கரூர்: கரூர் துயர சம்பவம் தொடர்பாக கரூர் சுற்றுலா மாளிகைக்கு சிபிஐ அதிகாரிகளிடம் மனு அளிக்க ஒரு ஜோதிடர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ இதுவரை 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி அக்.30-ம் தேதி கரூர் நகர இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், அக்.31-ம் தேதி வேலுசாமிபுரத்தில் உள்ள வியாபாரிகளிடம் விசாரணை நடத்தினர்.
அக்.31-ம் தேதி ஈரோடு சாலையை 3டி லேசர் கருவி மூலம் சாலையை அளவீடு செய்ததுடன் அப்பகுதியில் உள்ள கடைகள், நிறுவனங்கள், அலுவலகங்கள், வீடுகளில் நேரடியாக விசாரணை நடத்தி சிசிடிவி கேமரா பதிவுகளை வழங்க கேட்டனர். நவ.1-ம் தேதி முழுக்க 3டி லேசர் கருவி மூலம் அளவீடு பணிகள் மேற்கொண்டனர். நவ.2-ம் தேதி வேலுசாமிபுரம் வர்த்தகர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் கரூர் காமராஜபுரத்தில் ராம்குமாரை என்பவரைத் தேடிச் சென்றனர். அவர் அங்கு இல்லாததாலும் சென்னை சென்றிருப்பதாக கிடைத்த தகவல் காரணமாக 3 பேர் கொண்ட சிபிஐ குழு சென்னை சென்றது.
சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு சென்று பிரச்சார வாகனத்தின் சிசிடிவி கேமரா பதிவுகள், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் விவரங்களை கேட்டு சம்மன் வழங்கினார். ராம்குமார் குறித்தும் விசாரித்து வருகின்றனர். செப்.27-ம் தேதி வேலுசாமிபுரத்தில் தவெக பிரச்சாரக் கூட்ட பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த கரூர் மாவட்ட மற்றும் வெளிமாவட்ட போலீஸாரிடம் கடந்த 2 நாட்களாக விசாரணை நடைபெற்று வருகிறது.
கரூரில் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்தும், சுற்றுலா மாளிகைக்கு வெளியே தங்கியும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். வேலுசாமிபுரத்தில் இருந்து விசாரணைக்கு வந்தவர்களை வழக்கறிஞர் ஒருவர் தூண்டிவிட்டு வருவதாக சந்தேகிக்கும் சிபிஐ அதிகாரிகள், அந்த வழக்கறிஞரின் விவரங்களை கண்டுபிடித்து அவரையும் விசாரணைக்கு ஆஜராகக் கோரி சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், கரூர் சுற்றுலா மாளிகையில் விசாரணை பணிகளை மேற்கொண்டு வரும் சிபிஐ அதிகாரிகளை கரூர் பசுபதிபாளையத்தை சேர்ந்த ஜோதிடர் சுந்தரம் இன்று (நவ.5) காலை 11.30 மணிக்கு சந்திக்க வந்தார். இது குறித்து பாரா காவலர் அளித்த தகவலின்பேரில் சிபிஐ இன்ஸ்பெக்டர் மனோகரன், ஜோதிடரை சந்தித்து தற்போது பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட போலீஸாரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதால் வரும் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் வருமாறு கூறி அனுப்பி வைத்தார்.
மேலும், இதுபோன்ற விஷயங்களை செய்தியாளர்கள் ஊக்குவிக்க வேண்டாம். மேலும், இதன் பின்னணியில் யாரேனும் இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஜோதிடர் ஆர்.சுந்தரம் கொண்டு வந்த மனுவில், ‘ஆக.14-ம் தேதி பசுபதிபாளையம் காவல் நிலையம் அருகேயுள்ள ரவுண்டானா அருகே சாலையை ஆக்கிரமித்து திமுக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் செப்.27-ம் தேதி தவெக பிரச்சாரக் கூட்டத்துக்கு ஈரோடு சாலையில் வேலுசாமிபுரத்தில் எதற்காக அனுமதி கொடுக்கப்பட்டது என எஸ்பியிடம் மனு அளித்துள்ளேன்.
இந்த கோர சம்பவத்துக்கு 100-க்கு 100 சதவிகிதம் அரசும், கரூர் காவல் துறையும்தான் காரணம் என்பதை பதிவு செய்கிறேன். முதலில் காவல் துறை சாலையை மறித்து வாகன போக்குவரத்தை தடை செய்து பரப்புரைக்கு அனுமதி வழங்கியது முதல் தவறு. காவல் துறை தடியடி நடத்தி அதன் காரணமாக மக்கள் முண்டியத்து ஒருவர் ஒருவர் மீது விழுந்து உயிரிழந்துள்ளனர். மேலும் இதன் பின்னணியில் சதிச் செயலும் உள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.