• Fri. Nov 20th, 2026

24×7 Live News

Apdin News

கரையைக் கடக்கும் அக்வான் புயல் – தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

Byadmin

Nov 20, 2026


கரையை கடக்கும் அக்வான் புயல்

படக்குறிப்பு, கரையை கடக்கும் அக்வான் புயல்

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

வங்கக்கடலில் உருவான அக்வான் புயல், வடக்கு ஆந்திரப் பிரதேசம் – தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதியில் கோபால்பூர் அருகே கரையைக் கடந்து வருகிறது. புயலின் வெளிப்புற மழை மேகங்கள் ஏற்கெனவே நிலப்பகுதிக்குள் நுழைந்துள்ள நிலையில், அதன் மையம் கரையைக் கடக்கும் செயல்முறை நவம்பர் 20ஆம் தேதி முற்பகலில் நடைபெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் தீவிரப் புயல் நிலையிலிருந்து வலுவிழந்து புயலாக மாறியுள்ளது. நவம்பர் 20ஆம் தேதி காலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தேசிய அறிக்கையின்படி, அது வடக்கு-வடமேற்கு திசையில் மணிக்கு 23 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. அப்போது அதன் மையம் களிங்கப்பட்டினத்திலிருந்து கிழக்கே சுமார் 70 கி.மீ., ஒடிசாவின் கோபால்பூரிலிருந்து தெற்கே சுமார் 110 கி.மீ. தொலைவில் இருந்தது.

புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்; இடையிடையே காற்றின் வேகம் மணிக்கு 90 கி.மீ. வரை அதிகரிக்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புயல் கரையைக் கடந்த பிறகு படிப்படியாக வலுவிழக்கும் என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

ஆந்திராவில் கனமழை: ஸ்ரீகாகுளத்தில் 16 செ.மீ. பதிவு

அக்வான் புயலின் தாக்கத்தால் வடக்கு ஆந்திரப் பிரதேசத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

ஆந்திரப் பிரதேச மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் நிர்வாக இயக்குநரும், நிகழ்நேர ஆளுமை அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரியுமான பிரகர் ஜெயின் வெளியிட்ட தகவலின்படி, ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் இச்சாபுரம், கவிட்டி, சோம்பேட்டை, கஞ்சிலி, மந்தசா, பலாசா, வஜ்ரபுகொத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது.

By admin