பட மூலாதாரம், TVK
கரூரில் தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்து 10 நாட்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், உயிரிழந்தவர்கள் பலருடைய குடும்பத்தினரிடம் வீடியோ காலில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியுள்ளார்.
தங்களிடம் வீடியோ காலில் விஜய் பேசியபோது, இறந்தவர்களின் படங்களைப் பார்த்து கலங்கி கண்ணீர் விட்டதாகவும், ”உங்களுடைய குடும்பத்தில் ஒருவனாக நான் உங்களுடன் இருப்பேன். என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள்” என்று கூறியதாகவும் பலர், பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.
குழந்தையை இழந்தவர்களிடம் பேசும்போது, ”குழந்தைகளை கூட்டத்திற்கு அழைத்து வராதீர்கள் என்று நானே சொல்லியிருந்தேனே” என்றும் விஜய் சொன்னதாக சிலர் கூறினர்.
கரூரில் வேலுசாமிபுரம் என்ற பகுதியில், கடந்த செப்டெம்பர் 27 ஆம் தேதியன்று, தவெக தலைவர் விஜய் பரப்புரை செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நடந்த அன்றிரவே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கரூருக்கு நேரில் சென்று, இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி, சிகிச்சை பெற்றவர்களுக்கு ஆறுதல் கூறிச் சென்றார்.
அவரைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் கரூருக்கு சென்று சிகிச்சை பெற்றவர்களைச் சந்தித்தனர். சம்பவ இடத்திலும் சென்று பார்வையிட்டனர்.
பட மூலாதாரம், Getty Images
கட்சி நிர்வாகிகளின் போனில் வீடியோ கால் பேசிய விஜய்
ஆனால், தவெக தலைவர் விஜய் இதுவரை அங்கு செல்லவில்லை. அன்றிரவு அவர் சென்னை திரும்பும்போது, திருச்சி விமான நிலையத்தில் அவரிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.
மறுநாள் இந்த சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவும், அதன்பின் மூன்று தினங்கள் கழித்து காணொளியும் வெளியிட்ட விஜய், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், தமிழ்நாடு முதலமைச்சரையும் விமர்சித்தார்.
இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு ஒன்றில், “கரூர் சம்பவத்திற்கு பிறகு தவெக கட்சியினர் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டனர். கட்சி சார்பில் எந்த வருத்தமும் தெரிவிக்கப்படவில்லை. இந்த செயலை நீதிமன்றம் கண்டிக்கிறது” என நீதிமன்றம் கூறியிருந்தது.
இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ், “பாதிக்கப்பட்டவர்களை நேரில் வந்து விஜய் விரைவில் சந்திக்க உள்ளார். இது தொடர்பாக டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலமாக அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் சென்றும் அனுமதி கேட்க இருக்கிறோம். அரசு நடவடிக்கைகளுக்கு இப்போது கருத்து சொல்ல விரும்பவில்லை” என்றார்.
இதற்கிடையில், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக ஐந்து பிரிவுகளின் கீழ் தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், தவெக இணைப் பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் மற்றும் தவெக நிர்வாகிகள் பலர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. மதியழகன், தவெக நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் நடந்து 10 நாட்களுக்கு மேலாகியும் விஜய் அங்கு வராதது குறித்து, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகளும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளனர்.
அதேபோன்று சமூக ஊடகங்களிலும் இதுதொடர்பாக கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம், கடந்த 2 நாட்களாக விஜய் வீடியோ காலில் பேசி வருவது தெரியவந்துள்ளது. விஜய் வீடியோ காலில் பேசிய சிலருடன் பிபிசி தமிழ் பேசியது.
‘என் மனைவி, குழந்தைகளின் புகைப்படங்களுடன் ஒரு படமெடுக்க வேண்டும்’
இந்த சம்பவத்தில் தனது குடும்பத்தில் 3 பேரை இழந்து நிற்கிறார், ஆனந்த்ஜோதி. இவருடைய மனைவி ஹேமலதா, மகள்கள் சாய் லெட்சணா, சாய்ஜீவா ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
ஆனந்த்ஜோதியிடம் வீடியோ காலில் விஜய் பேசியுள்ளார். அதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஆனந்த்ஜோதி, ”கட்சி நிர்வாகிகள் வந்து அவர்களுடைய போனில் வீடியோ காலில் விஜய் பேசுவதாகக் கொடுத்தனர். அவர் என்னிடம் 2, 3 நிமிடங்கள் பேசியிருப்பார்.” என்றார்.
”உங்க குடும்பத்தில் ஒருவனாக உங்களின் அண்ணனாக என்னை நினைத்துக்கொள்ளுங்கள் என விஜய் கூறினார். இந்த இழப்பை ஈடுசெய்ய முடியாது. ஆனால் உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம். தவெகவினர் இருப்பார்கள். எந்த உதவி வேண்டுமானாலும் செய்வோம் என்றார். அவரிடம் நான் ஒரு கோரிக்கை வைத்தேன்.” என்றார் ஆனந்த்ஜோதி.
”என்னுடைய மனைவி, மகள்கள் மூவரும் விஜய்யை நேரில் பார்க்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தி என்னை அழைத்துப் போகச்சொன்னார்கள். ஆனால் அவர்களால் பார்க்க முடியவில்லை. அதனால் நீங்கள் நேரில் வரும்போது, என் மனைவி, குழந்தைகளின் புகைப்படங்களுடன் நின்று ஒரு படமெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அதற்கு போலீஸ் அனுமதி கிடைத்தவுடன் கண்டிப்பாக வருவேன். நிச்சயமாக வீட்டுக்கு வந்து நீங்கள் சொன்னது போல படமெடுக்கலாம் என்றார்.” என்று ஆனந்த் ஜோதி தெரிவித்தார்.
தன்னிடம் விஜய் பேசும்போது, அதைப் படமெடுக்கவோ, வீடியோ எடுக்கவோ யாரையும் அனுமதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். விஜய் பேசிய சிலரிடம் பிபிசி தமிழ் பேசியபோது, அவர்கள் அனைவரிடமும் கட்சி நிர்வாகியின் போனிலிருந்தே வீடியோ காலில் விஜய் பேசியதும், வீட்டுக்குள் கதவைப் பூட்ட வைத்து, அந்த குடும்பத்தினரை மட்டும் அனுமதித்ததாகவும், எதையும் படமெடுக்க அனுமதிக்கவில்லை என்றும் கூறினர்.
‘நேரில் வரமுடியாததற்கு மன்னிப்பு கேட்ட விஜய்’
கரூர் ஏமூர் புதூரைச் சேர்ந்த சக்திவேலின் மனைவி பிரியதர்ஷினி, மகள் தரணிகா இருவரும் இந்த சம்பவத்தில் மரணமடைந்துள்ளனர். அவரிடமும் விஜய் வீடியோ காலில் பேசியுள்ளார்.
தன்னிடமும், தன் சொந்த அக்காவும் மனைவியின் தாயுமான மரகதம் ஆகிய இருவரிடமும் 2–3 நிமிடங்கள் விஜய் பேசியதாக அவர் கூறினார்.
”இந்த இழப்பை ஈடுசெய்ய முடியாது. மிகவும் வருத்தமாக இருக்கிறது. குடும்பத்தில் ஒருவனாக என்னை நினைத்துக்கொள்ளுங்கள். இதுவரை நேரில் வரமுடியாததற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்றார். அவரிடம் என் மனைவி, மகள் இருவரின் படங்களையும் காண்பித்தேன். விரைவில் நேரில் சந்திக்கிறேன். நேரடியாக வரும்போது பேசிக்கொள்ளலாம். நல்லதே நடக்கும் என்று சொன்னார்.” என்றார் சக்திவேல்.
கரூரில் இந்த சம்பவம் நடந்த வேலுசாமிபுரம் பகுதியிலேயே குடியிருக்கும் விமல் என்பவரின் சுமார் 2 வயது குழந்தை துருவிஷ்ணுவும் உயிரிழந்துள்ளது. வீட்டுக்கு அருகில் தெரு முனையில் விஜய்யைப் பார்ப்பதற்காக தனது 2 குழந்தைகளுடன், விமலின் குழந்தையையும் அவருடைய அக்கா லல்லி துாக்கிச் சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட நெரிசலில் அந்த குழந்தை உயிரிழந்துள்ளது.
குழந்தையின் தந்தை விமல், லல்லி இருவரிடமும், அக்டோபர் 7-ஆம் தேதியன்று விஜய் வீடியோ காலில் பேசியுள்ளார்.
5 நிமிடங்களுக்குள்ளாகவே தங்களிடம் விஜய் பேசியதாக பலரும் தெரிவித்த நிலையில், தங்களிடம் அரை மணிநேரம் விஜய் பேசியதாக விமல் தெரிவித்தார்.
”குழந்தை இறந்தபோது நடந்ததை எனது அக்கா லல்லி விவரித்தார். அதை முழுமையாகக் கேட்டுக்கொண்ட அவர் மிகவும் கலங்கினார். குழந்தைகளை கூப்பிட்டுக்கொண்டு வராதீர்கள்…கர்ப்பிணிகள் வராதீர்கள் என்று நானே சொல்லியிருந்தேனே என்று சொன்னார். அதன்பின் கவலைப்படாதீர்கள், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக நான் இருப்பேன் என்று கூறி ஆறுதல் கூறினார்.” என்றார் விமல்.
வேலுசாமிபுரத்தைச் சேர்ந்த கோகிலா என்ற 14 வயது சிறுமியும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர். அவருடைய குடும்பத்தினரிடமும் நேற்று இரவு 7 மணிக்கு மேல், தவெக கட்சி நிர்வாகிகளின் போன் மூலமாக வீடியோ காலில் விஜய் பேசியிருக்கிறார்.
கோகிலாவின் குடும்பத்தினர் பலரும் ஒரே நேரத்தில் அதில் பேசியதாக கோகிலாவின் தந்தை பெருமாள் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
”என்னுடைய மகளின் போட்டோவைக் காண்பித்தோம். அதைப் பார்த்ததும் கலங்கி விட்டார். நடக்கக்கூடாதது நடந்துவிட்டது, எனக்கு என்ன பேசுவது எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை என்றார். கரூருக்கு வருவதற்கு முயற்சி செய்கிறேன். முறையான அனுமதி கிடைத்ததும் நேரில் வந்து சந்திக்கிறேன் என்றார்.” என்று கூறினார் பெருமாள்.
கரூர் வடக்கு காந்தி கிராமத்தைச் சேர்ந்த கிஷோர் நாமக்கல் மாவட்டம் மோகனுாரில் தனியார் பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவரும் இந்த கூட்ட நெரிசலில் உயிரிழந்துள்ளார். கிஷோரின் தந்தை கணேஷிடம் அக்டோபர் ஏழாம் தேதியன்றே வீடியோ காலில் விஜய் பேசியிருக்கிறார்.
”அன்றைக்கு விஜய்யைப் பார்த்து விட்டு உடனே வந்துவிடுவதாக என்னிடம் சொல்லிவிட்டுத்தான் என் மகன் சென்றான். பின் சடலமாகத்தான் அவனைப் பார்த்தேன். விஜய் என்னிடம் 5 நிமிடங்கள் பேசினார். அதைச் சொன்னதும் ஆறுதல் சொன்னார். சந்திக்க இப்போது நேரம் கைகூடி வரவில்லை. விரைவில் சந்திக்க நேரம் வரும் என்றார்.” என்று கூறினார் கணேஷ்.
‘இன்னும் பேசவில்லை’
விஜய் இன்றும் பலரிடம் பேசி வருவதும் தெரியவந்தது. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 33) இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். அவருடைய மனைவி நிவேதிதாவிடம் இன்று மதியம் விஜய் பேசியுள்ளார்.
கட்சியின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ், கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி ஆகியோர், அவர்களுடைய போனில் வீடியோ காலில் விஜய்யைப் பேச வைத்துள்ளனர்.
இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய மணிகண்டனின் தம்பி சபரி, ”சற்று முன்புதான் அருண்ராஜ் வந்தார். அவருடைய போனிலேயே எங்கள் அண்ணியிடம் விஜய் கால் மணி நேரம் பேசினார். அன்று நடந்ததை அண்ணி விவரித்தார். எதற்கும் கவலைப்பட வேண்டாம். நான் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருப்பேன். என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என்று பேசினார். முறைப்படி அனுமதி கிடைத்ததும் நேரில் வரும்போது உங்களை சந்திக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.” என்றார்.
இதேபோன்று, இந்த சம்பவத்தில் உயிரிழந்த அஜிதா என்ற பெண்ணின் தாய் மற்றும் தந்தையிடம் நேற்று முன் தினம் ஓரிரு நிமிடங்கள் விஜய் பேசியதாக அவருடைய உறவினர் ஒருவர் தெரிவித்தார்.
இதே விபத்தில் உயிரிழந்த ஆகாஷ் என்ற இளைஞரின் தந்தை இறந்துவிட்ட நிலையில், அவருடைய தாயாரிடம் தொடர்பு எண் இல்லை என்பதால், தன் மூலமாகவே ஆகாஷின் தாயாரிடம் எல்லோரும் பேசிவரும் நிலையில், விஜய் தரப்பிலிருந்து தன்னை யாரும் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை என்று பிபிசியிடம் தெரிவித்தார், ஆகாஷின் நண்பர் சந்தோஷ்.
இவரைப் போலவே சில குடும்பத்தினரிடம் விஜய் இன்னும் பேசவில்லை என தெரிகிறது.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 8) வரையிலும் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த நபர்கள் 33 பேருடைய குடும்பங்களுடன் விஜய் வீடியோ கால் மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்ததாக தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு