படக்குறிப்பு, உலகம் முழுவதும் மாபெறும் வரவேற்பை பெற்றுள்ள பாரசிடமால் மருந்து எப்படி வேலை செய்கிறதென்று நமக்கு தெரியாதுகட்டுரை தகவல்
எழுதியவர், ஆண்ட்ரே பியர்மாத் & சாரா பெல்
பதவி, பிபிசி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம், கர்ப்பிணி பெண்கள் ‘பாரசிடமால்’ மருந்துகளை வலி நிவாரணியாக உட்கொள்வதை, கருவில் உள்ள குழந்தைகளுக்கு ஏற்படும் ஆட்டிசம் பாதிப்புகளோடு இணைக்கவிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது, மருத்துவ வழிகாட்டுதல்களுக்கு முரணான முடிவு ஆகும்.
வெள்ளிக்கிழமையன்று, ஊடகங்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ஆட்டிசம் குறித்து ஒரு “அற்புதமான” அறிவிப்பை வைத்திருப்பதாக செய்தியாளர்களிடம் கூறினார். “ஆட்டிசம் முற்றிலும் கட்டுப்பாட்டில் இல்லை… அதற்கான ஒரு காரணம் நம்மிடம் இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்” என்றார்.
சில ஆய்வுகள் கர்ப்பிணிப் பெண்கள் சிகிச்சைக்காக அசிடமினோபன் (பாராசிடமால்) எடுத்துக்கொள்வதற்கும் ஆட்டிசத்துக்கும் இடையே ஒரு சிறிய தொடர்பைக் காட்டியுள்ளன. ஆனால் இந்த கண்டுபிடிப்புகள் சீரானவை அல்ல, மேலும் இந்த மருந்தே ஆட்டிசத்தை ஏற்படுத்துவதாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
பாரசிடமால் என்றால் என்ன?
பாராசிடமால் (அமெரிக்காவில் டைலெனோல்) என்பது ஒரு வலி நிவாரணி மருந்து ஆகும். இந்த மருந்துக்கான மூலப்பொருள் அமெரிக்காவில் அசிடமினோபன் என்றும் பிற இடங்களில் பாராசிடமால் என்றும் அழைக்கப்படுகிறது.
பல்வேறு பிரபலமான உற்பத்தி நிறுவனங்களுடைய பெயர்களில் சிறுவர்கள், பச்சிளங் குழந்தைகளுக்காகவும் இந்த மருந்து வடிவமைக்கப்பட்டு விற்கப்படுகிறது. இது வலிக்கும் காய்ச்சலுக்கும் சிகிச்சையளிப்பதற்காக உலகளவில் பரவலாக அனைவரது வீடுகளிலும் இருக்கும் மருந்தாகும்.
கர்ப்ப காலத்தில் பாதுகாப்பு
உலகெங்கிலும் உள்ள முக்கிய மருத்துவ குழுக்களும், அரசாங்கங்களும் கர்ப்பிணிப் பெண்கள் பயன்படுத்த இந்த மருந்து பாதுகாப்பானது என்று கூறுகின்றன.
மருத்துவர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு ஒரே பாதுகாப்பான வலி நிவாரணிகளில் ஒன்றாக பாரசிடமாலை தொடர்ந்து கொடுத்து வருவதாக அமெரிக்க மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவக் கல்லூரி கூறியுள்ளது.
மேலும் “கடந்த காலங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள், கர்ப்ப காலத்தின் எந்தவொரு பகுதியிலும் பாரசிட்டமல் பயன்பாட்டிற்கும் சிசு வளர்ச்சி பிரச்னைகளுக்கும் இடையிலான நேரடி உறவை நிரூபிக்கும் தெளிவான ஆதாரங்களைக் காட்டவில்லை” என்றும் தெரிவித்துள்ளது.
இந்த மருந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு வலி நிவாரணியாக “முதல் தேர்வு” என்று பிரிட்டன் தேசிய சுகாதார சேவையின் வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.
“இது கர்ப்ப காலத்தில் பொதுவாக எடுத்துக் கொள்ளப்படும் மருந்து, உங்கள் குழந்தைக்கு தீங்கு விளைவிக்காது” என்றும் அது கூறுகிறது.
பாரசிடமால் மருந்து தயாரிப்பாளரான கென்வ் நிறுவனம் கர்ப்பிணிப் பெண்களுக்கு மருந்து கொடுப்பதை ஆதரிப்பதுடன், இது அவர்களுக்கு பாதுகாப்பான வலி நிவாரணி என்று கூறுகிறது. பிபிசி அவர்களின் கருத்துக்காக அவர்களை தொடர்பு கொண்டது.
மருந்து நிறுவனமும் அமெரிக்க மருத்துவர்களும் கர்ப்பிணி பெண்கள் எந்தவொரு மருந்தையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு மருத்துவர்களின் ஆலோசனையை பெறுமாறு அறிவுறுத்துகின்றனர்.
அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகம், அதிக காய்ச்சல் இருந்தால் மட்டுமே வலி நிவாரணியை எடுத்துக் கொள்ளுமாறு கர்ப்பிணிப் பெண்களுக்கு அறிவுறுத்த இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதிகமான காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்படாத போது அந்த நிலையில் கர்ப்பிணி பெண்களும், கருவிலுள்ள சிசுவும் என இருவருக்குமே தீங்கு ஏற்படும்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பாராசிடமால் உட்கொள்வதற்கும் ஆட்டிசம் குறைபாட்டுக்கும் தொடர்பு இருக்கலாம் என அமெரிக்க அதிபர் பேசியுள்ளார்
பாரசிடமால் ஆட்டிசத்தை ஏற்படுத்துமா?
அமெரிக்க சுகாதாரத்துறை செயலாளர் ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர், ஐந்து மாதங்களில் ஆட்டிசத்துக்கான காரணத்தை தீர்மானிக்க “ஒருபெரிய சோதனையும், ஆராய்ச்சி முயற்சியும்” முன்னெடுக்கப்படும் என்று ஏப்ரல் மாதம் உறுதியளித்திருந்தார்.
ஆனால் பல பத்தாண்டுகளாக ஆராய்ச்சி செய்யப்பட்ட ஒரு சிக்கலான நோயான ஆட்டிசத்துக்கான காரணங்களைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல என்று நிபுணர்கள் எச்சரித்திருந்தனர்.
ஆராய்ச்சியாளர்களின் பரவலான கருத்து என்னவென்றால், ஆட்டிசத்துக்கு ஒற்றை காரணம் எதுவும் இல்லை, இது மரபணு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் சிக்கலான கலவையின் விளைவாக ஏற்படுவதாக கருதப்படுகிறது.
ஆகஸ்ட் மாதம், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் சான் பொது சுகாதாரத் துறையின் தலைவர் தலைமையில் நடந்த ஆராய்ச்சியின் அறிக்கையில், கர்ப்ப காலத்தில் பாரசிடமாலை எடுத்துக் கொள்ளும் போது அது குழந்தைகளில் ஆட்டிசம் மற்றும் பிற நரம்பியல் வளர்ச்சிக் கோளாறுகளை உருவாக்க அதிக வாய்ப்புள்ளது என்று கண்டறியப்பட்டது.
மருந்தின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த சில நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் வாதிட்டனர். அதே நேரம் கர்ப்பிணிகளின் காய்ச்சலுக்கும், வலிக்கும் சிகிச்சையளிக்க இந்த நிவாரணி இன்னமும் முக்கியமானது என்றும் கூறினர்.
ஆனால் 2024-ல் வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வு, பாரசிடமால் பயன்பாட்டுக்கும், ஆட்டிசம் குறைபாட்டுக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறியது.
டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் சமூக வளர்ச்சி உளவியல் பேராசிரியரான மோனிக் போத்தா, “எந்தவொரு காரண தொடர்பும் இருப்பதாகக் கூறுவதற்கு வலுவான ஆதாரங்கள் அல்லது நம்பத்தகுந்த ஆய்வுகள் எதுவும் இல்லை” என்றார்.
பாரசிடமால் எப்படி செயல்படுகிறது?
வலியைக் குறைக்கும் மருந்துகள் (வலி நிவாரணிகள் என்று அழைக்கப்படுகின்றன) ஓபியாய்டுகள் அல்லது ஓபியாய்டுகள் அல்லாதவையாக இருக்கலாம்.
கசகசா செடியிலிருந்து பெறப்பட்ட அல்லது ஆய்வகங்களில் தயாரிக்கப்பட்ட ஓபியாய்டுகள், மூளையில் உள்ள ஓபியாய்டு ஏற்பிகளுடன் இணைந்து, இன்ப உணர்வுகளுடன் தொடர்புடைய ஹார்மோனான டோபமைனை வெளியிட வழிவகுக்கிறது.
ஆனால் இந்த மருந்துகள் மிகவும் போதை தரக்கூடியதாக, அடிமைத்தனத்தை உருவாக்கக் கூடியதாக இருக்கலாம். அதனால்தான் பாராசிடமால் போன்ற ஓபியாய்டு அல்லாத மருந்துகளை கொண்டு வலிக்கு சிகிச்சையளிக்கத் தொடங்குவது நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பாரசிடமால் எவ்வாறு செயல்படுகிறது என்பதில் இன்னும் ஒருமித்த கருத்து இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
“பாரசிடமாலின் செயல்பாட்டு வழிமுறை இன்னும் முழுமையாக தெளிவுபடுத்தப்படவில்லை” என்று பிரிட்டனில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் தசைக்கூட்டு மருத்துவ பேராசிரியர் பிலிப் கோனகன் கூறுகிறார்.
“இது மத்திய நரம்பு மண்டலத்திலும், மூளையிலும் வலி உணர்வில் தாக்கம் செலுத்தும், புறத்தேயும் செயல்படக்கூடும்.” என்றும் கூறுகிறார்.
மூளையில் வலியைக் குறிக்கும் ரசாயன செய்திகளைத் தடுப்பதன் மூலம் பாரசிடமால் செயல்படுகிறது, மேலும் உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது என்று பிரிட்டன் தேசிய சுகாதார சேவை அமைப்பு கூறுகிறது.
சைக்ளோஆக்சிஜனேஸ் (cyclooxygenase)அல்லது சிஓஎக்ஸ் எனப்படும் நொதியைத் தடுப்பதன் மூலம் பாரசிடமால் செயல்படுகிறது என்று நீண்ட காலமாக ஒரு கோட்பாடு உள்ளது. சைக்ளோஆக்சிஜனேஸ் வலியுடன் தொடர்புடைய ஹார்மோன் போன்ற புரோஸ்டாக்லாண்டின்களை உற்பத்தி செய்ய உதவுகிறது.
இப்போது பாராசிடமால் வேறு வழிகளிலும் செயல்படுகிறது என்று கருதப்படுகிறது. எடுத்துக்காட்டாக, இது AM404 என்ற கூட்டுப் பொருளாக மாறி, உடலின் வலி பாதைகளில் தாக்கம் செலுத்துகிறது என்று கூறப்படுகிறது.
நீங்கள் எவ்வளவு பாரசிடமால் எடுத்துக் கொள்ளலாம்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 49,000 டன்னுக்கும் அதிகமான பாரசிடமால் வாங்கப்படுகிறது.
பாரசிடமாலின் பாதுகாப்பான பயன்பாட்டிற்கு அதை எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டுதல்களை கடைப்பிடிப்பது முக்கியம் என்று சுகாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சரியான அளவிலும், குறுகிய காலத்துக்கும் எடுத்துக் கொண்டால் இது அரிதாகவே பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையின் பரிந்துரையின்படி, ஒன்று அல்லது இரண்டு 500mg மாத்திரைகள், 24 மணி நேரத்தில் நான்கு முறை வரை, அதிகபட்சம் 24 மணி நேரத்தில் எட்டு மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம்.
அதே சமயம் இந்த வரம்பை மீறுவது கடுமையான கல்லீரல் பாதிப்பு அல்லது செயலிழப்புக்கு வழிவகுக்கும். ஏனெனில் சுமார் 5% பாராசிடமால் ஒரு நச்சுப் பொருளாக உடலில் மாற்றப்படுகிறது.
அது பென்சோகுவினோன் இமைன், NAPQI என்று அழைக்கப்படுகிறது என்பதையும் தேசிய சுகாதார சேவை கூறுகிறது.
1998 மற்றும் 2003க்கு இடையில் அமெரிக்காவில் கடுமையான கல்லீரல் செயலிழப்புக்கு பாரசிடமாலின் அதிகப்படியான பயன்பாடு முக்கிய காரணம் என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் தரவு காட்டுகிறது.
இதில் பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் அதிக அளவில் பாரசிடமாலை எடுத்துக் கொண்டவர்கள். அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் 600 மருந்துகளில் பாரசிடமால் இருப்பதாக கூறுகிறது.
எனவே காய்ச்சல் உள்ள ஒருவர் தனக்கு வழங்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு மருந்திலும் பாரசிடமால் இருப்பதை உணராமல் பல சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளக்கூடும்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் எடுத்துக் கொள்ளும் பாரசிடமாலின் அளவைப் பற்றி விழிப்புடன் இருக்க நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்,
குறிப்பாக பள்ளிகளிலும், தாத்தா பாட்டியிடமும் பின்னர் பெற்றோரிடமும் என ஒரு நாளிலேயே பல பராமரிப்பாளர்களிடையே வளரும் குழந்தைகள் பற்றி கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர்.
பாரசிடமாலின் செயல்திறன்
வலி மற்றும் லேசான அல்லது மிதமான காய்ச்சலுக்கான முதல் நிலை சிகிச்சையாக பாரசிடமாலை உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது.
இது வேலை செய்யவில்லை என்றால், நோயாளிகள் வலி மேலாண்மைக்கான சிகிச்சையில் அடுத்ததாக பலவீனமான ஓபியாய்டுகள், பின்னர் வலுவான ஓபியாய்டுகள், மற்றும் தேவைப்பட்டால் இறுதியில் சிறப்பு சிகிச்சைகளுக்கு செல்லலாம்.
வலியின் வகையைப் பொறுத்து பாராசிடமாலின் செயல்திறன் மாறுபடும்.
இதுவரை வெளியாகியுள்ள ஆய்வுகளை மதிப்பாய்வு செய்து பகுப்பாய்வு செய்யும் பிரிட்டனை தளமாகக் கொண்ட காக்ரேன் நிறுவனம், கடுமையான ஒற்றைத் தலைவலி மற்றும் மகப்பேறு, அறுவை சிகிச்சைக்குப் பிறகான வலியை நிர்வகிப்பதில் பாரசிடமால் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறுகிறது.
இருப்பினும், நாள்பட்ட மூட்டு வலி போன்ற நிலைமைகளுக்கு அதன் பலன்கள் “மிதமானவை” என்று கருதப்படுகின்றன.
புற்றுநோயுடன் தொடர்புடைய இடுப்புவலி அல்லது உடல் அசௌகரியத்திற்கு, பாரசிடாமல் எந்த நிவாரணத்தையும் வழங்கவில்லை என்று காக்ரேன் நிறுவனம் கூறுகிறது.