுத்தியிருப்பதும், 2016 தேர்தலில் திமுக வென்ற ஒரே தொகுதியான சிங்காநல்லூர், கவுண்டம் பாளையம் ஆகிய 2 தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக் கொடுத்திருப்பதும் கோவையில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
திமுகவை சேர்ந்த கோவை எம்.பி. ராஜ்குமார், ”செந்தில் பாலாஜியும் உள்ளூர் வேட்பாளர்தான். அங்குள்ள பெரும்பான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர். மக்களிடம் நல்ல பெயர் எடுத்திருக்கிறார். தொகுதிக்குள் ஒருவரை வளர்க்க வேண்டுமென்றே அவரைத் தலைமை தேர்வு செய்துள்ளது. இதில் எந்த ரகசிய உடன்பாடும் இல்லை. அவர் நிச்சயமாக கடும் போட்டியை ஏற்படுத்துவார்.” என்றார்.
முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, வேலுமணி இருவரையும் தொடர்புகொள்ள பலமுறை முயன்றும் அவர்கள் தரப்பில் பதில் கிடைக்கவில்லை. ஆனால், இந்த கருத்துகளை திமுக, அதிமுக இரு தரப்பு நிர்வாகிகளும் மறுத்தனர். தேர்தலின் முடிவில் வேட்பாளர் தேர்வு, தொகுதி ஒதுக்கீடுக்கான விடையும் தெரியும், தங்கள் கட்சி 10 தொகுதிகளிலும் வெல்லும் என்றே இரு தரப்பினரும் ஒருமித்த பதிலைத் தெரிவித்தனர்.
கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளருமான அம்மன் அர்ஜுனன், ”வேலுமணியைப் போல அதிதீவிரமான அதிமுக விசுவாசியை வேறெங்கும் பார்க்கமுடியாது. அவருக்கு திமுகவுடன் உடன்பாடு செய்ய வேண்டுமென்ற எந்த அவசியமும் இல்லை. எப்படியும் தோற்போம் என்றுதான் அப்படிப்பட்ட வேட்பாளரை நிறுத்தியுள்ளனர். அதேபோன்று, ஒன்றுக்கு பதிலாக காங்கிரஸுக்கு 2 தொகுதிகளை ஒதுக்கிக் கொடுத்துள்ளனர்.” என்றார்.

பிரச்னைகளைப் பேசுவோம் – 2 | பெண்கள் பாதுகாப்பு
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு