பட மூலாதாரம், Getty Images
கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் குழு ஒன்றையும் உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.
இந்தியாவையே உலுக்கிய கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை சென்னை உயர் நீதிமன்றம் அமைத்திருந்தது. இதனை எதிர்த்து விஜய் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என அதில் கோரப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்டவர் தரப்பு உட்பட மேலும் 4 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவர்கள் இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இந்த மனுக்களை ஜே.கே. மகேஸ்வரி, என்.வி. அஞ்சாரியா தலைமையிலான அமர்வு விசாரித்துவந்தது. இதில் கடந்த வாரம் வாத – பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அந்தத் தீர்ப்பில், வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்டோகி தலைமையிலான மூன்று பேர் குழு கண்காணிக்கும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அஜய் ரஸ்டோகி தவிர்த்த மற்ற இருவரும் தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியாக இருப்பார்கள் என்றாலும் அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.