பட மூலாதாரம், Getty Images
திங்கட்கிழமை இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் பங்குச்சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்தன.
உலகம் முழுக்க, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு, ஏப்ரல் 2ம் தேதி இறக்குமதி வரி அறிவித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
இந்த அறிவிப்பு உலகெங்கும் இருக்கும் பங்குச் சந்தைகளில் பெரிய விளைவை ஏற்படுத்தியது. இன்று, அந்த இறக்குமதி வரிகளின் விளைவால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் பங்குச்சந்தைகள் சரிவைச் சந்தித்தன.
டிரம்பின் அறிவிப்புக்குப் பிறகு முதலீட்டாளர்கள் ஒவ்வொரு நிமிடமும் பல லட்சம் கோடி ரூபாயை இழந்து வருகிறார்கள். இது எவ்வளவு காலம் தொடரும் என்பது உறுதியாகத் தெரியவில்லை.
இது பொருளாதார மந்தநிலையை உருவாக்கும் என்று சில நிபுணர்கள் கணிக்கின்றனர்.
அமெரிக்க பங்கு சந்தை ஐந்து முதல் ஆறு சதவிகிதம் வரை சரிந்தபிறகு, ஆசிய பங்குச் சந்தைகளும் இன்று பெரும் சரிவைக் கண்டன.
இந்தியாவுக்கு இன்று கறுப்பு திங்கள். மும்பை பங்குச்சந்தையும், தேசிய பங்குச்சந்தையும் நான்குக்கும் அதிகமான சதவிகிதம் சரிந்ததில் முதலீட்டாளர்கள் சுமார் 19 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளனர்.
அடுத்த 30 நாட்களில் சந்தையின் நிச்சயமற்ற தன்மை இன்னும் அதிகரிக்கும் என்று முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.
2008 பிரச்னைகளின் நினைவுகளை மீண்டும் கொண்டு வருகின்றன
பட மூலாதாரம், Reuters
2008 சப்ப்ரைம் வீட்டுக்கடன் நெருக்கடிக்குப் பிறகு பங்குச்சந்தை சந்திக்கும் மிகப்பெரிய சரிவு இதுதான்.
ப்ளூம்பர்க் செய்தியின்படி ஆசியப் பங்குச் சந்தைகள் கடந்த 16 ஆண்டுகளில் சந்தித்த மிகப் பெரிய சரிவு இது.
இதற்கிடையே இந்த இறக்குமதி வரிப்போரைத் தொடங்கிய டொனால்ட் டிரம்போ பின்வாங்கும் மனநிலையில் இல்லை. ”நோயைத் தீர்க்க கசப்பு மருந்தை விழுங்குவது அவசியம்,” என்று கூறியிருக்கிறார்.
டிரம்பின் இந்த கருத்துக்கு பிறகு பங்குச்சந்தை மேலும் வேகமாகச் சரிந்தது.
டொனால்ட் டிரம்பின் இறக்குமதி வரிகளுக்குப் பிறகு இந்திய நிறுவனங்கள் இன்னும் பலமான அடி வாங்கியிருக்கின்றன.
பிரிட்டனை தளமாக கொண்ட ஜாகுவார் லேண்ட் ரோவர் அமெரிக்காவுக்கு ஏப்ரலில் வாகனங்களை ஏற்றுமதி செய்ய வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறது.
இதனால் அதன் தாய் நிறுவனமான டாட்டா மோட்டார்ஸின் பங்கு இன்று பத்து சதவிகிதம் சரிந்துள்ளது. அந்நிய வாகனங்களுக்கு டிரம்ப் 25 சதவிகிதம் இறக்குமதி வரி விதித்ததற்கான விளைவு இது.
அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்படலாம் என்ற கணிப்பு அனைத்து ப்ளூ சிப் நிறுவனங்களின்(பெரிய நிலையான நிறுவனங்கள்) பங்குகளையும் பாதித்துள்ளன.
இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸின் பங்குகள் இன்று சந்தை தொடங்கியதில் இருந்து ஏழு சதவிகிதத்துக்கும் அதிகமாக விழுந்தது. கடந்த 52 வாரங்களில் மிகக்குறைந்த மதிப்புக்குச் சென்றது. கிட்டத்தட்ட ரிலையன்ஸின் சந்தை முதலீட்டில் 2.26 லட்சம் கோடிகளை அழித்துள்ளது இந்த சரிவு.
பங்குச்சந்தை எந்தப்பக்கம் செல்லும்?
பட மூலாதாரம், Getty Images
குஜராத்தை சேர்ந்த பங்குச்சந்தை வர்த்தக நிறுவனம் ஒன்றின் தலைவரான குஞ்சன் சோக்ஸி பிபிசியிடம் பேசியபோது, “அமெரிக்காவை கொசு கடித்தால் இந்தியாவுக்கு மலேரியா வரும் சூழல் இது. ஏனெனில் இந்த மொத்த உலகமும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளது,” என்றார்.
”1930களில் அமெரிக்கா இதுபோன்ற ஒரு முடிவை எடுத்தது பெரும் பொருளாதார மந்தநிலைக்குத் தள்ளியது. இப்படிப்பட்ட சூழலில் என்ன செய்வது என்று நம்மை வழிநடத்த அந்தக் காலத்தைச் சேர்ந்த எந்த நிதி மேலாளரோ, சந்தையில் ஈடுபட்டவரோ, பொருளாதார நிபுணரோ இப்போது இல்லை” என்றார்.
”’டிரம்பின் இறக்குமதி வரிப்போர் இப்போது அதன் நான்காவது நிலையில் நுழைந்துள்ளது. தேர்தலின்போது இறக்குமதி வரியை அதிகரிக்கப்போவதாக அவர் எச்சரிக்கை செய்தது போரின் முதல்நிலை. தேர்தலில் வென்றபிறகு பிறகு செலவைக் குறைத்து அமெரிக்காவுக்கு மொத்த தயாரிப்பையும் கொண்டு செல்வது குறித்து அடுத்து பேசினார்
மூன்றாவது நிலையில் , இறக்குமதி வரிகளையும், அதன் பிறகு பரஸ்பர வரிகளையும் அறிவித்தார். இதற்கு சீனாவும் இறக்குமதி வரி விதித்து பதிலளித்தது. ஐரோப்பிய ஒன்றியமும் அதையே செய்யும். இப்போது சூழல் என்னவென்றால் டொனால்ட் டிரம்ப் பின் வாங்கவில்லையென்றால் நான்காவது நிலையில் மிக ஆபத்தான நிலை உருவாகும்.”என்கிறார் அவர்
பங்குச்சந்தை எந்த திசையை நோக்கிச் செல்லும் என்று கணிப்பது இப்போது அனைவருக்குமே சிரமமான ஒன்றாக இருக்கிறது.
“அதிகப்படிய நிலையற்றதன்மையால் உலக பங்குச்சந்தைகள் தீவிர ஏற்ற இறக்கத்தைக் காணும் காலமிது. டிரம்பின் இறக்குமதி வரிகளால் என்ன சூழல் ஏற்படும் என்று யாருக்கும் தெரியாது,” என்று ஒரு குறிப்பில் கூறியுள்ளார் ஜியோஜித் ஃபைனான்சியல் சர்வீசஸின் தலைமை முதலீட்டு உத்தியாளர் முனைவர் வி.கே.விஜயகுமார்.
அமெரிக்காவின் கடன் மிக அதிகமாக இருப்பதால் அதன் அதிபர் இப்படி ஒரு முடிவு எடுக்க வேண்டி வந்தது என்று குஞ்சன் சோக்ஸி நம்புகிறார்.
“கடந்த 20 வருடங்களாக புதிய டாலர் நோட்டுக்களை அச்சடிப்பதன் மூலம் திவாலாகும் நிலையைத் தவிர்த்து வந்தது அமெரிக்கா. இப்போது அதன் வரம்பை எட்டிவிட்டது. எனவே இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் டிரம்புக்கு வந்துள்ளது.” என்கிறார் அவர்
கடந்த காலங்களிலும் அமெரிக்கா அதிக இறக்குமதி வரி விதித்ததற்குப் பின்னான காலகட்டங்களில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது என்று கோட்டக் ஏஎம்சியின் நிர்வாக இயக்குனர் நிலேஷ் ஷா ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
2008 பொருளாதார நெருக்கடியுடனும், கோவிட் -19 பொருளாதார மந்தநிலையுடனும் இதனை ஒப்பிட்ட அவர், இந்தியா பாதிக்கப்படாது என்று நம்பினால் அது தவறு என்றார்.
பட மூலாதாரம், Getty Images
பங்குச்சந்தைகளை பாதிக்கும் மற்ற காரணிகள்
டிரம்ப் நிர்வாகம் 180க்கும் அதிகமான நாடுகளின் மீது பெரிய வரிகளை விதித்துள்ளது, சந்தையில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள்.
இந்திய பங்குச்சந்தை 2026ம் வருட முதல் காலாண்டில் மேலும் சரியும் என்று பங்கு வர்த்தக நிறுவனங்கள் நம்புகின்றன. எம்கே குளோபலின் மதிப்பீட்டின்படி நிஃப்டி குறியீடு தற்போதைய 22000 புள்ளிகளில் இருந்து 21500 புள்ளிகள் வரை குறையக்கூடும்.
நிதி சேவை நிறுவனமான ஜே.பி.மார்கனின் கணிப்புப்படி அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள், இப்போது 40 சதவீதத்திலிருந்து 60 சதவிகிதமாக அதிகரித்துள்ளன.
இதற்கிடையில் மார்ச் மாதத்தில் இந்திய சந்தையில் இருந்து பங்குகளை வாங்கிய வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஏப்ரல் மாதத்தில் இந்தியப் பங்குகளை விற்கத் தொடங்கியுள்ளனர். வெள்ளிக்கிழமை வரை சுமார் 13,700 கோடிக்கு மேற்பட்ட பங்குகள் விற்கப்பட்டுள்ளன. இந்தக் காரணங்கள் அனைத்துமே சந்தை சரிவதற்கான காரணிகள் ஆகும்.
பட மூலாதாரம், EPA-EFE/REX/Shutterstock
இந்தியாவில் இதன் பாதிப்பு எவ்வளவு இருக்கும்?
இந்தியாவையும், அமெரிக்காவையும் பொருளாதார மந்தநிலை பலமாகத் தாக்கும் என்று எல்லா நிபுணர்களும் நம்பத் தயாராக இல்லை.
“இந்தியா அமெரிக்காவுடன் அதிகம் வணிகம் செய்வதில்லை. அதோடு, உள் நாட்டில் இருக்கும் தேவைகளே நமது பொருளாதாரத்துக்கு ஆதரவு கொடுக்கப் போதுமானது. இந்த இறக்குமதி வரிப்போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா குறைந்த அளவே பாதிக்கப்பட்டுள்ளது,” என்று பிபிசியிடம் குறிப்பிட்டார் பங்குச்சந்தை ஆய்வாளர் அசிம் மேத்தா.
“இறக்குமதி வரி அறிவிப்புக்குப் பிறகு கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள விஷயம் இந்தியாவுக்கு நல்லது. வரும் நாட்களில் இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்க வாய்ப்பிருக்கிறது. அதோடு கட்டுமானத்தில் இந்திய அரசு ஆக்ரோஷமாகச் செலவழித்தால் இறக்குமதி வரிப்போரின் விளைவைத் தவிர்க்கலாம்” என்றார்
பொருளாதார மந்த நிலை பற்றிக் கேட்டபோது அஸிம் மேத்தா, ”பொருளாதார மந்தநிலை என்பது மிகக் கடுமையான வார்த்தை. ஒரு மூன்று நான்கு மாதங்களுக்குத் தேக்கம் இருக்கும் என்று சொல்லலாம். ஆனால் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்று நான் நம்பவில்லை,” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.