திருச்சி: கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த வழக்கு, கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஒரு காரை கரூர் நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் சிபிஐ அதிகாரிகள் நவ.12-ம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரச்சார கூட்டம் கடந்த செப்.27-ம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்றது. அப்போது விஜயை பார்க்க ஆயிரக்கணக்கானோர் திரண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 100 மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு தனியாக விசாரணை நடத்தினர். பின்னர் சென்னை உயர்நீதிமன்றம் அக்.3-ம் தேதி உத்தரவின்படி ஐ.ஜி அஸ்ராக் கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி) நியமிக்கப்பட்டு அக்.5-ம் தேதி முதல் விசாரணை நடைபெற்றது.
இதற்கிடையே, உச்ச நீதிமன்றம் அக்.13-ம் தேதி இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி ரஸ்தோகி மேற்பார்வையில், சிபிஐ எஸ்.பி. பிரவீன்குமார் தலைமையிலான சிபிஐ விசாரணைக்குழு அக்.17 கரூர் வந்தனர். அன்றே எஸ்.ஐ.டி குழுவினர், சிபிஐ குழுவினரிடம் ஆவணங்களை ஒப்படைத்தனர்.
கரூர் தான்தோன்றிமலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அருகே உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கியிருக்கும் சிபிஐ அதிகாரிகளிடம் 1,316 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை சிறப்பு புலனாய்வு குழு ஒப்படைத்தனர்.அதைத் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் அக்.18-ம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
சம்பவம் நடைபெற்ற பகுதி, கடை உரிமையாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள் தமிழக வெற்றிக் கழக கட்சி நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பி நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில், கரூர் துயரச் சம்பவம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஒரு காரை கரூர் குற்றவியல் நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் சிபிஐ அதிகாரிகள் திருச்சி தலைமை குற்றவியல் நீதிபதி ஏ.பி.நசீர்அலி முன்னிலையில் நவ.12-ம் தேதி ஒப்படைத்தனர். சிபிஐ விசாரணை நடத்தும் வழக்குகளை கரூர் நீதிமன்றம் விசாரிக்க அதிகாரம் இல்லாததால், திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு வழக்கு தொடர்பான ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டதாக சிபிஐ தரப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கூறியது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவை அடுத்து கடந்த 1975-ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், திருச்சி மாவட்டத்துக்குட்பட்ட (திருச்சி மாவட்டம் பிரிக்கப்படுவதற்கு முன் அரியலூர், பெரம்பலூர், கரூர் ஆகியவை திருச்சி மாவட்டத்தில் இருந்தன) சிபிஐ விசாரிக்கும் சிறப்பு குற்ற வழக்குகளை திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டத்தின் சிபிஐ விசாரிக்கும் வழக்குகளையும் திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்கும் என மற்றொரு அறிவிப்பில் உள்ளது. அதன்படி, சிபிஐ விசாரிக்கும் கரூர் துயரச் சம்பவம் வழக்கு விசாரணை திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
மேலும், சிபிஐ வழக்குகளை பொறுத்தவரை, தலைமை குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்கும் வரம்புக்குட்பட்ட வழக்குகள், அமர்வு நீதிமன்றம் அல்லது மதுரை சிபிஐ நீதிமன்றம் விசாரிக்கும் வரம்புக்குட்பட்ட வழக்குகள் என பிரிக்கப்பட்டுள்ளது. கரூர் வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த பிறகு தான் அந்த வழக்கு விசாரணை திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்திலேயே தொடருமா அல்லது திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அல்லது மதுரை சிபிஐ நீதிமன்றத்துக்கு மாற்றப்படுமா என்பதை நீதிமன்றம் தெரிவிக்கும்’ என்றனர்.