கர்நாடகாவின் ஆலந்து சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்து 6018 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட வழக்கை மாநில அரசு, சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) மூலம் விசாரித்தது.
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவதற்காக ஒரு பெயருக்கு ரூ.80 கொடுக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும், இந்தப் பணத்தை யார் கொடுத்தார்கள் என்பது குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு இன்னும் எந்தத் தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை.
சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணையின்படி, இந்தத் தொகை கலபுரகி மாவட்டத்தில் உள்ள ஒரு தரவு மையத்தில் (Data Centre) பணிபுரியும் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட நான்கு அல்லது ஐந்து இளைஞர்களால் பெறப்பட்டது.
சிறப்பு விசாரணைக் குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் (பெயர் வெளியிட அவர் விரும்பவில்லை) பிபிசியிடம் பேசுகையில், “இந்திய தேர்தல் ஆணையத்தின் தரவுகளை அவர்கள் எவ்வாறு அணுகினார்கள் என்பது போன்ற சில அம்சங்களை நாங்கள் தற்போது ஆராய்ந்து வருகிறோம். ‘இலக்கு ஐபி முகவரியை’ பகிர்ந்து கொள்ளுமாறு ஆணையத்திற்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதியுள்ளோம். இது எங்கள் வழக்கை வலுப்படுத்தும்” என்று கூறினார்.
ஆலந்து சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த பாஜக வேட்பாளர் சுபாஷ் குட்டேதர், அவரது கூட்டாளிகள், தரவு மையத்தின் உரிமையாளர் மற்றும் அதன் ஊழியர்களின் வீடுகளில் சிறப்பு விசாரணைக் குழு சோதனை நடத்தியபோது, பெறப்பட்ட தொகை மற்றும் தொடர்புடைய தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
இருப்பினும், பண பரிவர்த்தனைக்கும் பாஜக வேட்பாளருக்கும் நேரடி தொடர்பு இருப்பதை சிறப்பு விசாரணைக் குழு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இந்த விஷயத்தை காங்கிரஸ் தலைவர் பி.ஆர். பாட்டீல் மிகைப்படுத்தி பேசுகிறார் என்று ஆலந்தின் பாஜக வேட்பாளர் சுபாஷ் குட்டேதர் கூறியுள்ளார்.
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரம் முதலில் 2023 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு வெளிச்சத்திற்கு வந்தது.
இதன் பின்னர், ஆலந்து சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் அதிகாரி (RO) இந்த விஷயத்தில் முறையாக புகார் அளித்தார்.
ஆர்ஓ மற்றும் அவரது குழுவினர் விசாரித்ததில், 24 விண்ணப்பங்கள் மட்டுமே நீக்குவதற்கு தகுதியானவை என்றும், மீதமுள்ளவை அனைத்தும் போலியானவை என்றும் கண்டறியப்பட்டது.
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் பாரம்பரியமாக காங்கிரஸ் வேட்பாளர் பி.ஆர். பாட்டீலை ஆதரித்து வந்தவர்கள்.
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டதில் உள்ள முரண்பாடு சரியான நேரத்தில் கண்டறியப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட தேர்தலில், பாட்டீல் தனது பாஜக போட்டியாளரான சுபாஷ் குட்டேதரை 10,348 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இருப்பினும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி இதை ஒரு பிரச்னையாக்கியபோது இந்த முழு விஷயமும் அதிக கவனம் பெற்றது.
ராகுல் காந்தி தான் முன்வைத்த ‘வாக்கு திருட்டு’ குற்றச்சாட்டுகளுக்கு மற்றொரு உதாரணமாக, ஆலந்தை மேற்கோள் காட்டினார். பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியில் உள்ள மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியை அவர் இதற்கு முன்பு குறிப்பிட்டிருந்தார்.
கர்நாடக அரசு அமைத்த சிறப்பு விசாரணைக் குழு
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செப்டம்பர் 18 அன்று ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.
இந்த விவகாரத்தை விசாரிக்க கர்நாடக அரசு செப்டம்பர் 20 அன்று ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது.
வாக்காளர் பெயர்கள் மோசடியாக நீக்கப்பட்டது தொடர்பான ஐபி முகவரிகள் குறித்த தகவல்களை சிஐடி (CID) கோரியதற்கு மத்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்கவில்லை என்பது அறியப்பட்டதை தொடர்ந்து இது செய்யப்பட்டது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு சிஐடி 18 கடிதங்கள் எழுதியது. தற்போது கூடுதல் காவல்துறை இயக்குநர் (டிஜிபி) பி.கே. சிங் தலைமையில் சிறப்பு விசாரணை குழு செயல்படுகிறது.
வாக்காளர்களின் பெயர்களை நீக்க முயற்சிக்கும் நபர்கள் எங்கிருந்து செயல்படுகிறார்கள் என்பதைக் கண்டறிய, தேர்தல் ஆணையத்திடம் இருந்து ‘ஐபி முகவரிகளை’ சிஐடி கோரியது.
ஒரு சிஐடி அதிகாரியின் கூற்றுப்படி, உள்ளூர்வாசி முகமது அஷ்ஃபக் 2023ஆம் ஆண்டு உள்ளூர் காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டார், ஆனால் அவர் குற்றமற்றவர் என பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இருப்பினும், தரவு மையத்தில் பணிபுரிந்து வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்கும் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அஷ்ஃபக்கின் மேலும் நான்கு கூட்டாளிகளை சிறப்பு விசாரணைக் குழு கண்டுபிடித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, பாஜக தலைவர் சுபாஷ் குட்டேதர், அவரது மகன்கள் ஹர்ஷானந்த், சந்தோஷ் மற்றும் அவரது பட்டய கணக்காளர் மல்லிகார்ஜுன் மஹந்தகோல் ஆகியோரின் வீடுகளில் சிறப்பு விசாரணைக் குழு சோதனை நடத்தியது.
இந்த சோதனைகளின் போது பல மடிக்கணினிகள் மற்றும் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குட்டேதரின் வீட்டிற்கு வெளியே எரிந்த வாக்காளர் பதிவுகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
பட மூலாதாரம், Subhash R Guttedar/Instagram
படக்குறிப்பு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.ஆர். பாட்டீல் இந்த விஷயத்தை ஊதிப் பெரிதாக்குகிறார் என்று சுபாஷ் குட்டேதர் குற்றம் சாட்டினார்.
பாஜக தலைவர் சொல்வது என்ன?
அக்டோபர் 18 ஆம் தேதி, சுபாஷ் குட்டேதர் உள்ளூர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், தனது வீட்டிற்கு வெளியே வாக்காளர் விண்ணப்பப் படிவங்களைக் கண்டுபிடிப்பது அசாதாரணமானது அல்ல என்று கூறினார்.
பண்டிகைக் காலங்களில் வீட்டை சுத்தம் செய்வது வழக்கம் என்றும், பணிப்பெண்கள் காகிதங்களை வீசியெறிந்திருக்கலாம் என்றும் அவர் கூறினார். தேர்தலில் போட்டியிட்டதால், தனது வீட்டில் வாக்காளர் பட்டியலைக் கண்டறிவது இயல்பானது என்றும் குட்டேதர் கூறினார்.
சித்தராமையா அரசாங்கத்தில் அமைச்சராக வேண்டும் என்பதற்காக, தனது காங்கிரஸ் போட்டியாளரான பி.ஆர். பாட்டீல் இந்தப் பிரச்னையை ஊதிப் பெரிதாக்கி வருவதாகவும் குட்டேதர் குற்றம் சாட்டினார்.
இந்த வழக்கின் விசாரணை வேகமாக முன்னேறி வருவதாகக் கூறப்பட்டாலும், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்கியவர்கள் அதற்கான ஓடிபி-களைப் (OTP) எப்படி பெற்றார்கள் என்பதை சிறப்புப் புலனாய்வுக் குழு இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.
விதிகளின்படி, வாக்காளர் பட்டியலில் தனது பெயரைச் சேர்க்க எந்தவொரு நபரும் விண்ணப்பிக்கலாம், ஆனால் பெயரை நீக்குவதற்கான செயல்முறை வேறுபட்டது.
தேர்தல் அதிகாரி மட்டுமே ஒரு வாக்காளரின் பெயரை நீக்க முடியும், அதுவும் வாக்குச்சாவடி நிலை அதிகாரி தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்த பின்னரே.
அவர் மூலம் சரிபார்ப்பு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகும், நீக்குதல் செயல்முறை முடிவடைவதற்கு முன்பு வாக்காளரின் மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி அனுப்பப்படும். இந்த ஓடிபி சரிபார்க்கப்பட்ட பின்னரே அல்லது அடையாளம் நிறுவப்பட்ட பின்னரே நீக்குதல் செயல்முறை தொடங்கும்.