கர்னூலில் தனியார் பேருந்து தீ விபத்தில் 20 பேர் இறந்ததை அடுத்து, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் தனியார் பேருந்துகளில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
விபத்து ஏற்பட்ட பின்னரே போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அவசரமாக ஆய்வுகளை மேற்கொள்வதாகவும், அதன் பிறகு அவர்கள் அதிக கவனம் செலுத்துவதில்லை என்ற விமர்சனங்களை போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.
இருப்பினும், கர்னூல் விபத்துக்கு முன்பு எப்போது, எங்கு விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன என்று பிபிசி கேட்டபோது, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில அதிகாரிகள் சரியான பதிலைக் கொடுக்கவில்லை.
போக்குவரத்து வாகனங்களின் நிலை தொடர்பான அரசு ஆய்வு குறித்து ஆந்திர மாநில போக்குவரத்துத் துறையின் துணை போக்குவரத்து ஆணையர் புரேந்திராவை பிபிசி தொடர்பு கொண்டபோது, தற்போது புயல் கண்காணிப்புப் பணிகளில் இருப்பதாகவும், பின்னர் தகவல்களை வழங்குவதாகவும் அவர் கூறினார். அவரிடமிருந்து தகவல்களை பெற்றவுடன் சேர்க்கப்படும்.
இதே விஷயம் குறித்து, பெயர் வெளியிட விரும்பாமல் பிபிசியிடம் பேசிய தெலங்கானா போக்குவரத்துத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர், “எங்களிடம் நிச்சயமாக அந்த விவரங்கள் இல்லை, ஆனால் நாங்கள் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டோம்” என தெரிவித்தார்.
விதிமுறைகளின்படி, தனியார் வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகளின் தகுதியை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அவ்வப்போது சரிபார்க்க வேண்டும்.
போருந்துகளை இயக்குபவர்கள் விதிகள் அனைத்தையும் பின்பற்றுகிறார்களா, பயணிகளின் பாதுகாப்பிற்கான நிலையான நடவடிக்கைகளை எடுக்கிறார்களா என்பதையும் போக்குவரத்து அதிகாரிகள் அவ்வப்போது சரிபார்க்க வேண்டும்.
ஆந்திராவில் 66 பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன
கர்னூல் சம்பவத்திற்குப் பிறகு அக்டோபர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் அகில இந்திய அனுமதி (AIP) பெற்ற பேருந்துகளில் சிறப்பு அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஆந்திரப் போக்குவரத்துத் துறையின் போக்குவரத்து இணை ஆணையர் என். சிவராம் பிரசாத் பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்த ஆய்வுகளின் ஒரு பகுதியாக, திங்கட்கிழமை நிலவரப்படி, பல்வேறு விதிமீறல்கள் தொடர்பாக மொத்தம் 371 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 66 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பேருந்துகளை ஆய்வு செய்ததில் பல பிரச்னைகள் இருப்பது தெரிய வந்ததாக சிவராம் பிரசாத் கூறினார். அவற்றில் முக்கியமாக பாதுகாப்பு உபகரணங்களின் குறைபாடுகள், தீயணைப்பான்கள் இல்லாதது, பயணிகளின் பெயர் பட்டியல் இல்லாதது மற்றும் முறையற்ற பேருந்து தகுதிச் சான்றிதழ்கள் ஆகியவை அடங்கும்.
விதிமீறல்களுக்காக மொத்தம் 7 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். என்டிஆர் மாவட்டத்தில் 61 வழக்குகளும், கர்னூல் மாவட்டத்தில் 37 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிவராம் பிரசாத் தெரிவித்தார்.
இரண்டு நாட்கள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், தீ பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத 97 பேருந்துகளையும், அவசரகால கதவுகள் இல்லாத 23 பேருந்துகளையும் கண்டறிந்ததாக அவர் கூறினார். மேலும் 6 பேருந்துகளுக்கு முறையான சான்றிதழ்கள் இல்லை என்றும், 12 பேருந்துகளில் பயணிகளின் பெயர் பட்டியல் இல்லை என்றும், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இரண்டு பேர் பேருந்துகளை ஓட்டியது கண்டறியப்பட்டது என்றும் அவர் தகவல்களைத் தெரிவித்தார்.
தெலங்கானாவில் 143 வழக்குகள்
அக்டோபர் 25 முதல் 27 வரை தெலங்கானாவில் நடத்தப்பட்ட திடீர் ஆய்வுகளின் போது 143 பேருந்துகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், 5 பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெலங்கானா போக்குவரத்துத் துறையின் இணைப் போக்குவரத்து ஆணையர் ரமேஷ் தெரிவித்தார்.
பேருந்துகளில் தீயணைப்பு உபகரணங்கள் இல்லாதது கண்டறியப்பட்டதாகவும், பதிவான வழக்குகளில் பாதிக்கும் மேற்பட்டவை இது தொடர்பானவையே என்றும் அவர் கூறினார்.
பேருந்துகளிலும் சரக்கு கொண்டு செல்லும் போக்கு
கர்னூல் பேருந்து விபத்து, பேருந்துகளில் பொருட்களை கொண்டு செல்வது தொடர்பான பிரச்னையை வெளிப்படுத்தியுள்ளது. பேருந்து விபத்து நடந்த வேமுரி காவேரி பேருந்தில் 400 மொபைல் போன்கள் இருந்ததை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
பெரும்பாலான தனியார் பயணப் பேருந்துகள், பயணிகளின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல் இயக்கப்படுகின்றன. பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை பாதிக்கும் மேல் நிரம்பாவிட்டாலும் பேருந்துகள் இயங்குவதற்கு முக்கிய காரணம் சரக்கு போக்குவரத்து என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
“ஹைதராபாத்திலிருந்து பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகளில் மின்சாரப் பொருட்கள், பல்வேறு வகையான உபகரணங்கள், உடைகள், உரங்கள், இரும்பு ஆகியவற்றை அதிக அளவில் கொண்டு செல்வதை கவனித்துள்ளோம். அதை நாங்கள் கட்டுப்படுத்துகிறோம்,” என்று ஆந்திரப் போக்குவரத்துத் துறையின் இணைப் போக்குவரத்து ஆணையர் என். சிவராம் பிரசாத் கூறினார்.
வேகக் கட்டுப்பாட்டில் கவனம் செலுத்துவதன் அவசியம்
மோட்டார் வாகன விதிகளின்படி, தனியார் பேருந்துகள் நெடுஞ்சாலையில் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க வேண்டும்.
ஆனால் பயணிகள் மற்றும் அளவுக்கு அதிகமான சரக்குகளை ஏற்றிய பேருந்துகள் அதீதமான எடையுடன், அதிகமான வேகத்தில் இயக்கப்படுகின்றன.
அதிவேகமாக செல்லும் பேருந்துகளில் எதிர்பாராத சூழ்நிலைகள் ஏற்படும்போது ஓட்டுநர்கள் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போவதால் விபத்துக்கள் ஏற்படுவதாக சிவராம் பிரசாத் நம்புகிறார்.
பெரும்பாலான பேருந்து விபத்துகளுக்கு அதீத வேகமே காரணம் என்றும், தற்போதைய நடவடிக்கைகள் இந்தப் பிரச்னையையும் தீர்க்கும் என்றும் அவர் கூறினார்.
ஆந்திராவில் இயங்கும் தனியார் பேருந்துகளில் 70 முதல் 80 சதவீதம் வரை நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் திரிபுரா போன்ற வடகிழக்கு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டவை.
மத்திய அரசின் விதிமுறைகளின்படி,’ஒன் இந்தியா ஒன் பெர்மிட்’ திட்டத்தின் ஒரு பகுதியாக, அகில இந்திய சுற்றுலா பெர்மிட்டின் கீழ் பதிவு செய்யும்போது, வாகனம் எந்த மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம்.
“வடகிழக்கு மாநிலங்களில் வரிகள் குறைவாக இருப்பதால், ஆந்திரா மற்றும் தெலங்கானாவைச் சேர்ந்த பேருந்து உரிமையாளர்கள் தங்கள் பேருந்துகளை அங்கே பதிவு செய்கிறார்கள். இருப்பினும் இப்படி பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் பொதுப் பேருந்துகளாக பயன்படுத்தக்கூடாது. அவை ஒப்பந்த வாகனங்களாக (குறிப்பிட்ட குழு பயணத்துக்கு) மட்டுமே இயக்கப்பட வேண்டும். ஆனால், விதிகளுக்கு மாறாக அவை பொது பயணிகள் பேருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன.
சமீபத்தில் விபத்துக்களில் சிக்கிய பல பேருந்துகள் வடகிழக்கு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டவை. அதேபோல், நாங்கள் ஸ்லீப்பர் பேருந்துகளுக்கு அனுமதி வழங்குவதில்லை. ஆனால், வடகிழக்கு மாநிலங்களில் ஸ்லீப்பர் பேருந்துகளை அவர்கள் விரும்பியபடி மாற்றியமைத்து அனுமதி பெறுகிறார்கள்.
முக்கியமாக அனுமதி பெற்ற பிறகு அவர்கள் இருக்கைகளை படுக்கைகளாக மாற்றுகிறார்கள். இவை அனைத்தும் விதிகளுக்கு முரணானது. இது பயணிகளின் உயிருக்கு ஆபத்தானது. அதனால்தான் இனிமேல், அந்தந்த மாநிலங்களிடமிருந்து அனுமதி பெற்ற பிறகு, எங்கள் மாநிலத்தில் ஓடும் பேருந்துகளை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணிப்போம்,” என்று ஆந்திரப் போக்குவரத்துத் துறையின் துணைப் போக்குவரத்து ஆணையர் ராஜரத்தினம் பிபிசியிடம் தெரிவித்தார்.