• Wed. Oct 15th, 2025

24×7 Live News

Apdin News

கரூர் நெரிசல் உயிரிழப்புக்கு சட்டப்பேரவையில் இரங்கல் | Condolences in the TN Assembly for the Karur stampede victims

Byadmin

Oct 15, 2025


சென்னை: தமிழக சட்டப்பேரவை மழைக்கால கூட்டம் நேற்று தொடங்கிய நிலையில், மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள், கரூர் நிகழ்வில் மறைந்தோர், பிரபலங்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவை விதிகள்படி, பேரவையின் கூட்டம் 6 மாத இடைவெளியில் மீண்டும் கூட்டப்பட வேண்டும். அந்த அடிப்படையில், மார்ச் 14-ம் தேதி தொடங்கி நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடர், ஏப்.29-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மழைக்கால கூட்டத்தொடர், நேற்று தொடங்கியது. 4 நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று காலை 9.30 மணிக்கு பேரவை நிகழ்வுகள் தொடங்கின.

அவை கூடியதும் முன்னாள் உறுப்பினர்கள் ச.புரட்சிமணி (மங்களூரு), சு.குணசேகரன் (திருப்பூர் தெற்கு), வி.செ.கோவிந்தசாமி (காவேரிபட்டினம்), ஓ.எஸ்.அமர்நாத் (மதுரை கிழக்கு), ஆ.அறிவழகன் (கிருஷ்ணராயபுரம்), துரை அன்பரசன் என்ற ராமலிங்கம் (நெல்லிக்குப்பம்) , ம.அ.கலீலுர் ரகுமான் (அரவக்குறிச்சி), ரா.சின்னசாமி (தருமபுரி) ஆகியோர் மறைவு குறித்த இரங்கல் குறிப்புகளை பேரவைத்தலைவர் மு.அப்பாவு வாசித்தார். பின்னர், மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, கரூரில் கடந்த செப்.27-ம் தேதி அரசியல் கட்சி பரப்புரைக் கூட்டத்தில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபுசோரன், நாகலாந்து ஆளுநர் இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, தமிழக அரசு முதன்மை செயலர் பீலா வெங்கடேசன் மற்றும் எம்எல்ஏவாக இருந்து மறைந்த டி.கே.அமுல் கந்தசாமி ஆகியோர் மறைவுக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இரங்கல் குறிப்பு, இரங்கல் தீர்மானத்துடன் நேற்றைய பேரவை நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இன்று பேரவையில் இந்த நிதியாண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கு நிதி ஒதுக்கும் வகையில் மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.



By admin