படக்குறிப்பு, கரூர் பரப்புரையை வேண்டுமென்றே காலதாமதம் செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் வேண்டுமென்றே காலதாமதம் செய்ததாகவும் அனுமதியின்றி ரோட் ஷோ நடத்தியதாகவும் தவெக நிர்வாகிகள் மீது காவல்துறை தரப்பில் குற்றம்சாட்டுள்ளது.
காவல்துறை அதிகாரிகளின் அறிவுரையையும் மீறி தவெக நிர்வாகிகள் அசாதாரண செயல்களில் ஈடுபட்டதாகவும் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தவெக பரப்புரைக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட தற்போது வரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் ஒன்றை அமைத்துள்ளது. காவல்துறையும் கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக ஐந்து பிரிவுகளின் கீழ் தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், தவெக இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் மற்றும் தவெக நிர்வாகிகள் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.
முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன?
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) தற்போது வெளியாகியுள்ளது.
கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை செய்ய அனுமதி கேட்டு செப்டம்பர் 26-ஆம் தேதி தவெக சார்பில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அதோடு பரப்புரை தினமான சனிக்கிழமை 500 காவலர்கள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீர் செய்யும் பணிகளில் ஈடுபட்டதாக எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், TVK
படக்குறிப்பு, தவெகவின் அனுமதி விண்ணப்பத்தில் 10,000 தொண்டர்கள் வருவார்கள் எனக் கூறப்பட்ட நிலையில்25,000-க்கும் மேற்பட்டோர் வந்ததாக காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது.
சனிக்கிழமை மதியம் 12:00 மணிக்கு விஜய் கரூர் வர இருப்பதாக காலை 9 மணிக்கு தொலைக்காட்சிகளில் அறிவிக்கப்பட்டது, இதனால் காலை 10 மணி முதலே கூட்டம் கூடியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
“இதனால் வேலுச்சாமிபுரம் மெயின்ரோடு, கோவை சாலை, முனியப்பன் கோவில் ஜங்சன், கோவை சாலை, திருக்காம்புலியூர், ரவுண்டானா, மதுரை சேலம் பைபாஸ் ரோடு ஆகிய இடங்களில் கூட்டம் அதிகளவில் வர தொடங்கினார்கள்.” என எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெகவின் அனுமதி விண்ணப்பத்தில் 10,000 தொண்டர்கள் வருவார்கள் எனக் கூறப்பட்ட நிலையில் 25,000-க்கும் மேற்பட்டோர் வந்ததாக காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது.
கரூரில் பரப்புரை மேற்கொள்ள 12 மணிக்கு அனுமதி வாங்கியிருந்த நிலையில் நாமக்கலில் இருந்து புறப்பட்ட விஜய் மாலை 04:45 மணிக்கு கரூர் மாவட்ட எல்லையை அடைந்ததாக எஃப்.ஐ.ஆர் கூறுகிறது.
காவல்துறையால் விதிக்கப்பட்ட கட்டாய நிபந்தனைகளை வேண்டுமென்றே மீறி வரவேற்பு நடத்தியதாகவும் விஜயின் வாகனத்தை நிறுத்தி கால தாமதம் செய்ததாகவும் காவல்துறை தெரிவிக்கிறது.
“வேண்டுமென்றே காலதாமதம் செய்து தெருவில் அனுமதி இல்லாமல் ரோட்ஷோ நடத்தி போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடைஞ்சல் ஏற்படுத்தினர்.” என எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலதாமதமாக விஜயின் வாகனம் மாலை 06.00 மணிக்கு முனியப்பன் கோவில் ஜங்சனில் ராங்ரூட்டில் (தவறான வழியில்) பயணித்ததாகவும் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், TVK
படக்குறிப்பு, காவல்துறையால் விதிக்கப்பட்ட கட்டாய நிபந்தனைகளை வேண்டுமென்றே மீறியதாக எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“வேலுச்சாமிபுரம் ஜங்சனில் தொண்டர்களின் கூட்டத்திற்கு நடுவே வாகனத்தை நிறுத்தி வேண்டுமென்றே காலதாமதம் செய்தனர். அதே இடத்தில் அளவுக்கு அதிகமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.” என எஃப்.ஐ.ஆர் கூறுகிறது.
“காவல்துறை அறிவுரையை தவெகவினர் புறக்கணித்தனர்”
மாவட்ட செயலாளர் மதியழகன், என். ஆனந்த் மற்றும் சிடிஆர் நிர்மல்குமார் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் பலரிடமும் “அசாதாரண சூழல்கள் ஏற்பட்டு கூட்ட நெரிசலால் மூச்சு திணறல் கொடுங்காயம் உயிர் சேதம் ஏற்படும்” என எச்சரித்ததாக காவல்துறை எஃப்.ஐ.ஆரில் தெரிவித்துள்ளது.
“மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகிகள் எவரும் தொண்டர்களை சரிவர ஒழுங்குபடுத்தவில்லை.
ரோட்டில் அருகிலுள்ள கடைகளுக்கு நிழல் தரவேண்டி அமைக்கப்பட்டிருந்த குறுகிய சரிவான தகர கொட்டகைகளிலும் மற்றும் அருகிலிருந்த மரங்களிலும் கட்சி தொண்டர்கள் ஏறி அமர்ந்தனர்.
தகர கொட்டகை உடைந்ததாலும் மரம் முறிந்ததாலும் அதில் உட்கார்ந்திருந்த தொண்டர்கள் கீழே நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது சரிந்து விழுந்தனர். இதனால் பொதுமக்களில் பெரும்பாலோனோருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது.” என எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் பலத்தை பறைசாற்றும் நோக்கத்துடன் கட்சி ஏற்பட்டாளர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு விஜய் கரூருக்கு வருவதை நான்கு மணிநேரம் தாமதப்படுத்தியதாகவும் காவல்துறையால் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
நீண்ட காலதாமதத்தால் காத்திருந்த மக்கள் வெயிலின் தாக்கத்தால் சோர்வடைந்து தண்ணீர் மற்றும் மருத்துவ வசதி இல்லாமல் உடல் நிலை சோர்வடைந்தனர் என்றும் காவல்துறை எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.