கரூர்: கரூரில் சிஐஐ, யங் இன்டியன்ஸின் சார்பில் நடைபெற்ற மாரத்தான், வாக்கத்தான் போட்டிகளில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
கரூர் சிஐஐ மற்றும் யங் இன்டியன்ஸ் இணைந்து கரூர் விஷன் 2030 நான்காம் பதிப்பு மாரத்தான் மற்றும் வாக்கத்தான் கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் இன்று (நவ.9ம் தேதி) நடைபெற்றது. பங்கேற்பாளர்களை சிஐஐ தலைவர் பிரபு வரவேற்றார். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தேசிய கொடியை ஏற்றிவைத்து ஆற்றிய சிறப்புரையில், “கரூரின் பொருளாதாரத்தை 2030ம் ஆண்டில் ரூ.50,000 கோடியாக உயர்த்த வேண்டும். நம் முன்னோர்கள் கட்டி அமைத்து கொடுத்த கரூரை நாம் மேலும் மேம்படுத்தி அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டும்” என தெரிவித்தார்.
தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, ஆட்சியர் தங்கவேல், எஸ்.பி. ஜோஷ் தங்கையா ஆகியோர் புறாக்களை பறக்கவிட்டு, கொடியசைத்து மாரத்தான், வாக்கத்தானை தொடங்கி வைத்து வாக்கத்தானில் பங்கேற்றனர். இந்நிகழ்வில், கரூர் கோட்டாட்சியர் முகமது பைசல், கரூர் மாநகராட்சி ஆணையர் சுதா, கரூர் வட்டாட்சியர் மோகன்ராஜ், சிஐஐ துணை தலைவர் பெருமாள், யங் இன்டியன்ஸ் யோகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏடிஎஸ்பி பிரபாகரன் தலைமையில் கரூர் டிஎஸ்பி செல்வராஜ், கரூர் நகர இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் உள்ளிட்டோர் போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
பெரியவர்களுக்கான மாரத்தான் போட்டி 10 கி.மீட்டர், 5 கி.மீட்டர் பிரிவிலும், சிறுவர்களுக்கான (8 வயது முதல் 14 வயதிற்குள்) மாரத்தான் போட்டி 5 கி.மீட்டர் பிரிவில் நடைபெற்றது. இதேபோல், பெரியவர்களுக்கான வாக்கத்தான் போட்டி 3 கி.மீட்டர் பிரிவில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

மாரத்தான் போட்டிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் ஆகியவற்றுடன் முதல் பரிசு ரூ.10,000, 2ம் பரிசு ரூ.5,000, 3ம் பரிசு ரூ.3,000 மற்றும் 4, 5ம் பரிசாக கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் இலவசமாக டிஷர்ட் மற்றும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டன.

போட்டிகள் காரணமாக கரூர் திரு.வி.க. சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் கரூர் லைட் ஹவுஸ் முனையில் இருந்து அமராவதி ஆற்று பாலம் வரை வாகன நெரிசல் ஏற்பட்டது.