கரூர்: கரூரில் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை பனையூருக்கு வரவழைத்து சந்திக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூரில் கடந்த செப்.27-ல் நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிந்தனர். 110 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறவில்லை என்று தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையில், கடந்த 18-ம் தேதி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வங்கிக் கணக்கில் தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் வரவு வைக்கப்பட்டது.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வரவழைத்து சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய உள்ளூர் தவெக நிர்வாகிகள், “கரூரில் மண்டபம் கிடைக்காததால் விஜய் வரமுடியவில்லை. இதனால், பனையூரில் உள்ள அலுவலகத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேருந்து வசதி செய்து கொடுத்தால் வருவீர்களா?” என்று கேட்டறிந்தனர். எனினும், இதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து கரூர் சிவசக்தி நகரை சேர்ந்த ஆனந்தஜோதி (கூட்ட நெரிசலில் மனைவி, இரு மகள்களை பறிகொடுத்தவர்) கூறும்போது, “தவெக நிர்வாகிகள் செல்போனில் தொடர்பு கொண்டு, கரூரில் மண்டபம் கிடைக்காததால், விஜய் உங்களை சென்னைக்கு வரவழைத்து சந்திக்க விருப்பப்படுகிறார். எனவே, சென்னைக்கு வர விருப்பமா என கேட்டனர். பார்க்கலாம் என்று கூறியுள்ளேன்” என்றார்.