கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் இன்று (அக்டோபர் 13) உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான மூவர் குழு சிபிஐ விசாரணையை மேற்பார்வையிடும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தவெகவின் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், “வலி மிகுந்த நாட்களை கடந்து வருகிறோம், எங்களுக்கு நெருக்கடியான காலகட்டம் இது. எங்கள் உறவுகள், எங்கள் குடும்பம் துக்கத்தில் உள்ளது. தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்த போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் எழுச்சி இருந்தது. கரூரில் நடைபெற்றது முதல் கூட்டம் கிடையாது. திருச்சி, நாகப்பட்டினம், அரியலூர் என பல மாவட்டங்களுக்கு சென்றுள்ளார். எனவே கரூரில் அன்று என்ன நடந்தது என்ற உண்மையை பதிவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். நாங்கள் பிரசாரங்களுக்கு செல்லும் போது காவல்துறை பெரிதாக உதவி செய்வதில்லை. அரியலூரில் உதவி செய்தனர், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சில தகவல்களை கொடுத்து உதவினார். அதனால் அந்தக் கூட்டத்தை ரத்து செய்தோம். ஆனால் அன்றைய தினம் நாமக்கல்லில் கூட்டத்தை முடித்து விட்டு, கரூரில் உள்ளே நுழையும் போது கரூர் காவல்துறை எங்களை வரவேற்றார்கள், திட்டமிட்ட இடத்தில் கொண்டு போய் நின்று பேசுங்கள் என்று கூறினார்கள். அவர்கள் நிறுத்திய இடத்தில் தான் பேசினோம்.” என்றார்.
“விஜய் தாமதமாக வரவில்லை”
மேலும் பேசிய ஆதவ் அர்ஜூனா, “எங்கள் தலைவர் (விஜய்) தாமதமாக வந்தார் என்று வதந்திகள் பரப்பப்பட்டன. கரூரில் காவல்துறை வழங்கிய நேரம் மதியம் 3 மணி முதல் இரவு -10மணி வரை. அந்த நேரத்துக்குள் அங்கு வந்துவிட்டோம்.
தவறுகள் இருந்தால் கரூர் காவல்துறை ஏன் மாவட்ட எல்லையில் வரவேற்றது? கூட்டத்தில் தண்ணீர் கேட்ட போது விஜய் தண்ணீர் கொடுத்தார். ஆம்புலன்ஸ் வழி விட வேண்டும் என்ற போது அதற்கும் வழிவிட்டார். இந்த இடத்தை எந்த அளவுக்கு கட்டாயப்படுத்தி கொடுத்தார்கள் என்ற ஆதாரங்களை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம்.” என்று கூறினார்.
” நாங்கள் ஓடவில்லை”
தமிழக அரசின் விசாரணை மீதும் நம்பிக்கை இல்லை என்று கூறிய ஆதவ் அர்ஜூனா, ” சம்பவம் நடந்த உடன் நாங்கள் ஓடி விட்டோம் என்று கூறுவது உண்மையல்ல. கரூர் எல்லையில், நான், நிர்மல் குமார், அருண் ராஜ், ஆனந்த் ஆகியோர் காத்திருந்தோம். எங்கள் மொபைல் நெட்வொர்க் – தரவுகளை சரி பார்த்து அதை தெரிந்துக் கொள்ளலாம். காவல்துறையினர் எங்களை வரவேண்டாம், வந்தால் கலவரம் ஏற்படும், பிரச்னை உருவாகும் என்று கூறினார்கள். அதையும் உச்சநீதிமன்றத்தில் தெரிவிப்போம். திட்டமிட்டு, தவெக வரக்கூடாது என்று ஒட்டுமொத்த மாவட்டச் செயலாளர்கள் மீது தீவிரவாதிகள் போல தடியடி நடத்தினார்கள்.
இறப்பு ஏற்பட்ட மூன்று -நான்கு நாட்கள் என்ன செய்வதென்று தெரியவில்லை. நாங்கள் முதலில் மனிதர்கள். பிறகு தான் அரசியல்வாதிகள். எங்கள் வீட்டில் யாராவது இறந்து போனால் உடனே ஊடகங்களுக்கு வந்து பேட்டி அளிக்க முடியுமா? கடந்த மாதம் 27-ம் தேதி முதல் அடுத்த ஞாயிறு வரை விடுமுறை, எனவே நீதிமன்றம் செல்ல முடியவில்லை. சமூக ஊடகங்களில் உண்மை பேசிய நபர்களை கைது செய்தார்கள். நீதிமன்றம் செல்ல முடியாத ஒரு வாரத்தில் திமுக தவெக மீது எப்படி குற்றம் சுமத்தி, பொய் பரப்பினார்கள் என்று எல்லாருக்கும் தெரியும்” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
“அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணை நடைபெறும் போதே அரசு விளக்கம் ஏன்? “
ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு, அரசு உயர் அதிகாரிகள், அரசு செயலர்கள் அரசு தவறு செய்யவில்லை என்று எப்படி சொல்வார்கள் என கேள்வி எழுப்பினார் ஆதவ் அர்ஜுனா. “ஒரு விசாரணை நடைபெறும் போது எப்படி அரசு இதை செய்ய முடியும்.” என்றார்.
மேலும், “சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கூட்ட நெறிமுறைகள் குறித்து வழக்கு நடக்கும் போது, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிறப்பு விசாரணை குழுவை அமைக்கிறார். அந்த விசாரணை வெளிப்படையாக நடைபெறுமா என்று தெரியாது. ஏனென்றால் உயர்நீதிமன்ற நீதிபதி, கடுமையாக கருத்துகளை, தவெக தான் தவறு செய்தது மாதிரி கருத்துகளை பதிவு செய்தார். தவெகவுக்கு எதிராக கடுமையான வார்த்தைகள், தலைவரின் தலைமை பண்பு, அரசியல் வருகை குறித்து எல்லாம் பேசப்பட்டது. என்ன கோபம் உங்களுக்கு?” என்று அவர் தெரிவித்தார்.
“சிபிஐ விசாரணைக்கு ஏன் கொண்டாடுகிறார்கள்? ” – திமுக
படக்குறிப்பு, திமுக வழக்கறிஞர் வில்சன்.
இந்த வழக்கு தொடர்பாக மூத்த வழக்கறிஞரும் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான வில்சன், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். “தவெக சிபிஐ விசாரணை கேட்கவேயில்லை, பிறகு ஏன் நீதிமன்ற உத்தரவு தங்களுக்கு கிடைத்த வெற்றியை போல் பேசுகிறார்கள்” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
அவர் பேசுகையில், ” இது இடைக்காலத் தீர்ப்பு. இறந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் தவெக என்ன செய்தது என்றால் ஒன்றும் இல்லை. வாய்க்கு வந்த படி பேசுகிறார் ஆதவ் அர்ஜுனா. அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணை தொடரும். சிறப்பு புலனாய்வு குழு இதுவரை நடத்திய விசாரணை அறிக்கையை ஒப்படைக்க சொல்லியிருக்கிறார்கள். அப்படி என்றால் இதுவரை நடந்தது சரியே. ” என்றார்.
சிபிஐ விசாரணை கோரிய இரண்டு மனுதாரர்கள் தங்களுக்கு தெரியாமல் வழக்கு தொடரப்பட்டதாக தெரிவித்தது குறித்து கேட்ட போது, ” தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு சம்பந்தப்பட்ட இரண்டு பேர் வீடியோ கால் மூலம் நீதிமன்றத்தில் பேசினார்கள். அவர்களை மனு அளிக்க சொல்லியிருக்கிறது நீதிமன்றம். மோசடியாக ஒரு தீர்ப்பைப் பெற்றால், நீதிமன்றம் அந்த தீர்ப்பை ரத்து செய்யும். இன்று கொண்டாடுகிறார்கள், அவர்களுக்கு தெரியட்டும், புரியட்டும் இதுபோன்ற பிரச்னை உள்ளது என்று. இது இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது. ” என்றார்.
வீடியோ கால் மூலம் வழக்கில் ஷர்மிளா, செல்வராஜ் ஆஜர்
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தங்கள் பெயரில் தங்களுக்கு தெரியாமல் மனு கொடுக்கப்பட்டதாக ஷர்மிளா மற்றும் செல்வராஜ் ஆகியோர் இன்று கூறியிருந்தனர்.
அவர்கள் இந்த விவகாரம் குறித்து கரூர் சட்ட உதவி மையத்தை நாடியதாகவும், எனவே சட்ட உதவி மையத்தின் மூலம் வழக்கறிஞரின் அலுவலகத்தில் இருந்து இன்று இந்த வழக்கில் வீடியோ கால் மூலம் உச்சநீதிமன்றத்தில் தங்கள் கருத்துகளை அவர்கள் தெரிவித்தனர் என்று சட்ட உதவி மையத்தைச் சேர்ந்த தமிழ்முரசு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.