0
கரூர் சம்பவம் தொடர்பான வழக்கில் இன்று (19) நடைபெற்ற விசாரணையின் போது, அன்றைய பிரசாரத்திற்கு தாமதமாக சென்ற காரணம் குறித்து த.வெ.க. தலைவர் விஜயிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வீதிகளில் ஏற்பட்ட வளைவுகள் மற்றும் போக்குவரத்து காரணமாக கரூருக்கு செல்வதில் சுமார் 7 மணி நேரம் தாமதம் ஏற்பட்டதாக விஜய் விளக்கம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஆதாரங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தபோதும் பிரசார வாகனம் தொடர்ந்து முன்னேறியது ஏன் என்பது உள்ளிட்ட கேள்விகளையும் சி.பி.ஐ. அடுக்கடுக்காக எழுப்பியுள்ளது. விஜய் அளித்த பதில்களின் அடிப்படையில், இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் அவரது பெயர் சேர்க்கப்படுமா என்பது முடிவு செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு செப்டெம்பர் 27ஆம் திகதி, தமிழ்நாட்டின் கரூரில் நடைபெற்ற த.வெ.க. பிரசார நிகழ்வின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கு, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜஸ் ரத்தோகி கண்காணிப்பில் சி.பி.ஐ.யால் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள், முன்னாள் கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் பல அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டு, கடந்த 12 ஆம் திகதி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் அவர் ஆஜராகி 6 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை எதிர்கொண்டார். பொங்கல் பண்டிகை காரணமாக மறுநாள் விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று திங்கட்கிழமை மீண்டும் அவர் ஆஜராகி, 5 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடைபெற்றுள்ளது.
விசாரணை நடைபெற்ற நேரத்தில் டெல்லி சிஜிஓ காம்பிளக்ஸ் பகுதியில் உள்ள சி.பி.ஐ. தலைமையகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இவ்வழக்கின் முதல்கட்ட குற்றப்பத்திரிகையை பெப்ரவரி முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் தாக்கல் செய்ய சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.