கரூர்: கரூர் வேலுசாமிபுரம் தவெக பிரச்சார கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கியதாக தவெக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார்.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27ம் தேதி நடந்த தவெக பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நெரிசலில் சிக்கியவர்களை காப்பாற்ற கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ்கள் வந்தன. அப்போது ஆம்புலன்ஸ் ஓட்டு நரை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அளித்த புகாரின்பேரில் கரூர் நகர போலீஸார் அடையாளம் தெரியாத 10க்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தனர். ஆம்புலன்ஸ் குறுக்கே காரை நிறுத்தியதாக கரூர் நகர போலீஸார் கார் சாவியையும், காரையும் பறிமுதல் செய்து வைத்திருந்தனர். இக்காரின் உரிமையாளர் மற்றும் ஓட்டுநரான சேலத்தை சேர்ந்த எஸ்.ஆர்.மணிகண்டன் கரூர் ஜேஎம் நீதிமன்றம் 1ல் மாஜிஸ்ட்ரேட் எஸ்.பி.பரத்குமார் முன்னிலையில் சரணடைந்தார்.
மேலும் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். மாஜிஸ்ட்ரேட் பரத்குமார் ஜாமீன் வழங்கியதை நீதிமன்றத்தில் கிளம்பி சென்றார். இந்நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கியதாக தவெக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேஷனை (40) கரூர் நகர போலீஸார் சேலத்தில் கைது செய்து விசாரணைக்காக இன்றிரவு கரூர் அழைத்து வந்துள்ளனர்.