பட மூலாதாரம், TVK
செப்டெம்பர் 27ம் தேதி கரூரில், த.வெ.க. தலைவர் விஜய் நடத்திய தேர்தல் பிரசாரத்தில் நெரிசல் மரணங்கள் ஏற்பட்டு இன்றுடன் ஒரு வாரம் ஆகிறது. இதில் 11 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கின் விசாரணையில் பல திருப்புமுனைகள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஒரு வார காலத்தில் நடந்தது என்ன?
செப்டம்பர் 27
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஒவ்வொரு வாரம் சனிக்கிழமையும் மாவட்ட வாரியாக பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அவ்வாறு கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி சனிக்கிழமை நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் பரப்புரை மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டத்தில் பரப்புரையை முடித்துவிட்டு இரவு கரூர் சென்றார். அப்போது பரப்புரை நடந்த வேலுசாமிபுரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதில் சம்பவ இடத்திலேயே சிலர் உயிரிழந்த நிலையில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சம்பவம் நடைபெற்ற சில மணி நேரத்திற்குள் கரூர் சட்டமன்ற உறுப்பினர் வெ.செந்தில்பாலாஜி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போன்றோர் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அன்றைய இரவே கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் அரசின் சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. கரூர் சம்பவம் தொடர்பாக விசாரித்து பரிந்துரைகளை வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது.
தவெக தலைவர் விஜய் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமலே சென்றது சமூக ஊடகங்களில் விமர்சனத்திற்குள்ளானது. திருச்சியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார் விஜய்.
இரவு 11 மணிக்கு “இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்” என உயிரிழப்புகளுக்கு வருத்தம் தெரிவித்து எக்ஸ் தளப் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் கரூர் சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டிருந்தனர்.
செப்டம்பர் 28
பட மூலாதாரம், X
சம்பவம் நடந்த அடுத்த நாள் காலை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் கரூர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்தனர். அதன் பிறகு இருவருமே செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
மாநில அரசை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி விஜய்க்கும் சில பரிந்துரைகளை வழங்கினார்.
மாநில அரசு எடுத்த நடவடிக்கைகளை விவரித்த உதயநிதி ஸ்டாலின் விஜயிடமும் கேள்வி கேட்குமாறு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள மற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்தனர்.
மத்திய அரசின் சார்பில் கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டது.
விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் நீளமான பதிவை வெளியிட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் நிவாரணம் வழங்க இருப்பதாக அறிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தவெக சார்பில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி இல்லத்தில் முறையீடு செய்யப்பட்டது.
வழக்கு அதற்கு அடுத்த நாளான செப்டம்பர் 29-ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக தவெக இணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்திருந்தார்.
ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தபோது விஜய் கைது செய்யப்படுவாரா என்கிற கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட்டது. “அரசியல் நோக்கத்தோடு எதையும் சொல்ல நான் விரும்பவில்லை. ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.
இச்சம்பவத்தை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட அருணா ஜெகதீசன் திருச்சிக்குச் சென்று விசாரணையைத் தொடங்கினார்.
காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம், கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மின்வாரிய அதிகாரிகளுடன் செய்தியாளர்களைச் சந்தித்து காவல்துறை மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்தார்.
காயமைடைந்து சிகிச்சை பெற்று வந்த கவின் என்பவர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது.
செப்டம்பர் 29
பட மூலாதாரம், Getty Images
கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமா மாலினி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
அதோடு தவெக தலைவர் சி.டி.ஆர் நிர்மல்குமார், என்.ஆனந்த் மற்றும் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மீது குற்றம்சாட்டி வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் மதியழகன் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 61 வயதான சுகுணா என்பவர் உயிரிழந்தைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது.
மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் எல்.முருகன் கரூர் சென்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “இனி தமிழகம் மட்டுமன்றி நாடு முழுவதும் இதுபோன்ற நிகழ்வு நடக்கக் கூடாது” என்றார் நிர்மலா சீதாராமன்.
ஸ்டாலின் தனது சமூக ஊடகப் பக்கங்களில் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கரூர் சம்பவம் தொடர்பாக வதந்திகள் பரப்பப்படுவதாகக் குற்றம்சாட்டிய அவர் பொய் செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் தெரிவித்தார். “எந்த ஒரு அரசியல் கட்சி தலைவரும் தனது தொண்டர்களும், அப்பாவி பொதுமக்களும் உயிரிழப்பதை விரும்ப மாட்டார்கள்.” என்றும் தெரிவித்திருந்தார்.
கரூர் சம்பவம் பற்றி வதந்தி பரப்பியதாக 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பாஜக, தவெக நிர்வாகி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
செப்டம்பர் 30
பட மூலாதாரம், X
கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தது பாஜக எம்பிக்கள் குழு, அதன் பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ்நாடு அரசிடம் 5 கேள்விகளை முன்வைத்தது.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால், கரூர் எம்பி ஜோதி மணி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கரூர் சென்று சிகிச்சை பெற்று வந்த மக்களைச் சந்தித்தனர்.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தவெக கரூர் மத்திய மாநகர நிர்வாகி மாசி பவுன்ராஜ் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
கரூர் சம்பவம் தொடர்பாக வீடியோ வெளியிட்ட விஜய் மற்ற மாவட்டங்களில் பரப்புரையின்போது ஏற்படாத நிகழ்வு கரூரில் மற்றும் எப்படி நடந்தது எனக் கேள்வி எழுப்பியிருந்தார். அந்த வீடியோவில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்பாக விஜய் பேசிய கருத்தும் பேசுபொருளானது.
இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் மூத்த அதிகாரிகள் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது ஏன் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என்பது தொடர்பாக விவரிக்கப்பட்டது.
கரூர் சம்பவம் பற்றி கருத்து தெரிவிக்காமல் தவிர்த்து வந்த அக்கட்சியின் தேர்தல் பரப்புரை மேலாண்மை பிரிவின் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உடனடியாக நீக்கினார். ஆனால் அந்தப் பதிவு வன்முறையைத் தூண்டும் விதத்தில் இருந்ததாகக் கூறி சென்னை சைபர் குற்ற காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அக்டோபர் 1
பட மூலாதாரம், Senthil Balaji
கரூரில் செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது அவரைப் பற்றி சமூக ஊடகங்களில் முன்வைக்கப்பட்ட கருத்துகளுக்குப் பதிலளித்துள்ளார்.
தவெக சார்பில் தண்ணீர் உள்ளிட்ட ஏற்பாடுகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்கிற குற்றச்சாட்டை முன்வைத்தார். “நெரிசல் சம்பவம் நடந்த மறுநாள், வேலுச்சாமிபுரத்தில், 2,000 செருப்புகள் கிடந்தன. ஒரு குடிநீர் பாட்டில் கூட இல்லை.” என்று கூறினார்.
விஜயின் பரப்புரை நிகழ்ச்சிகள் 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக தவெக சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அக்டோபர் 2
கரூர் துயரச் சம்பவத்திற்கு, தவெக தலைவர் விஜய் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை என்பது பற்றி பேசிய திருமாவளவன் அவ்வாறு செய்வதற்கு தமிழக அரசு அஞ்சுகிறதா? எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
“பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்வதை விட, இதை வைத்து எப்படி அரசியல் ஆதாயம் தேடலாம் என்று தான் விஜயும் குறியாக இருக்கிறார்.” என்றும் தெரிவித்தார்.
அக்டோபர் 3
பட மூலாதாரம், X/N Anand
என்.ஆனந்த் மற்றும் சி.டி.ஆர் நிர்மல்குமார் ஆகியோரின் முன் ஜாமின் மனுக்களை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்தச் சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. வழக்கு ஆரம்பக் கட்டத்தில் இருப்பதாகக் கூறி சிபிஐ விசாரணைக்கான கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. பேரணி மற்றும் ரோட் ஷா நடத்துவது தொடர்பாகவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
“கரூர் சம்பவத்திற்குப் பிறகு கட்சியினர் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டனர். கட்சி சார்பில் எந்த வருத்தமும் தெரிவிக்கப்படவில்லை. இந்த செயலை நீதிமன்றம் கண்டிக்கிறது” என இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.செந்தில்குமார் கண்டனம் தெரிவித்தார் என்கிறது லைவ் லா.
ராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஸ்டாலின் கரூர் சம்பவத்தில் பாஜக அரசியல் ஆதாயம் கிடைக்குமா என பார்ப்பதாகத் தெரிவித்தார்.
ஸ்டாலினின் கருத்தை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “கரூருக்கு ஓடோடிச் சென்ற நீங்கள், கள்ளக்குறிச்சிக்கு ஏன் செல்லவில்லை? வேங்கைவயலுக்கு ஏன் செல்லவில்லை? ஏர் ஷோ-வில் உயிரிழந்தோர் வீட்டுக்கு ஏன் செல்லவில்லை ? அப்போது நீங்கள் செய்வது அரசியல் இல்லாமல், அவியலா?” எனத் தெரிவித்தார்.
அக்டோபர் 4
பட மூலாதாரம், ANI
ஆதவ் அர்ஜுனா சில தினங்களுக்கு முன்பு தனி விமானம் மூலம் டெல்லி சென்றதாக செய்தி வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் இன்று உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் விமான நிலையத்திற்கு வெளியே வந்த அவரிடம் ஏஎன்ஐ செய்தி முகமை கேள்வி எழுப்பியது.
அப்போது, “நீதியின் வழியில் செயல்படுகிறோம். நீதி மற்றும் உண்மை வெளிவரும்.” என்று மட்டும் பதிலளித்தார்.
உயர்நீதிமன்றம் கூறியுள்ள கருத்துகள், வழிகாட்டுதல்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு மிகத் தீவிரமாக கவனத்தில் கொண்டு செயலாற்றி வருவதாக ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
“பலவற்றிலும் இந்தியாவுக்கே முன்னோடியான தமிழ்நாடு, கூட்ட நெரிசல் விபத்துகளைத் தவிர்ப்பதிலும் நாட்டுக்கு வழிகாட்டும். மாநிலம் முழுவதும் துறைசார் வல்லுநர்கள், அரசியல் கட்சியினர், செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என அனைவரோடும் கலந்தாலோசித்து ஒரு முழுமையான ‘நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) வடிவமைப்போம். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவும் பின்பற்றத்தக்க மாடலாக இது அமையும்.” என அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு