பட மூலாதாரம், Getty Images
கரூரில் குட்கா வியாபாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்த பணத்தை காவல்துறையினரே பதுக்கியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக காவல் ஆய்வாளர் உள்பட 8 பேர் மீது திருச்சி சரக டிஐஜி வருண்குமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.
காவலர்களுக்குள் ஏற்பட்ட தனிப்பட்ட மோதல் காரணமாகவே பணத்தை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறுகிறார் கரூர் நகர டி.எஸ்.பி.
திருச்சி டிஐஜியின் நடவடிக்கை வரவேற்கப்பட வேண்டிய ஒன்று எனக் கூறுகிறார் காவல்துறை முன்னாள் டிஜிபி ரவி.
குட்கா வியாபாரிகள் கைது விவகாரத்தில் நடந்தது என்ன? பணம் பதுக்கல் சர்ச்சை தொடர்பாக கரூர் போலீஸ் சொல்வது என்ன?
கரூர் மாவட்டம் பெரியகுளத்துப்பாளையம் பகுதியில் கடந்த ஜனவரி 30ஆம் தேதியன்று காலை வெங்கமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சித்ரா தேவி, சிறப்பு எஸ்.ஐ. செந்தில்குமார், தலைமைக் காவலர் சக்திவேல், முதுநிலைக் காவலர் உதயகுமார் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக குஜராத் மாநில பதிவெண் கொண்ட கார் ஒன்று வந்துள்ளது. ‘போலீசாரான எங்களைக் கண்டதும் காரில் வந்தவர்கள் திரும்பிச் செல்ல முற்பட்டனர். அவர்களின் காரை நிறுத்தி விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்’ என வெங்கமேடு காவல் நிலையத்தில் பதிவான முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
போலீசாரின் விசாரணையில், காரில் இருந்த நபர்களில் கேவர்சிங், சுரேஷ் ஹிரா ராம் ஆகியோர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்தது. மற்றொரு நபரான ஹரி ராமின் முகவரியாக கரூர் தெற்கு முருகநாதபுரம் முகவரி இருந்துள்ளது.
மூவரும் ஹிந்தியில் பேசியதால் வடமொழி தெரிந்த வாங்கப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் உதவியோடு காரில் சோதனை நடத்தப்பட்டதாக முதல் தகவல் அறிக்கை கூறுகிறது.
குட்கா வியாபாரிகளிடம் பறிமுதல் செய்த ரூ.1 லட்சம் பதுக்கலா?
இந்தச் சோதனையில் ஆறு சாக்குப் பைகளில் இருந்து 92.80 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருட்களும் எட்டு சாக்குப் பைகளில் இருந்து பான் மசாலா பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவற்றின் மொத்த மதிப்பு ரூ.1,34,242 என எஃப்.ஐ.ஆரில் குறிப்பிட்டுள்ள போலீசார், ‘பெங்களூருவில் இருந்து இவற்றை வாங்கி வந்து, அதிக லாபம் அடையும் நோக்கில் கரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்ய இருந்ததாக மூவரும் ஒப்புக் கொண்டுள்ளனர்’ எனத் தெரிவித்துள்ளனர்.
மூவர் மீதும் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 123 மற்றும் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் சட்டம் (COTPA Act 2003) 24(1) ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் காவல்துறையின் நடைமுறைகள் முடிந்த பிறகு கரூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்னிலையில் மூவரையும் ஆஜர்படுத்தியுள்ளனர்.
அப்போது, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களைப் பறிமுதல் செய்திருப்பது குறித்துக் கைதான நபர்களிடம் நீதிமன்ற நடுவர் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
குட்கா கடத்தி வந்ததை ஒப்புக் கொண்ட மூவரும், ‘சோதனையின்போது ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனால், அதைக் கணக்கில் காட்டவில்லை,’ என்று கூறியதாக பெயரை வெளிப்படுத்த விரும்பாத காவல்துறை அதிகாரி பிபிசி தமிழிடம் கூறினார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட மாஜிஸ்திரேட், குற்றம் சுமத்தப்பட்ட மூன்று பேரையும் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
8 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை
பட மூலாதாரம், Getty Images
இது தொடர்பாக, திருச்சி சரக டிஐஜி அலுவலகம் விசாரணை நடத்தியது. இதில் கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சார் ஆய்வாளர் உதயகுமார், வெங்கமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சித்ராதேவி, தனிப்பிரிவு தலைமைக் காவலர் ரகுநாத் ஆகியோர் விசாரிக்கப்பட்டனர்.
விசாரணை முடிவில், காவல் ஆய்வாளர் மணிவண்ணன் உள்பட 8 பேரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி கடந்த செவ்வாய்க் கிழமையன்று (பிப்ரவரி 4) திருச்சி சரக டிஐஜி வருண்குமார் உத்தரவிட்டார்.
இந்தச் சம்பவம் நடந்த இடத்தில் இல்லாத காவலர்களும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று வருத்தத்துடன் தெரிவிக்கிறார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட காவலர் ஒருவர்.
பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசிய அவர், இந்த விவகாரத்தில் நடைபெற்றது என்ன என்று விவரித்தார்.
“ஜனவரி 30ஆம் தேதியன்று காலையில் நடந்த சோதனையில் குட்கா உள்பட போதைப் பொருட்கள் பிடிபட்டன. அன்று இரவு சுமார் 7 மணியளவில் காவல்துறை நடைமுறைகள் முடிந்துவிட்டன. ஆனால், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தைக் கணக்கு காட்டவில்லை” எனக் கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “பணத்தைப் பறிமுதல் செய்தது குறித்து கைதான நபர்கள் மாஜிஸ்திரேட்டிடம் முறையிட்டனர். அதன் தொடர்ச்சியாக, 8 பேர் மீது டிஐஜி நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த நடவடிக்கைக்கு ஆளான சிலர், சம்பவம் நடந்த இடத்திலேயே இல்லை” என்று கூறினார் அவர்.
கரூர் டவுன் டிஎஸ்பி சொல்வது என்ன?
பட மூலாதாரம், Special Arrangement
பணம் ஏதும் பதுக்கப்படவில்லை என்று கரூர் டவுன் டி.எஸ்.பி. செல்வராஜ் பிபிசி தமிழிடம் தெரிவிக்கிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “பணத்தை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பணத்தை உடனே ஒப்படைக்குமாறு கூறினேன். அவ்வாறு செய்யாமல் வேண்டுமென்றே சிலர் தாமதம் செய்ததால் பிரச்னை ஏற்பட்டது,” என்றார்.
“தவறு செய்யாவிட்டால் எட்டு பேரை காத்திருப்போர் பட்டியலில் வைக்க வேண்டிய அவசியம் ஏன்?” என பிபிசி தமிழ் கேட்டது.
“இது முதற்கட்ட நடவடிக்கைதான். தாமதத்தை ஏற்படுத்தியது தவறு என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது விசாரணை முடிவில்தான் தெரிய வரும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “தாமதம் ஏற்பட்டது தொடர்பாக பிரச்னை எழுந்ததும், மறுநாளே பணத்தைக் கொடுத்துவிட்டனர். இதைப் பற்றி விசாரணை நடந்து வருகிறது. மேலதிக விவரங்களைப் பேச விரும்பவில்லை” என்று மட்டும் பதில் அளித்தார்.
‘மக்களுக்கு நம்பிக்கை வரும்’ – முன்னாள் டிஜிபி
பட மூலாதாரம், Special Arrangement
“இந்த வழக்கில் திருச்சி டிஐஜியின் நடவடிக்கை வரவேற்கப்பட வேண்டிய ஒன்று” எனக் கூறுகிறார் காவல்துறை முன்னாள் டிஜிபி ரவி.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “குற்றவாளிகளைப் பிடிக்கச் செல்கிறவர்களே, குற்றவாளியாக மாறி பணத்தைப் பறிப்பதை ஏற்க முடியாது. இதுபோன்ற சம்பவங்களில் நடவடிக்கை எடுக்கும் போதுதான் காவல்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை வரும்” எனக் கூறுகிறார்.
“இதுபோன்ற சம்பவங்களைக் கண்டுகொள்ளாமல் விடும்போது தவறுகள் தொடரவே வாய்ப்பு அதிகம்,” எனக் கூறிய ரவி, “இது ஒரு உதாரணம். இதுபோல தவறு செய்யும் நபர்களைக் களையெடுக்க வேண்டும்,” என்றார்.
தொடர்ந்து பேசிய ரவி, “பண விவகாரத்தில் இடைநீக்க உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. சாட்சிகளைக் கலைத்துவிடக் கூடாது என்பதற்காக காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளனர்.
விசாரணையில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் கூறும் தகவலில் உண்மை உள்ளதா என்பது ஆராயப்படும். விசாரணை முடிவில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள்” எனக் கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு